துரந்தர் -2 வெளியீட்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் உளவாளி சோதனை என பரவும் வீடியோ - உண்மை இதுதான்
துரந்தர் -2 வெளியீட்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் உளவாளி சோதனை என தவறான தகவலுடன் வீடியோ பரவுகிறது
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் துரந்தர் 2 திரைப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் மார்ச் 19ஆம் தேதியன்று வெளியானது. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான துரந்தர் பாகம் ஒன்றின் தொடர்ச்சிதான் இந்த திரைப்படம். பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் இந்திய உளவாளி ஹம்சா அலி மசாரி என்ற பெயரில் நிழல் உலக தாதாவாக மாறி, பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை உள்ளிருந்தே அழிக்கும் அதிரடி உளவாளி கதையாகும்.
இது வெளியான நாளில் இருந்து இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் புரிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் உள்ளிட்டோர் துரந்தர் - 2 திரைப்படத்தை பாராட்டியும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
பரவும் தகவல்
துரந்தர் 2 திரைப்படம் எதிரொலியாக பாகிஸ்தானில் இந்திய உளவாளிகளின் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் சாலையோரம் படுத்திருக்கும் பிச்சைக்காரர் ஒருவரை எழுப்பி அவரிடம் சோதனை நடத்துவது போல காட்சிகள் உள்ளன.
வீடியோவை பகிர்ந்த @JaiRam92739628 என்ற எக்ஸ் பதிவர், “துரந்தர் படம் வந்ததிலிருந்து பாகிஸ்தானில் பீதி
தெருவில் படுத்து கிடக்கின்ற பிச்சைக்காரனை எல்லாம் உளவாளின்னு சோதனை போட ஆரம்பிச்சுட்டான். இடம் கராச்சி” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதே கருத்துடன் பதிவிடப்பட்ட மேலும் இரண்டு பதிவுகளையும் பதிவு 1, பதிவு 2 ஆகியவற்றையும் காணலாம்
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. 2025 டிசம்பர் மாதம் வெளியான வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.
முதலில் வைரல் வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் வைரல் வீடியோ kawishparekh என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2025 டிசம்பர் மாதம் 26ஆம் தேதி வெளியிடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தோம். குறிப்பாக அதில் கிராண்ட் ஆபரேஷன் என்ற ஹாஷ் டேக் இடம்பெற்றிருந்தது. மேலும் அனயா மொபைல் மார்க்கெட் என்ற பெயரும் இடம்பெற்றிருந்ததால், அதுகுறித்து சர்ச் செய்தபோது அது பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருப்பது தெரியவந்தது.
துரந்தர் 2 திரைப்படம் மார்ச் 19 வெளியான நிலையில், அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்பது இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், வைரல் வீடியோவை ஒத்த பல வீடியோக்கள் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றிருந்ததையும் காண முடிந்தது.
இதனையடுத்து, வைரல் வீடியோ இந்திய உளவாளியை தேடுவது தொடர்புடையதா என்பதை ஆய்வு செய்தோம். அதாவது இன்ஸ்கிராமில் இருந்த கிராண்ட் ஆபரேஷன் என்ற சொல்லை அடிப்படையாக வைத்து தேடினோம். அது அது ஜூலை 19, 2025 அன்று பாகிஸ்தான் அப்சர்வரால் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்கு நம்மை அழைத்துச் சென்றது.
அதில், “பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் போதைக்கு அடிமையானவர்கள் குவிந்துள்ளனர். கிராண்ட் ஆபரேஷன் என்று குறிப்பிடப்படும் ஒரு உள்ளூர் முயற்சி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தீவிரமாக போராடி வருகிறது.
கம்பீரமான குரலாலும் தனித்துவமான பாணியாலும் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதே நபர்தான் கிராண்ட் ஆபரேஷனை நடத்துகிறார். காவல்துறையுடன் இணைந்து செயல்படும் அந்த நபரான யூனுஸ் அமின், போதைக்கு அடிமையானவர்களைத் தெருக்களிலிருந்து இழுத்து வந்து, அவர்களைக் குளிப்பாட்டி, உணவளித்து, மறுவாழ்வு மையங்களுக்கு மாற்றுகிறார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
வைரல் வீடியோவில் உள்ள நபரும், செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நபரும் ஒருவரே என்பதை முக ஒற்றுமையை வைத்து உறுதிப்படுத்திக்கொண்டோம். யூனுஸ் அமீன் குறித்த தேடலில் அவர் ANCC (போதைப்பொருள் தடுப்பு மற்றும் குற்றக் கட்டுப்பாடு) அமைப்பின் செயல்பாட்டு இயக்குநராக இருப்பது தெரியவந்தது.
இந்த ஆதாரங்கள் வாயிலாக வைரல் வீடியோவுக்கும், துரந்தர் 2 திரைப்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது இந்திய உளவாளியை தேடும் வீடியோவும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு
துரந்தர் 2 திரைப்படம் வெளியான பிறகு பாகிஸ்தானில் இந்திய உளவாளி தேடுதல் வேட்டை என தவறான தகவலுடன் வீடியோ வைரலாகிறது. உண்மையில் துரந்தர் 2 படத்திற்கும், அதற்கும் தொடர்பில்லை, அது உளவாளியை தேடும் வீடியோவும் அல்ல என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும் முன்னர் உண்மைத் தகவல்களை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.