கொரோனாவைத் தடுக்கும் நாட்டு மருந்துக்கு அரசு அங்கீகாரமா? - உண்மை இதுதான்

கொரோனாவை தடுக்கும் நாட்டு மருந்துக்கு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக பரவும் தகவல் தவறானது.

Update: 2025-06-08 17:48 GMT

இந்தியாவில் கொரோனா பரவல் 2020ஆம் ஆண்டு தொடங்கியது. உடனடியாக நாடு முழுவதும் லாக் டவுன் போடப்பட்டாலும் தொற்றுப் பரவலை தடுக்க முடியவில்லை. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்தது. கொரோனாவைத் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இலவசமாக போடப்பட்டது. முதல் டோஸ், இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் என மூன்று விதமாக தடுப்பூசிகள் போடப்பட்டன. அதே சமயம் தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வரும், ஆனால் பெரிய ஆபத்துகள் இருக்காது என்றே சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா உச்சத்தை தொடுமா என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. அதே சமயம் கொரோனா தொடர்பான வதந்திகள் சமூக ஊடகங்களில் அதிகமாக பரவத் தொடங்கியுள்ளன.

பரவும் தகவல்

கொரோனா தொற்றை 100 சதவிகிதம் தடுக்கும் நாட்டு மருந்துக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பரவும் கார்டில், “மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் மும்பை கண்டுபிடித்த நாட்டு மருந்தை அரசு அங்கிகரித்துள்ளது . ஒரு ஸ்பூன் மிளகு பொடியும், இரண்டு ஸ்பூன் தேனும், கால் ஸ்பூன் இஞ்சி சாறும் கலந்து வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 100% கொரானாவை தடுத்துவிடலாம். எத்தனை பேருக்கு உங்களால் உதவ முடியுமோ உதவுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAMANATHAN KRISHNAN என்ற எக்ஸ் பயனர், கொரோனா தொற்றைத் தடுக்க ஒரு நாட்டு வைத்தியம் எனக் குறிப்பிட்டு இதனை ஷேர் செய்திருந்தார்.

மேலும் கொரோனா அதிகரிக்கும் இந்த நேரத்தில், நாட்டு மருந்து தகவலை உண்மை என நம்பி பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர். இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3, இணைப்பு ౪



உண்மை சரிபார்ப்பு

வைரலாகும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு நடத்திய ஆய்வில், அது தவறான தகவல் என்பது தெரியவந்தது.

கொரோனா நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்துள்ளதாக செய்தி இருந்ததால், அப்படி ஏதேனும் செய்தி வெளிவந்துள்ளதா என்பது குறித்து கூகுளில் சர்ச் செய்தோம். அதில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த மாணவரால் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக 2021ஆம் ஆண்டே தகவல் வைரலானதையும், அப்போதே இது போலியானது என வெளியான அதிகாரப்பூர்வ விளக்கங்களும் நமக்கு கிடைத்தன.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனம் ஏப்ரல் 26, 2021 அன்று வெளியிட்ட ஒரு செய்தியில், “பாண்டிச்சேரி மாணவரால் கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் தேன் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மருந்து கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், இதனை WHO அங்கீகரித்துள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் போலியானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் குறிப்பிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்பாக 2020ஆம் ஆண்டே இதே தகவலை போலியானது என PIB Fact Check செய்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதை TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு உறுதி செய்தது.

Full View

மத்திய அரசின் MyGovIndia என்ற பேஸ்புக் பக்கத்திலும், “மிளகு, தேன், இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் மருந்தால் கொரோனா வராமல் தடுக்க முடியும் என்பதற்கு எந்த ஒரு அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்து ஏதேனும் விளக்கம் அளித்துள்ளதா என்று அதன் இணையதளத்தில் தேடினோம். உண்மையா பொய்யா என்ற தலைப்பில் கொரோனா குறித்து பரவும் தகவல்கள் பற்றி உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. அதில், “கேள்வி : கருப்பு மிளகு, தேன், இஞ்சி ஆகியவை கொரோனாவை குணப்படுத்துமா?

பதில் : கருப்பு மிளகு, தேன் மற்றும் இஞ்சி ஆகியவை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கின்றன என்பதற்கு எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை. ஆனாலும், பொதுவாக சில மசாலாப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பண்புகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.


இதன்மூலம் இதே செய்திதான் மும்பை கண்டுபிடித்த கொரோனா நாட்டு மருந்து என தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.

இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட விளக்கத்தில், “இது தவறான தகவல். 2018 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலுக்கு முன் சளி மற்றும் இருமலுக்கான கசாயம் செய்வதற்கான சமையல் குறிப்பு ஒரு இணையதளத்தில் புகைப்படங்களுடன் வெளியானது. அதே புகைப்படத்துடன் அந்தச் சமையல் குறிப்பைக் கொரோனா மருந்து என்று பரப்பி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

அதே சமயம் இருமல், தொண்டை வலி, சளி உள்ளிட்டவற்றை குறைக்க இஞ்சி, தேன் மற்றும் கருப்பு மிளகு கொண்டு தயாரிக்கப்படும் வீட்டு வைத்தியம் உதவுகிறது என வெளியான சில செய்தி அறிக்கைகளும் நமக்கு கிடைத்தன. டைம்ஸ் நவ், என்டிடிவி 

இந்த ஆதாரங்கள் மூலம் கொரோனாவை தடுக்க நாட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது, அதற்கு அரசு ஒப்புதல் வழங்கியது என பரவும் தகவல்கள் பொய்யானது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.

முடிவு

மிளகு, இஞ்சி, தேன் கலந்து தயாரிக்கப்பட்ட கொரோனா நாட்டு மருந்துக்கு அரசு அங்கீகாரம் தந்துள்ளதாக பரவும் தகவல் தவறானது. அதுபோன்ற எந்த மருந்துக்கும் மத்திய அரசோ, மாநில அரசோ அங்கீகாரம் வழங்கவில்லை. தகவல்களை வெளியிடும் போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி Telugupost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  கொரோனாவைத் தடுக்கும் மிளகு, இஞ்சி, தேன் கலந்த நாட்டு மருந்துக்கு ஒப்புதல்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News