கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ குற்றவாளி என பரவும் புகைப்படம் உண்மையா?

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் அரசு வழக்கறிஞராக ஆஜரானவரின் புகைப்படம், குற்றவாளி என்று தவறான தகவலுடன் பரப்பப்படுகிறது.

Update: 2025-06-04 06:35 GMT

குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 6 பெட்டிக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தீ மளமளவென பரவியதில் அயோத்தி கர சேவைக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய பயணிகள் உள்பட 59 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இதனையடுத்து, குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய மதக் கலவரம் வெடித்தது.

ரயில் எரிப்பு குறித்த வழக்கில் 31 பேரை குஜராத் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த குஜராத் சிறப்பு நீதிமன்றம், 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டில் 11 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனை எதிர்த்து குற்றவாளிகளில் சிலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

பரவும் தகவல்

இந்த நிலையில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி ரஃபீக் உசேன் பாதுக் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அங்குசம் என்ற எக்ஸ் பயனர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, “இவன் ரஃபீக் உசேன் பாதுக், கோத்ராவில் இரண்டு பெட்ரோல் பம்புகளின் உரிமையாளரும் ஒரு துலுக்க இயக்க தலைவருமானவன்... 23 வருடங்களுக்கு முன்பாக குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயிலை எரிக்க இலவசமாக பெட்ரோல் கொடுத்த இந்த ஜிஹாதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பிறகு 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தான். போலீசார் கண்டுபிடித்த நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது” என்று தெரிவித்து இருந்தார்.


மேலும் சில சமூக வலைதளப் பக்கங்களில் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3, இணைப்பு 4 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் என்றே புகைப்படம் வைரலானது.

உண்மை சரிபார்ப்பு

வைரல் புகைப்படம் தொடர்பாக TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு நடத்திய விசாரணையில் அது தவறான தகவலுடன் பரப்பப்படுவது தெரியவந்தது.

முதலில் வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்திய போது, அது ஏஎன்ஐ யூட்யூப் பக்கத்தில் 2022 ஜூலை 3ஆம் தேதி பதிவேற்றிய வீடியோவுக்கு நம்மை அழைத்துச் சென்றது. அது கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு குறித்து சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.சி. கோடேகர் பேசும் வீடியோ.

Full View

வீடியோவில் கோடேகர், “கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரஃபீக் உசேன் பதுக், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், கோத்ரா போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோத்ரா அமர்வு நீதிமன்றத்தால் கொலை சதித் திட்டத்தின் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.


இதே தகவலை ஏஎன்ஐ தனது எக்ஸ் பக்கத்திலும் கோடேகரின் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளது. அப்போதே அது ரஃபீக் உசேன் பதுக் புகைப்படம் என புரிந்து கொள்ளப்பட்டதால் ஏஎன்ஐ ஒரு விளக்கமும் அளித்துள்ளதை கண்டறிந்தோம். அதில், “ஏஎன்ஐ வெளியிட்ட படம் குற்றவாளி ரபீக் பதுக் அல்ல, சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.சி. கோடேகர் புகைப்படம் என்பதை தெளிவுபடுத்துவதற்காக இது. எக்ஸ் பக்கத்தில் தவறான தகவலுடன் பதிவுகள் வைரலாவதால் இந்த விளக்கம்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் வைரலாவது குற்றவாளி ரஃபீக் உசேன் பதுக் புகைப்படம் அல்ல, அந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி. கோடேகர் புகைப்படம் என்பதை TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு உறுதி செய்தது.



ரஃபீக் உசேன் பதுக் புகைப்படம் தொடர்பாக தேடலில் இறங்கினோம். 2022 ஜூலை 4ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதில், ரஃபீக் உசேன் பதுக் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அந்த செய்தி அறிக்கையில், “19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரஃபீக் உசேன் பதுக்கை, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோத்ரா நகரில் குஜராத் காவல்துறை கைது செய்தது. முழு சதித்திட்டத்தையும் தீட்டி, கும்பலைத் தூண்டிவிட்டு, ரயில் பெட்டியை எரிக்க பெட்ரோல் கூட ஏற்பாடு செய்த குற்றம் சாட்டப்பட்டவர்களின் குழுவில் பதுக் ஒருவராக இருந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.


இதேபோல தனது புகைப்படம் கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளி என தவறாக சித்தரிக்கப்பட்டு பகிரப்படுவதாக அரசு வழக்கறிஞர் காடேகர் குஜராத் சைபர் க்ரைம் போலீசில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புகார் அளித்துள்ள தகவலையும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அறிக்கை வாயிலாக உறுதி செய்துகொண்டோம்.


முடிவு

கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளி ரஃபீக் உசேன் பதுக் என சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் தவறானது. அது கோத்ரா வழக்கில் அரசின் சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் கோடேகரின் புகைப்படம் என்பது உறுதியாகியுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது சரிபார்த்து வெளியிடுமாறு TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ குற்றவாளி என பரவும் புகைப்படம்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News