முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து விலகினாரா?
பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து விலகியதாக போலியான நியூஸ் கார்டு பரவிவருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மாநிலத்தின் இருபெரும் கட்சிகளான தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மறைமுகமாகவும், நேரடியாகவும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டன. இந்நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகவும், கூட்டணி குறித்து பேசுவதற்காகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்தார்.
இந்த சூழலில், ஒன்றிய அமைச்சர் ஏப்ரல் 11, 2025 நடைபெற்ற நிகழ்வில் அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இதனையடுத்து அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக பாலிமர் செய்திகளின் சமூக வலைத்தள செய்தி கார்டு ஒன்று இணையத்தில் உலா வந்தது. அதில், ‘விலகல்’ எனத் தலைப்பிடப்பட்டு, பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சரியாக கூட்டணி உறுதி செய்த அந்நாளே இந்த செய்தி கார்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தனது முகநூல் பக்கத்தில் கரும்பாலை செல்வராஜ் எனும் பயனர் பதிவிட்டிருந்தார்.
இதுபோல எக்ஸ் பக்கத்திலும் ஒரு பதிவைப் பார்க்கமுடிந்தது. எம். செல்வம் எனும் பயனர் (@MSELVAM11082042) அதிமுக முன்னாள் அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களே இந்த முடிவில் நீங்கள் பின்வாங்கக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி போலியாக உருவாக்கப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இதுபோன்று ஏதாவது பேசியிருக்கிறாரா என்பதை அறிய முற்பட்டபோது, “25 வருடம் ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன். தோல்வி என்பதே அறியாதவன் நான். யாரால் தோற்றேன் என்றால், பாஜகவால் தான் தோற்றேன்.” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாக ஏப்ரல் 14, 2025 அன்று ‘2019, 2021 தேர்தல்களில் அதிமுக தோற்றது பாஜகவால் மட்டும்தான்' என்ற தலைப்பில் இந்து தமிழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில், பாஜகவுடன் 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமைத்தப் பிறகு அவர் இதை பேசவில்லை என்பது உறுதியானது.
இதனையடுத்து சமீபத்தில் கூட்டணி தொடர்பாகவோ அல்லது கட்சியில் இருந்து வெளியேறுவதாகவோ இவர் பேட்டி அளித்துள்ளாரா என்பதை அறிய, ‘அதிமுகவில் இருந்து ஜெயக்குமார் விலகினார்’ என்று கூகுள், பிங்க் போன்ற இணைய உலாவிகளில் தேடினோம். அப்போது, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தித் தளத்தில், “பாஜக கூட்டணியால் அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம்!” என்ற தலைப்பில் ஒரு செய்தியை காணமுடிந்தது.
ஏப்ரல் 14, 2025 அன்று பதிவாகியிருந்த அந்த செய்தியில், “யாரும் இதுபோன்ற பொய் செய்திகளை பரப்பி, அற்ப ஆசை கொள்ள வேண்டாம். வாழ்நாள் முழுவதும் எனது உயிர் மூச்சு அதிமுக தான். தீய சக்தியான கருணாநிதியை ஒழிக்க வேண்டும் என்று தான் அதிமுக ஆரம்பிக்கப்பட்டது. அந்த வழியில் தான் அதிமுக பயணிக்கிறது. நானும் பயணிக்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
இவர் பேசியது தொடர்பான காணொளிகள் உள்ளதா என்பதை ஆராய்கையில், “எப்போ சொன்னேன்? அதிமுகவில் இருந்து விலகுவேன்னு நான் சொல்லல -ஜெயக்குமார்” என்ற தலைப்பில் ஏப்ரல் 14, 2025 அன்று சன் நியூஸ் செய்தியின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த ஜெயக்குமாரின் பேட்டி கிடைத்தது. அதில், தொடர்ந்து பரப்பப்படும் பொய் செய்திகளை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
கடைசியாக பாலிமர் செய்திகள் பெயரில் வெளியான நியூஸ் கார்டை சோதனை செய்து பார்க்கும்போது, ‘முன்னாள்’ என்பதற்கு பதிலாக ‘முன்னால்’ எனவும், ‘ஜெயக்குமார்’ என்பதற்கு பதிலாக ‘ஜெயகுமார்’ எனவும் எழுத்துப்பிழைகள் இருந்தன. செய்தி நிறுவனங்கள் இப்படி அலட்சியமாக தகவல்களை வெளியிடாது என்பது உறுதியானாலும், அவர்களின் சமூக வலைத்தளப் பக்கத்திற்கு சென்று அன்றைய தினத்தில் இதுபோன்ற நியூஸ் கார்டு ஏதேனும் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து பார்த்தோம். அப்படி ஒரு கார்டும் தணிக்கையில் கண்டறியப்படவில்லை.
முடிவு:
மேற்கொண்ட தணிக்கையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து விலகியதாக வெளியான பாலிமர் நியூஸ் கார்டு போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
Claim : பாஜகவுடன் கூட்டணி பிடிக்காமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகினார் எனப் பரவும் நியூஸ் கார்டு.
Claimed By : Social Media Users
Fact Check : Unknown