டிட்வா புயல் மழையால் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் வெள்ளமா?
டிட்வா புயல் மழை காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக தவறான தகவலுடன் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கிய நிலையில், தற்போது மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக சென்னை, புறநகர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் பெரிய அளவில் மழை பெய்தாலும் வெள்ளம் தேங்கும் அளவுக்கு இல்லை. பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் மோட்டார் இயந்திரங்கள் மூலமாக உடனடியாக அகற்றப்பட்டது.
சென்னை தண்ணீர் தேங்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கின. மழை நின்ற பிறகு அவை வடிந்துவிடும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். சென்னை மற்றும் டெல்டா தவிர மற்ற மாவட்டங்களில் மழையால் பெரிய அளவில் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. அதே சமயம் மழையையொட்டி பல்வேறு போலித் தகவல்கள் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன.
பரவும் தகவல்
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையம் மழைநீரில் மூழ்கியதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. புகைப்படத்தை பகிர்ந்த பலரும் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
@tssudhayakumar என்ற எக்ஸ் பக்கத்தில், “ஆசியாவின் மிகப்பெரிய நீச்சல் குளம் ! தமிழகத்தின் பெருமை மிகு அடையாளம்.., விழுப்புரம் பேருந்து நிலையத்தின் இன்றைய விடியல்” என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
இதே கருத்துடன் @AgriSubramanian என்ற பதிவர் எக்ஸ் தளத்தில் வைரல் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். மேலும் பதிவு 1, பதிவு 2 ஆகியவற்றிலும் வைரல் பதிவை நாம் காணலாம்.
ஆசியாவின் மிகப்பெரிய நீச்சல் குளம் ! தமிழகத்தின் பெருமை மிகு அடையாளம் … விழுப்புரம் பேருந்து நிலையத்தின் இன்றைய விடியல் …… pic.twitter.com/U50ZjqfMSL
— Agri.N.Subramanian (@AgriSubramanian) December 2, ౨౦౨౫
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய சோதனையில், அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. 3 ஆண்டுகள் பழைய புகைப்படம் தற்போது பகிரப்படுவதும் உறுதி செய்யப்பட்டது.
முதலில் வைரல் புகைப்படத்தை உண்ணிப்பாக கவனித்தபோது அதில் நியூஸ் தமிழ் 24*7 செய்தி சேனலின் லோகோ இருப்பதை கண்டறிந்தோம். இதனையடுத்து, வைரல் வீடியோ எப்போது வெளியானது என்பது தொடர்பாக நியூஸ் தமிழ் சமூக வலைதளப் பக்கங்களில் தேடலில் ஈடுபட்டோம்.
அக்டோபர் 22ஆம் தேதி கனமழை பெய்த சமயத்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளதை கண்டறிந்தோம். இந்த வீடியோவை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து புகைப்படமாக பகிர்ந்துள்ளது தெரியவந்தது.
மேலும் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்து நிற்பதாக அதே நாளில் (அக்டோபர் 22) புதிய தலைமுறை, தந்தி டிவி, நியூஸ் 7 தமிழ் ஊடகங்களும் வீடியோ பதிவிட்டுள்ளன.
ஆக வைரலாகும் புகைப்படம் தற்போதைய டிட்வா புயலுடன் தொடர்புடையது அல்ல, அது கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பானது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
மேலும் நாம் உறுதிப்படுத்தலுக்கான தேடியபோது வைரல் புகைப்படம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட விளக்கம் நமக்கு கிடைத்தது. அதில், விழுப்புரம் பேருந்து நிலையம் மழைநீரில் மூழ்கியதாகப் பழைய படங்கள் பரவுவதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
.
மேலும், நேற்று (டிசம்பர் 2, 2025) எடுகப்பட்ட வீடியோவும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் மழை பெய்துகொண்டிருந்தால் தரை ஈரமாக இருக்கிறதே தவிர தண்ணீர் தேங்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
இந்த ஆதாரங்கள் வாயிலாக விழுப்புரத்தில் டிட்வா புயல் காரணமாக பெய்த மழையால் வெள்ளம் ஏற்படவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் பெய்த மழையால் தண்ணீர் தேங்கியதை, தற்போது நடந்தது போல தவறான தகவலுடன் பரப்பி வருகிறார்கள்.
முடிவு
டிட்வா புயல் காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக தவறான தகவலுடன் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அது கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையினால் தண்ணீர் தேங்கியுள்ள புகைப்படமாகும். ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி வாசகர்களுக்கு TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.