சென்னையில் பெருவெள்ளம் என திமுக அரசை விமர்சிக்கும் வீடியோ : உண்மை என்ன?

சென்னையில் வெள்ளம் என பரவும் வீடியோ 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

Update: 2025-10-29 11:09 GMT

ஆந்திர பிரதேசத்தில் உருவாகியுள்ள மோந்தா புயலின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக பரவி வருகின்றன. குறிப்பாக சென்னையில் வெள்ள வடிகால் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.4,000 கோடியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை என்றும், அதன் காரணமாகவே சென்னையில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குகிறது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பரவும் தகவல்


இந்த நிலையில் சென்னையில் மழை காரணமாக குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பகிர்ந்த செங்கல்பட்டு மேற்கு அதிமுக என்ற பேஸ்புக் பக்கம், “ஒதுக்கப்பட்ட நிதியை தங்கள் வீட்டுக்கு ஒதுக்கி கொண்டதால் இந்த நிலை... தீர்வு உண்டா மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால். #4000கோடி_என்னாச்சு” என்று விமர்சனத்துடன் கேள்வியை முன்வைத்தது.

Full View

இந்த வீடியோ சுமார் 53 ஆயிரம் பார்வைகள், 1,000 லைக்குகள், 571 ஷேர்களைப் பற்றிருந்தது.

இதே வீடியோவை 4000 கோடி என்னாச்சு? என்ற ஹாஷ் டேக்குடன் பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களும் வெளியிட்டு இருந்தன.


உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது 2020ஆம் ஆண்டு வெளியான ஐந்து ஆண்டுகள் பழமையான மழை வெள்ள வீடியோ என்பது தெரியவந்தது.



முதலில் வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை பிரித்தெடுத்து கூகுள் லென்ஸில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில், 2020ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி வைரலாகும் அதே வீடியோ Ram என்ற யூட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தோம். அதில் கேப்ஷனாக “வடகிழக்கு பருவமழை, சென்னை மழை 2020, திருவல்லிக்கேணி” உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

Full View

மேலும் TeluguPost நடத்திய ஆழ்ந்த தேடலில் 2020 அக்டோபர் 23ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்டுக்கு வந்த பதில் இடுகையில், வைரல் வீடியோ இருப்பதை கண்டறிந்தோம்.

அப்போதைய திமுக இளைஞரணிச் செயலாளரும், இப்போதைய துணை முதல்வருமான உதயநிதி, “ஒவ்வொரு முறையும், கடும் மழைக்கு சென்னை இரையாகிறது. இதற்கு தீர்வே கிடையாதா?” என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதில் இடுகையா JJ Sujith INDIA என்ற எக்ஸ் பக்கம் வைரல் வீடியோவை ஷேர் செய்து, “ஒதுக்கப்பட்ட நிதியை தங்கள் வீட்டுக்கு ஒதுக்கி கொண்டதால் இந்த நிலை... தீர்வு உண்டு திமுக ஆட்சிக்கு வந்தால்” என்று குறிப்பிட்டு இருந்தது.

அன்றைய தினம் சென்னையில் கனமழை பெய்ததா என்பது குறித்து ஆய்வு செய்தோம். அதே நாளில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட செய்தி வீடியோவில், “சென்னையில் மழை பாதிப்பு - புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு” என்ற தலைப்பு இடம்பெற்றிருந்தது. அதில் சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள காட்சிகளை TeluguPost உண்மை கண்டறியும் குழுவால் பார்க்க முடிந்தது. அத்துடன், மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அப்போதைய சென்னை ஆணையர் விளக்கினார்.

Full View

வைரல் வீடியோ தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம், அது 2020ஆம் ஆண்டு வெளியான வீடியோதான் என்பதை உறுதி செய்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் மூலம் தமிழக அரசை விமர்சனம் செய்து வெளியான மழை வெள்ள வீடியோ 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதும், அப்போது அதிமுக ஆட்சியில் இருந்ததும் என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

முடிவு

சென்னையில் அண்மையில் பெய்த மழையில் வெள்ளம் தேங்கியதாக வைரலாகும் வீடியோ 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட 5 ஆண்டுகள் பழைய வீடியோ. அது தற்போது எடுக்கப்பட்டது போல தவறான தகவலுடன் வைரலாகி வருகிறது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  சென்னையில் அண்மையில் பெய்த மழையை தேங்கியுள்ள வெள்ளம் என பரவும் வீடியோ
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News