தமிழகத்தில் மழையில் பெயர்ந்த சாலை என பரவும் புகைப்படம் : உண்மை என்ன?
தமிழகத்தில் பெய்த மழையில் சாலை பெயர்ந்து சென்றுவிட்டதாக புகைப்படம் வைரலாகும் நிலையில், அது தவறான தகவல் என நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் மூலமாக வைரலாகும் புகைப்படத்திற்கும் தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.தமிழ்நாட்டிற்கு அதிக அளவு மழையைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மத்தியில் தொடங்கியது. கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உண்டானது. மழை சமயத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதே சமயம் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றன. குறிப்பாக சில நாட்கள் மழைக்கு சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. பருவமழை, சாலையில் தண்ணீர் தேங்குவது, மோசமான சாலை தொடர்பாக பல்வேறு தவறான தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பரவும் தகவல்
மழை பெய்த காரணத்தால் தமிழகத்தில் உள்ள சாலை அடியோடு பெயர்ந்து சென்று விட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சாலையில் இருந்த தார் மட்டும் தனியாக பெயர்ந்து அருகில் கிடக்கிறது.
வைரல் புகைப்படத்தை பகிர்ந்த K Panbarasu என்ற பேஸ்புக் பயனர், “மழை பெய்தால் ரோடு வழுக்கி பாத்துருப்பிங்க... ஆனா ரோடே வழுக்கிட்டு போய் பார்த்திருக்கீங்களா... #திராவிஷ_மாடல்” என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த பதிவுக்கு 875 லைக், 602 ஷேர்களைப் பெற்றிருந்தது.
@Siripriya2024 என்ற எக்ஸ் பதிவர், “விடியல் ஆட்சியில் தமிழக மக்களின் தலை விதி இந்த சாலைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. தீய சக்தி திமுகவிடம் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை_மீட்போம்” என்று பதிவிட்டு இருந்தார்.
விடியல் ஆட்சியில் தமிழக மக்களின் தலை விதி இந்த சாலைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது
— Siripriya (இலையின் தோழி) (@Siripriya2024) October 28, 2025
தீய சக்தி திமுகவிடம் இருந்து #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #ByeByeStalin pic.twitter.com/SYXRmznkAt
மேலும் பதிவு 1, பதிவு 2 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் இதே கருத்துடன் புகைப்படம் பகிரப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது தமிழ்நாட்டுடன் தொடர்புடைய புகைப்படம் அல்ல என்பதும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அது வைரலாகி வருவதும் தெரியவந்தது.
வைரல் புகைப்படம் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், கூகுள் லென்ஸில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு அதனை நாம் உட்படுத்தினோம். அதில் வைரல் புகைப்படம் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே வைரலானதை கண்டுபிடித்தோம்.
மலேசியாவைச் சேர்ந்த LANDO Zawawi - Brotherhood Malaysia என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த முகநூல் பக்கம் சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடியது.
இதனைத் தொடர்ந்து நமது தேடலில் வைரல் புகைப்படம் பல்வேறு சமயங்களில் பல்வேறு நாடுகள், மாநிலங்களில் வைரலாகியுள்ளதையும், அதனை உண்மை சரிபார்ப்பு தளங்கள் கண்டுபிடித்துள்ளதையும் தெரிந்துகொண்டோம். வங்க தேசத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு என வைரலான இந்த புகைப்படம் குறித்து altnews உண்மை சரிபார்ப்பு செய்துள்ளது.
அதில், “இந்தப் படத்தின் சூழலையும் தோற்றத்தையும் எங்களால் நிறுவ முடியவில்லை என்றாலும், மலேசியாவை மையமாகக் கொண்ட பேஸ்புக் பக்கங்களால் சமூக ஊடகங்களில் முதன்முதலில் பகிரப்பட்டதால், இது சமீபத்தில் வங்க தேசத்தில் ஏற்பட்ட ஆம்பன் சூறாவளியுடன் தொடர்பில்லாதது” என்று நிறுவியுள்ளது.
இதேபோல தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிகாலத்தில் போடப்பட்ட சாலை என்று 2020ஆம் ஆண்டே புகைப்படம் வைரலாக, அந்த சமயத்திலேயே factcrescendo tamil உண்மை சரிபார்ப்பு செய்து அது தவறான தகவல் என்று நிறுவியுள்ளது.
மேலும் நமது தேடலில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகமும், “மழையில் பெயர்ந்த சாலை: தமிழ்நாடு என்று பரவும் வதந்தி” என்று வைரலாகும் புகைப்படம் தவறானது என்று விளக்கம் அளித்துள்ளது.
மழையில் பெயர்ந்த சாலை:
— TN Fact Check (@tn_factcheck) October 29,
தமிழ்நாடு என்று பரவும் வதந்தி!@CMOTamilnadu | @TNDIPRNEWS
இந்த ஆதாரங்கள் மூலமாக வைரலாகும் புகைப்படத்திற்கும் தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
மழையில் பெயர்ந்த சாலை என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆறு ஆண்டுகளாக அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது என்பது ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. ஆகவே, தகவல்களை பகிரும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து பகிரும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு வாசகர்களை கேட்டுக்கொள்கிறது.