மாணவர்கள் உணவை குப்பையில் கொட்டும் வீடியோ.. சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா?

ஆந்திரா பள்ளியில் மாணவர்கள் உணவை குப்பையில் கொட்டும் வீடியோவை, தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் போல பொய்யாக பரப்பி வருகிறார்கள்.

Update: 2026-03-21 13:05 GMT

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மற்ற திட்டங்களை விட கல்விக்கும், மருத்துவத்திற்கும் மிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். குறிப்பாக பள்ளிக் கல்வித் துறையில் தமிழ் புதல்வன், நான் முதல்வன், புதுமைப் பெண், இல்லம் தேடி கல்வி என பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அதிலும் இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.

காலை உணவுத் திட்டத்திற்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபுறமும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக காலை உணவுத் திட்டத்தில் தரமான உணவுகள் தரப்படவில்லை என அதிமுக, பாஜக கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசை விமர்சித்து காணொலிகளும் பரவி வருகின்றன.

பரவும் தகவல்

இந்த நிலையில் காலை உணவுத் திட்ட சாப்பாட்டை மாணவர்கள் குப்பையில் கொட்டுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவர்கள் ஒவ்வொருவராக வாளியில் உணவைக் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் காலை உணவுத் திட்டத்தில் தரமில்லை என்பதை நிறுவ இவ்வாறாக வீடியோ பகிரப்படுகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, “ஓ...ஸ்டாலின் ஆட்சியில் இது தான் காலை உணவு திட்டமா” என்று விமர்சனம் செய்து வீடியோவை பதிவிட்டு இருந்தார்

கீரன் என்ற பதிவர், “இது தான் காலை உணவு திட்டமா…? வெளங்கிடும்…உலகமே பாராட்டுகிறது என்று கூறப்பட்ட திட்டத்தின் தரம் இதுவா?” என்று விமர்சனம் செய்திருந்தார். 

மேலும் பதிவு 1, பதிவு 2 ஆகியவற்றையும் காணலாம். 



உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் சோதனையில் அது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

முதலில் தமிழ்நாட்டில் காலை உணவுத் திட்ட உணவை மாணவர்கள் அண்மையில் குப்பையில் கொட்டியுள்ளனரா என்பது தொடர்பாக தேடியபோது அவ்வாறாக எந்த செய்தி அறிக்கைகளும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து வைரல் வீடியோவை பிரித்தெடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில், வைரல் சம்பவம் ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள தேவுனிசெருவு எம்.பி.பி பள்ளியில் நடந்தது எனக் குறிப்பிட்டு பகிரப்பட்டு சில பதிவுகளைப் பார்த்தோம்.



ஈடிவி ஆந்திர பிரதேசம் ஊடகமும் மாணவர்கள் உணவை குப்பையில் கொட்டும் சம்பவம் என்.டி.ஆர் மாவட்டத்தில் நடந்ததாகவே செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ”என்.டி.ஆர் மாவட்டம், மயிலாவரத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்கள், தரம் குறைந்த மற்றும் சரியாக சமைக்கப்படாத உணவைக் காரணம் காட்டி, தங்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை நிராகரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தினமும் உணவு சரியாகத் தயாரிக்கப்படுவதில்லை என்று கூறி, மாணவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



 


Full View

நியூஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “என்.டி.ஆர் மாவட்டப் பள்ளியில் தரம் குறைந்த மதிய உணவை மாணவர்கள் நிராகரித்தனர்; தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



குறிப்பிட்ட வீடியோ தொடர்பாக ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் மன்னிப்பு கேட்டு விளக்கமும் அளித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் நாரா லோகேஷ், “அரசுப் பள்ளியில் உணவின் தரம் மோசமாக இருப்பது குறித்த பிரச்சினை எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். மூன்று பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அவர்களின் அறிக்கையின் அடிப்படையில், உணவு முகமை மாற்றப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



 


குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் எனது மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். நமது மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் நல்ல தரமான கவனிப்பைப் பெறத் தகுதியானவர்கள், அதை அவர்கள் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Full View


இந்த ஆதாரங்கள் மூலமாக சம்பவம் நடைபெற்றது தமிழ்நாட்டில் அல்ல, ஆந்திரபிரதேசத்தில் என்பதை உறுதி செய்தோம்.

முடிவு

மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட சாப்பாட்டை குப்பையில் கொட்டுவதாக பரவும் வீடியோ, ஆந்திராவில் நடந்த சம்பவமாகும். ஆனால், தமிழக பள்ளி கல்வித்துறையை விமர்சனம் செய்யும் வகையில் அது தமிழ்நாட்டில் நடந்ததாக உண்மைக்கு புறம்பாக வீடியோ வைரலாகி வருகிறது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிட TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  தமிழ்நாட்டில் காலை உணவுத் திட்ட உணவை மாணவர்கள் குப்பையில் கொட்டுவதாக வீடியோ வைரல்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News