அமைச்சர் முத்துசாமி பரிசுப் பெட்டகம் வழங்கும் வீடியோ... 2023ல் எடுக்கப்பட்டது தற்போது வைரலாகிறது
அமைச்சர் முத்துசாமி 2023ஆம் ஆண்டு பரிசுப் பெட்டகம் வழங்கும் வீடியோ, தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு தவறான தகவலுடன் வைரலாகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பதவிக்காலம் வரும் மே 10ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி மாலை அறிவித்தது. தற்போதைய சூழலில் திமுக, அதிமுக - பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி, சசிகலா - ராமதாஸ் கூட்டணி என ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவித்த உடன் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் ரூ.50,000க்கு மேலான பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. பல இடங்களிலும் அரசியல் கட்சிகள் வழங்கும் பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
பரவும் தகவல்
ஈரோட்டைச் சேர்ந்த அமைச்சர் முத்துசாமி தேர்தல் நடத்தை விதிகள் அமலான பிறகு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பகிர்ந்து பலரும் தேர்தல் ஆணையம் முத்துசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகிர்ந்து வருகிறார்கள்.
ரோலக்ஸ் என்ற எக்ஸ் பதிவர், “திமுகனா தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க போல. மக்களுக்கு பரிசு பொருள் வழங்கிய திமுக அமைச்சர் முத்துசாமி” என்று பதிவிட்டு இருந்தார்.
திமுக-னா தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க போல😑
— Rolex (@Rolex3839xr) March 17, 2026
மக்களுக்கு பரிசு பொருள் வழங்கிய திமுக அமைச்சர் முத்துசாமி🤧#TVK #vijay #jananayagan #whistle #TVKVijay pic.twitter.com/yoCcpuf9t0
இதே ரீதியிலாக அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பரவிய பதிவு 1, பதிவு 2, பதிவு 3 ஆகியவற்றைக் காணலாம்.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோ தொடர்பாக TeluguPost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. 2023ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு நடந்தது போல பரப்புகிறார்கள் என்பது உறுதியானது.
முதலில் அமைச்சர் முத்துசாமி பரிசு பெட்டகம் வழங்கியது தொடர்பான செய்தி ஏதேனும் உள்ளதா என கூகுளில் சர்ச் செய்தோம். 2023ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி விகடன் நிறுவனம் “இரண்டு மினி லாரிகளில் வந்த பரிசுப்பொருள்கள்’ - ஸ்டாலின் பிறந்தநாளுக்காக வழங்கிய அமைச்சர் முத்துசாமி” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்ததை கவனித்தோம்.
அதில், “அமைச்சர் சு.முத்துசாமியின் சொந்தத் தொகுதியான ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சுமார் 400 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது. அதில் 3 லிட்டர் குக்கர், எவர்சில்வரில் பெரிய தட்டு, சின்னத்தட்டு, தம்ளர், எவர்சில்வர் ஜக் என சுமார் ரூ.1,500 மதிப்பிலான பொருள்கள் இருந்தன. பரிசுப் பொருட்கள் வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனக் கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல newsuriyadi என்ற செய்தி நிறுவனம் 2023 அக்டோபரில் முத்துசாமி பரிசுப் பெட்டகம் வழங்கும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி, குறைகளை கேட்டறிந்ததோடு உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்” என்றூ குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல அமைச்சர் முத்துசாமி டீம் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா, மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக ஈரோடு மாநகரம் சூரம்பட்டி பகுதியில் அமைச்சர் சு.முத்துசாமி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மூன்று புகைப்படங்களில் உள்ள பரிசுப் பெட்டகமும் வைரல் வீடியோவில் உள்ள பரிசுப் பெட்டகங்களும் ஒன்றுதான் என்பதையும் உறுதிச் செய்துகொண்டோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முத்துசாமி பரிசுப் பெட்டகம் வழங்கியதாக எந்த ஆதாரங்களும் நமக்கு கிடைக்கவில்லை.
முடிவு
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அமைச்சர் முத்துசாமி வாக்காளர்களுக்குப் பரிசுப் பெட்டகம் வழங்கியதாக தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையில் 2023ஆம் ஆண்டு முத்துசாமி பரிசுப் பெட்டகம் வழங்கிய வீடியோ அது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.