கன்னியாகுமரியில் மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதாக பரவும் வீடியோ - உண்மை இதுதான்

கன்னியாகுமரியில் மலைப்பாம்பு சாலையில் ஊர்ந்து செல்வதாக தவறான தகவலுடன் வீடியோ வைரலாகிறது.

Update: 2025-11-26 15:32 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக் காலம் என்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. தமிழகத்தில் உள்ள மலைகளில் ஏராளமான வகையான மலைப்பாம்புகள் உள்ளன. அவை மழைக் காலங்களில் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் கடந்த காலங்களில் வைரலாகியுள்ளன. ஆனால், மலைப் பாம்புகள் தொடர்பாக அச்சமூட்டும் காணொலிகளும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

பரவும் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பாம்பு சாலையில் ஊர்ந்து செல்வதாகவும், அந்த வழியாக செல்லும் மக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் இரவு நேரத்தில் மலைப் பாம்பு ஒன்று சாலையை மிக மெதுவாக கடந்து செல்வதை காண முடிந்தது.

வீடியோவைப் பகிர்ந்த Ambai Kumar என்ற எக்ஸ் பதிவர், “இரவு நேரங்களில் கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளம் சாலையியில் செல்லும் போது கவனத்துடன் செல்லவும்” என்று பதிவிட்டு இருந்தார்.

Full View


வாகன ஓட்டிகள் மெதுவாக கவனமுடன் செல்ல வேண்டும் என்ற ரீதியில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவிடப்பட்டு இருந்தது. பதிவு 1, பதிவு 2



இது உண்மை என நம்பி வீடியோவை பலரும் தங்களது பக்கத்தில் பகிரத் தொடங்கினர்.

உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது பழைய வீடியோ என்பதும், அண்டை மாநிலங்களில் வைரலானதும் தெரியவந்தது.

முதலில் வைரல் வீடியோவை புகைப்படங்களாக பிரித்து எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடலில் ஈடுபட்டோம். அதில் வீடியோ 2022ஆம் ஆண்டே செய்தி ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்தது. 2022 மார்ச் 6ஆம் தேதி ஈடிவி பாரத் இணையதளம் வெளியிட்ட செய்தியில், “கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டம், கார்வார் நகருக்கு அருகிலுள்ள ஹனகோனா கிராமத்தில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டது. உள்ளூர்வாசிகள் மலைப்பாம்பின் வீடியோவை பதிவு செய்தனர், இது இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் 2022 மார்ச் 20ஆம் தேதி வெளியிட்ட வீடியோ செய்தியில், “கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சாலையைக் கடக்கும் ஒரு பெரிய பாம்பு காணப்பட்டது. அந்தப் பாம்பு ஒரு தெருவைக் கடக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, மேலும் பலர் அதை 'அனகொண்டா' என்று அழைத்தனர். இருப்பினும், அனகொண்டாக்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.




சுசந்தா நந்தா என்ற ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரியும் வைரல் வீடியோவை 2022 மார்ச் 5ஆம் தேதி பகிர்ந்து, “பாம்பு உள்ளிட்ட காட்டு விலங்குகளுக்கு எப்போதும் வழி உரிமை உண்டு. தயவுசெய்து அவற்றுக்குப் பாதுகாப்பான பாதையை அமைத்துக் கொடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல கன்னியாகுமரியில் மலைப்பாம்பு தகவல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட விளக்கத்தில், “இந்தக் காணொளி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. கடந்த 2022 ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் ராட்சத பாம்பு சாலையைக் கடந்து செல்வதாகக் குறிப்பிட்டு இதே காணொளியைத் தனியார் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதை கன்னியாகுமரி என்று திரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். தவறான தகவலை நம்பாதீர்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வைரல் வீடியோவின் உண்மையான நிகழ்விடம் எது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், அது கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டது அல்ல என்பதும், 2022ஆம் ஆண்டு முதலே வைரலாகி வருவதும் தெரியவந்தது.

முடிவு

கன்னியாகுமரியில் மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதாக சமூக வலைதளங்களில் தவறான தகவலுடன் வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. வைரல் வீடியோ 2022ஆம் ஆண்டு முதல் பரவி வருவதோடு, தமிழ்நாட்டிற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை ஆராய்ந்து பகிருமாறு வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  கன்னியாகுமரி சாலையில் ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு என பரவும் வீடியோ
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News