திமுக ஆட்சியில் பட்டியலின முதியவரை காலில் விழவைத்து சாதிய வன்கொடுமையா? உண்மை இதுதான்

திமுக ஆட்சியில் பட்டியலின முதியவருக்கு சாதிய வன்கொடுமை நடந்ததாக பரவும் வீடியோ 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சி நடந்தது.

Update: 2025-06-07 06:44 GMT

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் பட்டியலின மக்கள் குடிக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் குற்றவாளிகளை காவல் துறை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் பட்டியலின மக்கள் கோயிலில் வழிபட ஆதிக்க சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுபோல பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களது இருக்கைகளில் அமர, தேசியக் கொடி ஏற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சம்பங்களும் நடந்துள்ளன. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண விவகாரத்தில் உயிரிழந்தர்களில் பெரும்பாலானோர் பட்டியலின மக்கள். இவற்றை எல்லாம் வைத்து திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

பரவும் தகவல்

இந்த நிலையில் திமுக ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த முதியவரை ஆதிக்க சாதியினர் காலில் விழவைத்து தீண்டாமை வன்கொடுமை செய்துள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Gowri Sankar D என்ற எக்ஸ் பதிவர் வைரல் வீடியோவைப் பகிர்ந்து, “தமிழகத்தில் நடப்பது திமுகவின் கோபாலபுர கோமாளியின் சமூக நீதி ஆட்சியே. தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் முதியவர் ஒருவரின் ஆடுகள் மற்ற சாதியினர் வயல்களில் மேய்ந்ததால் அவரை காலில் விழ வைத்து வீடியோ வெளியிட்ட சாதி வெறியர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive

இதே கருத்துடன் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3, இணைப்பு 4 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ பகிரப்பட்டு இருந்தது.



உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில் அது ஐந்து ஆண்டுகள் பழைய வீடியோ என்பது தெரிய வந்தது.

முதலில் வைரல் வீடியோவின் முக்கிய பகுதிகளை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். ஆனால், நமக்கு எந்த இணைப்புகளும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, கயத்தாறு முதியவர் உள்ளிட்ட கீ வேர்டுகள் துணையுடன் தேடியபோது விசிக தலைவர் திருமாவளவன் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் இதே வீடியோவை வெளியிட்டு இருப்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது.

அதில், “வட இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் தொடரும் அநாகரிகம். கயத்தாறு அருகே ஓலைக்குளம் கிராமம் ஆதிக்குடியினத்தைச் சார்ந்தவரின் ஆடுகள் தங்களின் கொல்லைப் பகுதியில் எப்படி நுழையலாமென இந்தக் கேவலத்தை அரங்கேற்றியுள்ளனராம்” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதே போல பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், இந்த நிகழ்வை கண்டித்து டிவிட்டர் பதிவிட்டுள்ளது. அதில், வைரலாகும் வீடியோவுடன் ஆங்கிலப் பத்திரிகை செய்தி இடம்பெற்றிருந்தது.

இதன்மூலம் வைரலாகும் வீடியோ தற்போது நடந்த சம்பவம் அல்ல, அது 2020ஆம் ஆண்டு நடந்தது என்பதை தெரிந்துகொண்டோம்.

மேலும் அதில் உள்ள வார்த்தைகளை வைத்து கூகுளில் சர்ச் செய்தபோது, டைம்ஸ் ஆப் இந்தியா 2020 அக்டோபர் 13ஆம் தேதி வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதில், “தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகாவில் உள்ள ஓலைக்குளத்தில் தலித் ஆடு மேய்ப்பவர் தேவர் இனத்தைச் சேர்ந்த ஒருவரின் காலில் பலமுறை விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தப்பட்டார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



அதே நாளில் தி இந்து வெளியிட்ட செய்தியில், “பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவரை ஆதிக்க சமூகத்தினர் ஒருவரின் காலில் விழுந்து வணங்கும்படி கட்டாயப்படுத்தியதாக, இடைநிலை சாதியைச் சேர்ந்த ஏழு பேர் மீது கயத்தார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியில், “பால்ராஜ் வளர்க்கும் ஆடுகள், சிவசங்குவின் தோட்ட பகுதிக்குள் சென்றதால் ஆத்திரமடைந்த சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள், பால்ராஜை அழைத்து அவரது காலில் மூண்டு முறை விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். பின் அதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஏழு பேரையும் கைது செய்தனர் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறினார்” என்று தெரிவித்துள்ளது.




2020 அக்டோபர் மாதமே இதே செய்தி தீக்கதிர், ஈடிவி பாரத் மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு இணையதளங்களில் வெளியானதை TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு உறுதி செய்துகொண்டது.

மேலும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகமும் வைரல் வீடியோ 2020ஆம் ஆண்டு வெளியானது என விளக்கியுள்ளது.

2020ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால், 2020ல் வெளியான வீடியோவை மீண்டும் எடுத்து தற்போது நடந்த சம்பவம் போல பகிர்ந்து, தமிழகத்தில் தீண்டாமை கொடுமை என திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

முடிவு

திமுக ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த முதியவரை ஆதிக்க சாதியினர் காலில் விழவைத்ததாக பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல. 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவம் தொடர்பான பழைய வீடியோ, இப்போது நடந்தது போல குறிப்பிட்டு பரப்பப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்திகளை வெளியிடும் முன்பு உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிட TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  திமுக ஆட்சியில் பட்டியலின முதியவருக்கு சாதிய வன்கொடுமை என வைரல் வீடியோ
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News