ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் குனிந்து வணக்கம் வைத்தாரா? - வைரல் புகைப்படத்தின் உண்மை இதுதான்

முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் குனிந்து வணக்கம் வைத்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது

Update: 2026-03-29 13:03 GMT

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி, அதிமுக -பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் - சசிகலா கூட்டணி என தமிழ்நாட்டில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். வரும் ஏப்ரல் தொடக்கத்தில் அரசியல் கட்சிகளின் பரப்புரை சூடுபிடிக்க உள்ளது.

அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் திமுகவில் இணைந்தார். திமுக சார்பில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவரது மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். போடி தொகுதிக்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் மார்ச் 18ம் தேதி வேட்பாளர் நேர்காணலும் நடைபெற்றது.


பரவும் தகவல்

திமுக வேட்பாளர் நேர்காணலில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குனிந்து வணக்கம் வைத்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படத்தை பகிர்ந்த @ChatGPTJob என்ற எக்ஸ் பதிவர், “உண்மையில் எடப்பாடியார் யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்துள்ளார். படத்தில் ஸ்டாலின் முன் சுயமரியாதை யோகா செய்யும் ஓ.பி.எஸ்” என்று விமர்சனம் செய்திருந்தார்.


Archive

இதேபோலவே பதிவு 1, பதிவு 2 ஆகியவற்றிலும் ஓ.பன்னீர்செல்வம் குனிந்துள்ளதாக புகைப்படம் பகிரப்பட்டு விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.



உண்மை சரிபார்ப்பு

வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து Telugupost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. உண்மையில் எடிட் செய்யப்பட்ட புகைப்படமே வைரலாகி வருகிறது.

முதலில் வைரல் புகைப்படம் உன்னிப்பாக ஆய்வு செய்தபோது, அதில் திமுக நேர்காணல் குழுவுக்கு தொடர்பே இல்லாத இருவர் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது. அதேபோல டி.ஆர்.பாலு முகக்கவசம் அணிந்து அமர்ந்திருப்பதையும் கண்டோம். புகைப்படத்தில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் இடத்தில் எடிட் செய்யப்பட்டதற்கான தோற்றத்தை காண முடிந்தது.


இதனையடுத்து வைரல் புகைப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். நமக்கு வைரல் புகைப்படத்துடன் ஒத்துப்போகும் ஒரு புகைப்படத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் 2021ஆம் ஆண்டு மார்ச் 7ம் தேதி வெளியிட்டுள்ளதை கண்டறிந்தோம். உதயநிதி ஸ்டாலினிடம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேர்காணல் எடுத்தபோது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏஎன்ஐ பதிவில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை, கட்சித் தலைமையகத்தில் திமுக தேர்தல் குழு பேட்டி கண்டது. உதயநிதி ஸ்டாலின், சென்னை-சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியான நாளில் ஓ.பி.எஸ் அதிமுகவில் இருந்தார்.


இதேபோல உதயநிதியை 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேர்காணல் செய்யப்பட்ட மற்றொரு புகைப்படத்தை ரெட்டிப் ஊடகம் வெளியிட்டுள்ளது. புகைப்படத்தை கவனித்தபோது, வைரல் புகைப்படத்தில் அடையாளம் தெரியாதவர்களாக இருந்தவர்களின் உண்மையான உருவம் இருந்தது. அவர்கள் திமுக துணை பொதுச் செயலாளரான பொன்முடி, ஏற்கனவே துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தான் என்பதை உறுதி செய்தோம். இவர்களை மறைத்து உருவம் தெரியாதவர்களை புகைப்படத்தில் வைத்து எடிட் செய்துள்ளனர் என்பது நமக்கு தெரியவந்தது.



ஓ.பன்னீர்செல்வம் திமுக நேர்காணலில் கலந்துகொண்டது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தேடினோம். திமுக வேட்பாளர்கள் நேர்காணல்.. முதலமைச்சர் முன்னிலையில் நடக்கும் நேர்காணலில் ஓ.பி.எஸ் பங்கேற்பு என நியூஸ் தமிழ் 24*7 வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. அதில் வாசல் வரை ஓ.பன்னீர்செல்வம் போகும் காட்சிகள் மட்டுமே நமக்கு கிடைத்தன. ஆனால், ஓபிஎஸ் நேர்காணல் புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.


முடிவு

திமுக வேட்பாளர் நேர்காணலில் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் குனிந்து வணக்கம் வைத்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு சித்தரிக்கப்பட்டது. உண்மையில் ஓ.பி.எஸ் நேர்காணலில் பங்கேற்ற புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி Telugupost உண்மைக் கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  ஸ்டாலினுக்கு குனிந்து வணக்கம் வைத்த ஓ.பன்னீர்செல்வம்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News