உண்மை சரிபார்ப்பு: தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனையா?
ஆன்லைன் மூலம் மதுபானத்தை ஆர்டர் செய்யலாம் என பரவும் காணொளி கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட வீடியோ என கண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டு உபயோக பொருள்கள் தொடங்கி எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் வரை ஐந்து நிமிடங்களில் டெலிவரி செய்து வருகிறது ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள். ஸ்விகி, சொமேட்டோ போன்ற உணவு விநியோகிக்கும் தளங்கள் ஒரு பக்கமும், பிளிங்கிட், செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்கள் மற்றொருபுறம் என வேண்டிய பொருள்களை ஐந்து முதல் பத்தே நிமிடங்களில் நம் வீட்டு வாசலிலே கொண்டுவந்து சேர்க்கின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் உயிர்பெற்ற இந்த சேவைகள் வாயிலாக, மதுபானங்களையும் ஆன்லைன் டெலிவரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பெரிதாக எழத் தொடங்கியது. ஆனால், இது தொடர்பாக அரசுகள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அந்த நேரத்தில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அசாம் போன்ற சில மாநிலங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் டெலிவரி அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கு வங்கம், ஒடிசா மாநில அரசுகள், மதுபானத்தை ஆன்லைன் டெலிவரி செய்ய அனுமதி வழங்கியது. இந்நிலையில், ‘சரக்கு வாங்க ஆப்’ என்ற தலைப்பில் தமிழ் வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், இனி டாஸ்மாக் சென்று சரக்கு வாங்க வேண்டியது இல்லை எனவும், அதை எப்படி ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்வது என்பது குறித்தும் ஒருவர் விளக்குவது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் பதிவின் இணைப்பு இங்கே உள்ளது.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்ற முடிவுகளை தனியார் நிறுவனங்கள் எடுத்துவிட முடியாது. இதற்கு முறையான அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல், இது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே ஆன்லைன் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்ய முடியும். எனவே, அரசு இதுபோன்ற அறிவிப்பு ஏதேனும் வெளியிட்டுள்ளதா என்பதை அறிய, ‘Online liquor delivery in Tamil Nadu’ என ஆங்கிலத்திலும், ஆன்லைன் மதுபான விற்பனை எனத் தமிழிலும் தேடினோம். கூகுள் முடிவுகளில், சன் நியூஸ் செய்திகளின் யூடியூப் வீடியோ இணைப்பு ஒன்று காட்டப்பட்டது.
ஜூலை 17, 2024 அன்று வெளியிடப்பட்டுள்ள அந்த காணொளியில், “ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் வாயிலாக மதுபானங்களை வீடுகளுக்கே டெலிவரி செய்ய ஆலோசிக்கப்படுவதாக பரவும் செய்தியில் உண்மை இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது,” என்று கூறப்பட்டிருந்தது. மேலும், கர்நாடகா, கோவா, கேரளா போன்ற சில மாநிலங்கள் இது தொடர்பாக ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், தமிழ்நாடு அரசு இது தொடர்பாக யோசிக்கவே இல்லை எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சற்று பழைய செய்தி என்பதால், இந்த விவகாரம் தொடர்பாக புதிதாக அரசு ஏதேனும் விளக்கம் அளித்துள்ளதா எனத் தேடினோம். அப்போது, தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு (TN Fact Check), இது பொய்யானத் தகவல் என வீடியோ வெளியிட்டிருந்தது. பிப்ரவரி 25, 2025 அன்று வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், தனியார் செயலி மூலம் மது விற்பனை என்று பரவும் காணொளி வதந்தியே எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அந்த வீடியோவில், தமிழ்நாட்டில் தனியார் நிறுவனத்தின் செயலியின் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே மதுவைக் கொண்டு வந்து டெலிவரி செய்வதாக இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு காணொளி பரப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுபானங்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் நடைமுறைக்கு அனுமதியில்லை. இக்காணொளியில் வரும் செயலி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட காணொளியை தமிழ்நாடு என்று வதந்தி பரப்பி வருகின்றனர். வதந்தியைப் பரப்பாதீர்,” என பதிவு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் குழு வெளியிட்ட அந்த காணொளியைக் கீழே காணலாம்.
அந்தவகையில், கொல்கத்தாவில் யாரேனும் இந்த செயலி வாயிலாக மதுபானங்கள் ஆர்டர் செய்துள்ளனரா என்பதை தேடும்போது, யூடியூப் ஷார்ட்ஸ் காணொளி ஒன்று கிடைத்தது. இந்தி மொழியில் இருக்கும் அந்த விளக்க காணொளியில், இதே செயலி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. அந்த ஷார்ட்ஸ் வீடியோவை கீழே காணலாம்.
முடிவு:
தமிழ்நாட்டில் தனியார் நிறுவன செயலி வாயிலாக வீடுகளுக்கு மதுபான செய்யப்படும் என்று உலாவரும் செயலி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மட்டுமே நடைமுறையில் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வாயிலாக தமிழ்நாட்டில் ஆன்லைன் வாயிலாக மதுபானங்களை வாங்கலாம் எனப் பரவும் காணொளி வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
Claim : ஆன்லைன் மூலம் மதுபானத்தை ஆர்டர் செய்யலாம் என பரவும் காணொளி.
Claimed By : Social Media Users
Fact Check : Unknown