இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் அழித்ததாக பரவும் தகவல் உண்மையா?

இந்தியாவின் ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் அழித்ததாக பரவும் தகவல் தவறானது.

Update: 2025-04-28 17:12 GMT

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சூட்டுத் தள்ளினர். இந்த கொடூர சம்பவத்தில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் எல்லை மூடல், விசா ரத்து, பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற உத்தரவு என அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளது. ஆனால், தங்களுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என தெரிவிக்கும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இரு நாடுகள் இடையிலும் தற்போது போர் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவங்களும் தயார் நிலையிலும், போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதில் எண்ணிக்கை அளவில் பாகிஸ்தானை விட இந்திய ராணுவமே வலிமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தான், இந்திய ராணுவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

பரவும் தகவல்

பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் இந்திய ராணுவ நிலைகளை அழித்ததில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

South Asian Perspective என்ற எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் பீரங்கியை பயன்படுத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் இந்திய ராணுவத்தின் இரண்டு நிலைகளை அழித்ததில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு வீடியோ ஷேர் செய்யப்பட்டு இருந்தது.

Naveed Malik🇵🇸 என்ற எக்ஸ் பக்கத்திலும் இதே கருத்துடன் இதே பதிவு பகிரப்பட்டிருந்தது.




 உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோ, புகைப்படம் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் அழித்ததாக பரவும் தகவல் தவறானது என தெரியவந்தது.

புகைப்படத்தின் உண்மை என்ன?

வைரல் புகைப்படத்தை கூகுள் லென்ஸ் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் பாகிஸ்தான் தாக்குதல் என்ற சமீபத்திய பதிவுகளுக்கு மத்தியில் மார்ச் மாதம் 18ஆம் தேதி வெளியான ஒரு எக்ஸ் பதிவின் இணைப்பு கிடைத்தது. பிபிசி ஊடகவியலாளர் Barra Best தனது எக்ஸ் பக்கத்தில், “வடக்கு அயர்லாந்து காசில்வெல்லனில் கவுண்டி டவுனில் உள்ள மோர்ன் பகுதியில் இன்றிரவு நடந்த தீ விபத்துகளின் புகைப்படம்” என்று குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து, Fires Mourne area in County Down என்ற கீ வேர்டு துணையுடன் கூகுளில் TeluguPost உண்மை கண்டறியும் குழு சர்ச் செய்தது. belfast live என்ற வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ஊடகம் மார்ச் 18ஆம் வெளியிட்ட செய்தியிலும் வைரல் புகைப்படம் இடம்பெற்றிருந்தை கண்டறிந்தோம்.



அந்த செய்தியில், “காசில்வெல்லன் பகுதியில் உள்ள மோர்ன் மலைகளில் ஒரு பெரிய தீ விபத்து மார்ச் 17ஆம் தேதி மாலை ஏற்பட்டது. வடக்கு அயர்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை, விரைந்து சென்று மோர்ன் மலைகளில் ஏற்பட்ட பெரிய தீயை சமாளித்தது. ஆறு தீயணைப்பு வாகங்கள் விரைந்து சென்று இந்த பணிகளில் ஈடுபட்டனர். அயர்லாந்து தீயணைப்புத் துறை அப்பகுதி சாலையை பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொண்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில், மோர்ன் மலைத் தீ 'வேண்டுமென்றே' ஏற்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.



இதன்மூலம் வைரலாகும் புகைப்படம் இந்தியா - பாகிஸ்தான் மோதல் தொடர்புடையது அல்ல, அது அயர்லாந்து மலையில் ஏற்பட்ட தீ விபத்து என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.

வீடியோவின் உண்மை என்ன?

அடுத்து வைரல் வீடியோ தொடர்பான தேடலில் இறங்கினோம். வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் தேடினோம். பாகிஸ்தான் ஊடகவியலாளர் குலாம் அப்பாஸ் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் நவம்பர் 23, 2024 அன்று வெளியிட்ட ஒரு வீடியோவை கண்டெடுத்தோம். வைரல் வீடியோ மற்றும் குலாம் அப்பாஸ் ஷா வெளியிட்ட வீடியோவில் முக்கிய ஒற்றுமைகள் இருப்பதை கண்டறிந்தோம்.

வீடியோவை வெளியிட்ட அவர், “குர்ரம் வன்முறை அறிவிப்பு: பயணிகள் வாகனங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட மோதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர். பாகன் பஜாரை ஆயுதமேந்திய நபர்கள் தீயிட்டுக் கொளுத்தினர், கடைகள் மற்றும் ஒரு பெட்ரோல் பங்க் எரிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அமைதியை மீட்டெடுக்க போலீசார் போராடுகின்றனர்” என்று தெரிவித்து இருந்தார். குர்ரம் என்பது கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும், அங்குதான் மோதல் நடந்துள்ளது.


வைரல் வீடியோ Vs அதனுடன் தொடர்புடைய வீடியோ

 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் நடந்த பிரிவினைவாத மோதல்கள் குறித்து கூகுளில் சர்ச் செய்தபோது, FirstPost வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், “பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Full View

மேலும், நமது தேடலில் மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம், ‘வைரல் பதிவு தவறானது’ என வெளியிட்ட ஒரு பதிவை கண்டோம். அதில், “பகிரப்பட்டுள்ள வீடியோ பழையது, இந்தியாவில் நடந்தது அல்ல. இது 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் நடந்த மதவெறி மோதல்கள் தொடர்பான வீடியோ” என்று விளக்கியுள்ளது. அதேபோல பகிரப்பட்ட புகைப்படம் மார்ச் 2025 இல் வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் வைரலாகும் வீடியோ பாகிஸ்தானில் பிரிவினைவாத மோதல் தொடர்புடையது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.

இதுதவிர இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதா, உயிரிழப்புகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என கூகுளில் சர்ச் செய்தபோது, அதுதொடர்பான எந்த செய்தி இணைப்புகளும் நமக்கு கிடைக்கவில்லை.

முடிவு

இந்தியாவின் ராணுவத்தின் இரண்டு நிலைகளை பாகிஸ்தான் அழித்ததாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. இதுகுறித்து பகிரப்படும் வீடியோ பாகிஸ்தானில் நடந்த மதமோதல் தொடர்புடையது, புகைப்படம் அயர்லாந்து தீ விபத்து சம்பந்தப்பட்டது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் அழித்ததாக பரவும் தகவல்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News