தமிழகத்தில் போலீஸ் அத்துமீறலால் குழந்தை பலி என பரவும் தகவல் - உண்மை இதுதான்

தமிழகத்தில் போலீஸ் அத்து மீறலால் குழந்தை பலி என பரவும் தகவல் தவறானது. அந்த சோக சம்பவம் கர்நாடகாவில் நடைபெற்றது.

Update: 2025-05-30 15:55 GMT

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட யாருக்குமே பாதுகாப்பு இல்லை என அதிமுக தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறது. காவல் துறை சிறப்பாக செயல்படவில்லை என்றும் அவர்கள் அடுக்குகிறார்கள்.

அதே சமயம் குற்றங்களை தடுக்கும் வகையில் தலைநகர் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் காவல் துறையினர் தினமும் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களில் பல ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். மேலும், விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிகளும் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆனால், குற்றவாளிகளை பிடிக்க முடியாத காவல் துறை, அப்பாவி ஏழை மக்கள் மீது அபராதம் போட்டு அதிகாரத்தை காட்டுகிறது என்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

பரவும் தகவல்

தமிழகத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதியின் பைக்கை போலீசார் பிடித்து இழுத்ததால் குழந்தை பலியானதாகக் குறிப்பிட்டு, திமுக அரசு மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

மு.அருண்குமார் என்ற பேஸ்புக் பதிவர், “ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ் பைக்கில் இருந்த மூன்று வயது குழந்தை கீழே விழுந்து பலியான சோகம், குழந்தையின் பெற்றோர் சாலையில் அமர்ந்து போராட்டம் #பாதுகாப்பில்லா_திமுகமாடல் #Resign_Stalin” என்று பதிவிட்டு இருந்தார்.

Archive 

பிரியகுமாரன் என்ற எக்ஸ் பயனர், காவல் துறை கமிஷன் துறையாகி பல நாட்கள் ஆகிறது என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.

Archive

மேலும் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3 ஆகிய பதிவுகளிலும் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது போலவே பகிரப்பட்டுள்ளது.



உண்மை சரிபார்ப்பு

வைரல் தகவலின் உண்மைத் தன்மையை அறிய TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில் அது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல என தெரியவந்தது.

முதலில் வைரலாகும் தந்தி டிவி நியூஸ் கார்டை அதன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் சென்று முழுமையாக படித்துப் பார்த்து ஆய்வு செய்தோம். அதில், நியூஸ் கார்டின் வலது ஓரத்தில் Place இடத்தில் கர்நாடகா என குறிப்பிடப்பட்டு இருந்ததை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது.


மேலும் தந்தி டிவி வெளியிட்ட வீடியோவில், “கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மனோஜ் என்பவரின் 3 வயது குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்தபோது நாய் கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பைக்கில் சென்ற கணவன், மனைவி இருவரும் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி காவல் துறையினர் நிறுத்தியுள்ளனர். ஆனால், குழந்தையை நாய் கடித்துள்ளது என்று கூறி அங்கிருந்து பைக்கில் ஏறி மனோஜ் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது மனோஜ் வாகனத்தை போலீசார் பிடித்து இழுத்துள்ளனர். இதனால் பின்புறம் இருந்த அவரது மனைவி அனிதா குழந்தையுடன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் குழந்தையின் தலை கீழே பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு கர்நாடகா முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Full View

இதுதொடர்பாக தொடர்புடைய கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் சர்ச் செய்ததில் தி இந்து வெளியிட்ட செய்தி அறிக்கை நமக்கு கிடைத்தது. தி இந்து செய்தியில், “நாய் கடித்த சிறுமி ஹிருத்திக்ஷாவை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். மண்டியா ஸ்வர்ணசந்திராவில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் அவர்களை தடுத்தி நிறுத்தினர். அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்து சிறுமி கீழே விழுந்த நிலையில், லாரி மோதி உயிரிழந்தார். இது பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியது” என்று தெரிவித்துள்ளது. இதே செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியாவும் வெளியிட்டுள்ளது.



மேலும், கன்னட தொலைக்காட்சிகளான டிவி9 மற்றும் நியூஸ் 18 கன்னடா ஆகிய சேனல்களும் இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.



 இந்த ஆதாரங்கள் மூலம் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதால் சிறுமி உயிரிழந்தது கர்நாடகா மாவட்டம் மாண்டியாவில் என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு தெளிவாக உறுதி செய்தது. ஆனால், தமிழகத்தில் நடைபெற்ற சம்பவம் போல பரப்பி தமிழகத்தை ஆளும் திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

முடிவு

தமிழகத்தில் போலீசார் பைக்கை தடுத்து நிறுத்தியதில் கீழே விழுந்து சிறுமி பலியானதாக பரவும் தகவல் தவறானது. சிறுமி பலியான சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றது என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்த பிறகு வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  தமிழகத்தில் காவல் துறையினரின் அத்துமீறலால் குழந்தை பலி என பரவும் தகவல்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News