உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விஜயை சந்திக்க வரும்வழியில் ஆடினார்களா?

வைரல் காணொளியின் பின்னணி என்ன ?

Update: 2025-10-31 15:22 GMT

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் விஜயை சந்திக்க வழியில் நடனமாடினார்களா?

வைரல் காணொளியின் பின்னணி என்ன ?

Claim : கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் விஜயை சந்திக்கும் ஆர்வத்தில் நடனமாடி வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Fact : காணொளியில் பரவும் காட்சிக்கும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதித்தவர்களின் உறவினர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. முற்றிலும் தவறான தகவல்

Factcheck : வைரலான காணொளியில் இருக்கும் ஆட்கள் யாரும் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. அது ஒரு பழைய சுற்றுலா பேருந்தின் காணொளி.

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சுற்றுப்பயண கூட்டத்தில் பங்கேற்ற தவெக வின் தலைவரும் நடிகருமான விஜய்யினை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளார்கள். அங்கு ஏற்பட்ட கூட்டநெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து கரூர் மக்களை விஜய் சந்திக்க செல்லவில்லை. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லப்புரத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதையடுத்து விஜயை சந்திக்க வரும் வழியில் உற்சாகமாக உறவினர்கள் பேருந்தில் நடனமாடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த ஆண்டின் மிக மோசமான கூட்டநெரிசலால் ஏற்பட்ட துயரம் மக்கள் மனங்களில் இருந்து நீங்கவில்லை. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் உறவினர்களும் விஜயை காணும் ஆர்வத்தில் , மாமல்லப்புரம் செல்லும் வழியில் பேருந்து முன்பு ஆடி உற்சாகமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

சமூக ஊடகத்தில் குறிப்பாக Instagram தளத்தில் ஒரு பயனாளர் தனது பக்கத்தில், “நாளை மாமல்லபுரத்தில் நடைபெரும் துக்க விழா ஷூட்டிங் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருக்கும் கரூர் மக்கள் இன்று அதற்கான ஒத்திகை பார்த்த போது..” என பதிவிட்டுள்ளார்.

Source 1 : https://www.instagram.com/reel/DQRh-rtFNZz/ 


Full View

மற்றொரு பயனாளர் தனது X தளத்தின் பக்கத்தில், “தற்குறி கூட்டம் திருந்தாது போல..” என்று இதே புகைப்படத்துடன் கூடிய காணொளியினை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவின் முழு விவரத்தினை இங்கே காணலாம்..

Source 2 : https://x.com/krish_itz/status/1982515812654252286

இதே பதிவினை பலரும் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.




 உண்மை சரிப்பார்ப்பு:

தெலுங்குபோஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் இந்த பதிவினை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் விஜய்யின் அழைப்பினை ஏற்று அவரை சந்திக்க மாமல்லப்புரம் செல்லும் வழியில், பொதுவெளியில் நடனமாடி கொண்டாட்ட மனநிலையில் இருந்ததாக பரவிய காணொளியினை ஆராய்ந்தது.

முதலில் கூகுள் லென்ஸ் வசதியினை பயன்படுத்தி தேடியபோது, அந்த பதிவின் புகைப்படத்துடன் ஒற்றுப்போகும் பல பதிவுகளை காண முடிந்தது. அதில் VKT Transports தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுற்றுலாவின் மகிழ்ச்சியான தருணங்கள் என்று இந்த காணொளியினை பதிவிட்டிருந்தது.




தொடர்ந்து தேடுகையில் pavithrahomestay என்னும் இன்ஸ்டா பக்கத்தில் கேரளாவிலுள்ள மூனார் சுற்றுலா பற்றிய விளம்பரங்களுடன், இந்த காணொளியும் பதிவேற்றப் பட்டிருப்பதை அறிய முடிந்தது. அதில் சுற்றுலாவில் கல்லூரி மாணவ மாணவியர் மகிழ்ச்சியாக நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

pavithrahomestay பக்கத்தில் இருந்த பதிவின் விவரத்தினை இங்கு காணலாம்.



மேலும் தொடர்ந்து தேடுகையில், கரூரிலிருந்து விஜயை பார்க்க பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஏற்றி சென்ற பேருந்து வேறு , வைரல் வீடியோவில் இருக்கும் பேருந்து வேறு என்பதனையும் அறிய முடிந்தது. இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழின் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை அறிந்தோம்.



எனவே செய்தி ஊடகங்களில் வெளியான வீடியோ பதிவிலிருந்து, கரூரிலிருந்து வந்த பேருந்து YBM Travels என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும். வைரலான வீடியோவில் இருக்கும் பேருந்து VKT Transports ஆகும். இரண்டும் வெவ்வேறு பேருந்து என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இந்த தகவல் மூலங்களின் அடிப்படையில் தெலுங்குபோஸ்ட் குழு செய்த ஆய்வில் இந்த பதிவு முற்றிலும் தவறானது என்று உறுதி செய்கிறது. கல்லூரி மாணவ மாணவியர்கள் இருக்கும் சுற்றுலா கொண்டாட்ட காட்சிகள் அடங்கிய காணொளி தவறான செய்திகளோடு , கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களோடு இணைத்து வெளியிடப்பட்டுள்ளது, இச்செய்தி மீளாத துயரத்தில் இருக்கும் குடும்பங்களின் மதிப்பினை கேள்விக்குறி ஆக்கலாம். இதனை காண்பவர்கள் மத்தியில் வெறுப்பு உணர்வு ஏற்படலாம். இதுபோன்ற உணர்ச்சிமிக்க பதிவுகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்த பின்பே அதனை பகிர வேண்டும் என்று தெலுங்குபோஸ்ட் வலியுறுத்துகிறது.

முடிவு:

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நடனமாடியதாக குறிப்பிடப்படும் இந்த காணொளி முற்றிலும் தவறானது. அதிலிருக்கும் ஆட்கள், பேருந்து , வீடியோ வெளிவந்த நேரம் என அனைத்தும் வேறுபட்டிருப்பதை காணலாம். இரு காணொளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதிச் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News