ராஜ்நாத் காலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விழுந்து வணங்கினாரா? - உண்மை இதுதான்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் திரவுபதி முர்மு விழுந்து வணங்கியதாக பரவும் வீடியோ ஏஐ மூலம் போலியாக உருவாக்கப்பட்டது.

Update: 2025-11-26 07:36 GMT

நாட்டின் குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு 2022ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வருகிறார். முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமைகளையும் பெற்றுள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த திரவுபதி முர்மு பாஜகவின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2015 முதல் 2021 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தார்.

அதே சமயம் குடியரசுத் தலைவருக்கு மத்திய பாஜக அரசு உரிய மரியாதை அளிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக நாடாளுமன்ற புதிய கட்டடத்தை மரபுப்படி குடியரசுத் தலைவர் திறக்காமல் பிரதமர் மோடி திறந்துவைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

பரவும் தகவல்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் விழுந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வணங்கியதாக ஒரு வீடியோ / புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனைப் பகிர்ந்து பலரும் பாஜகவில் சமூக நீதி இல்லை என  விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

VG Kumar என்ற பேஸ்புக் பயனர் வெளியிட்ட வைரல் வீடியோவில், “இந்திய ஜனாதிபதியின் அவலநிலையைப் பாருங்கள். எங்கே சமூக நீதி?” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Full View

குடியரசுத் தலைவர் தொடர்பான வைரல் வீடியோவை பதிவு 1, பதிவு 2 ஆகியவற்றிலும் காணலாம். 


உண்மை சரிபார்ப்பு

இந்திய நாட்டின் முதல் குடிமகள் திரவுபதி முர்மு என்பதோடு, பிரதமர் உள்பட மற்றவர்கள் தான் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது மரபு. இதனால் ராஜ்நாத் சிங் காலில் குடியரசுத் தலைவர் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார் என்பது நம்பும்படியாக இல்லை. இதனையடுத்து, வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், வைரல் வீடியோ போலியானது, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

முதலில் வைரல் வீடியோவை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் தேடினோம். தி இந்து இணையதளத்தில் 2025 ஜூன் 25ஆம் தேதி வெளியான கட்டுரை கிடைத்தது. அதில், “பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜூன் 23ம் தேதி புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் "சிறகுகள் நம் நம்பிக்கைகள்" புத்தகத்தின் இரண்டாவது தொகுதியின் முதல் பிரதியை வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இதுதொடர்பாக மத்திய அரசின் பிஐபி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது பதவிக்காலத்தின் 2வது ஆண்டில் ஆற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆகவே, பரவி வருவது நூல் வெளியீட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெளிவானது.


நூல் வெளியீட்டின்போது என்ன நடந்தது என்பதைய அறிய நமது தேடலில் President of India யூட்யூப் பக்கத்தில் 2025 ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட முழு வீடியோ, எக்ஸ் பக்கத்தில் வெளியான புகைப்படங்களை பார்த்தோம். அதில் ராஜ்நாத் சிங்கிடம் குடியரசுத் தலைவர் ஆசிர்வாதம் பெறுவது போன்ற எந்த காட்சிகளும் இல்லை. மாறாக குடியரசுத் தலைவரிடம் நூலை ராஜ்நாத் சிங் அளிக்கிறார். பிறகு அனைவரும் அங்கு அமர்ந்து உரையாடுவது போலவே காட்சிகள் இடம்பெற்றிருந்தன.



 ஆகவே, வைரல் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து, வைரல் வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை புகைப்படமாக மாற்றி ஏஐ சரிபார்ப்பு தளமான decopy ai இணையதளத்தில் பதிவேற்றினோம். அதில், புகைப்படம் 100 சதவிகிதம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று முடிவைத் தந்தது.


இந்த ஆதாரங்கள் மூலம் குடியரசுத் தலைவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை, ஏஐ மூலம் போலியாக வீடியோவாக உருவாக்கி வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

முடிவு

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவதாக வைரலாகும் வீடியோ போலியானது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு தவறான தகவலுடன் பகிரப்பட்டு வருகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  ராஜ்நாத் சிங் காலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விழுந்ததாக பரவும் வீடியோ
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News