கே.என்.நேரு மகன் நிர்மலா சீதாராமன் காலில் விழுந்தாரா? - உண்மை இதுதான்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலில் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு விழுந்ததாக போலி புகைப்படம் பரவி வருகிறது
தமிழகத்தின் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராகவும், திமுக முதன்மைச் செயலாளராகவும் இருப்பவர் கே.என்.நேரு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1020 கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத் துறை அண்மையில் தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியது. இந்த சூழலில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பெரம்பலூர் தொகுதி எம்.பியும், கே.என்.நேரு மகனுமான அருண் நேரு டிசம்பர் 9ஆம் தேதி நேரில் சந்தித்துப் பேசினார். கே.என்.நேருக்கு அமலாக்கத் துறை நெருக்கடி அளிக்கும் நேரத்தில் நிர்மலா சீதாராமனை அருண் நேரு சந்தித்தது பேசுபொருளாக மாறியது.
பரவும் தகவல்
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து கே.என்.நேருவைக் காப்பாற்றக் கோரி நிர்மலா சீதாராமன் காலில் அருண் நேரு விழுந்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அருண் நேரு காலில் விழும் புகைப்படத்தை பகிர்ந்த ஆறுமுகம் என்ற எக்ஸ் பதிவர், “எங்கெங்கோ தேடிய பகுத்தறிவு பர்பியை கடைசியில் கண்டுபிடித்தார் கே.என்.நேரு மகன் அருண் நேரு.. விஜய நகர் பாரம்பரியம்” என்று விமர்சனம் செய்தார். இந்த பதிவை 21 ஆயிரம் பேர் வரை பார்த்திருந்தனர்.
@volfo4Thamil என்ற எக்ஸ் பக்கத்தில், “எங்கப்பனையும் என்னையும் எப்படியாவது காப்பாத்துங்க மா - அருண் நேரு” என்று கேலியாக பதிவிடப்பட்டு புகைப்படம் பகிரப்பட்டது.
மேலும் பதிவு 1, பதிவு 2 ஆகிய லிங்குகளிலும் வைரல் புகைப்படம் அதே கருத்துடன் பகிரப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை TeluguPost உண்மைக் கண்டறியும் குழு சரிபார்த்ததில் அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.
முதலில் சந்திப்பு தொடர்பாக நிதித்துறை அமைச்சர் ஏதேனும் பதிவிட்டுள்ளாரா என்பது குறித்து பார்த்தோம். நிர்மலா சீதாராமன் அலுவலக எக்ஸ் பக்கத்தில், “நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு நாடாளுமன்ற வளாகத்தில் நிதியமைச்சரை சந்தித்தார்” என்று குறிப்பிடப்பட்டு ஒரு புகைப்படம் பதிவிடப்பட்டு இருந்தது.
Shri Arun Nehru (@ArunNehru_DMK), Hon'ble MP (LS), calls on Smt @nsitharaman at Parliament House. pic.twitter.com/dCtqwf6Uz2
இதேபோல அருண் நேருவும் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லியில், பொதுமக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் இரண்டு முக்கிய பிரச்சனைகளை வலியுறுத்துவதற்காக நிதியமைச்சரைச் சந்தித்தேன்” என்று குறிப்பிட்டு புகைப்படம் பகிர்ந்துள்ளார். வைரல் புகைப்படத்தை ஒத்தே அந்த புகைப்படம் இருந்தாலும், காலில் விழுவது போல இல்லை.
இதனையடுத்து காலில் விழுவது போன்ற வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் தேடியபோது அதிமுக நிர்வாகியான வினோத்குமார் கந்தசாமி என்பவர் வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. 6 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமன் காலில் அருண் நேரு விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதே சமயம் காலில் விழும் சமயத்தில் நிர்மலா சீதாராமன் உருவம் தெளிவற்றதாகவும், வேறு விதமாக மாறுவதையும் கவனிக்க முடிந்தது. குறிப்பாக வீடியோவின் ஒரு பகுதியில் Create your own with Grok என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. அதாவது, இந்த வீடியோ Grok மூலம் உருவாக்கப்பட்டது என்பது அதன் பொருள். ஆக, அதைத்தான் ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து புகைப்படமாக பகிருகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டோம்.
ஏஐ புகைப்படமாக என்பதை உறுதி செய்வதற்காக SightEngine என்ற ஏஐ சரிபார்ப்பு தளத்தில் சரிபார்த்தபோது அது 86 சதவீதம் ஏஐஆக இருக்க வாய்ப்புள்ளதாக முடிவைத் தந்தது.
மேலும் நமது தேடலில் மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ போலியானது என விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. அதில், “புழக்கத்தில் உள்ள காணொளி #போலியானது மற்றும் மத்திய நிதியமைச்சரை தவறாக சித்தரிக்க AI கருவிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலில் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு விழுந்ததாக பரவும் புகைப்படம் போலியானது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் தவறான கருத்துடன் பகிரப்பட்டு வருவது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.