தவெகவில் ஐஆஎஸ் அதிகாரி அருண் ராஜ் இணைய ஆதவ் அர்ஜுனா எதிர்ப்பா?

தவெகவில் ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜுக்கு இடமில்லை என ஆதவ் அர்ஜுனா பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது.

Update: 2025-06-05 18:03 GMT

அரசியலில் தீவிர ஆர்வம் கொண்ட நடிகர் விஜய் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினார். கடந்த அக்டோபரில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக தவெகவின் முதல் மாநாட்டை நடத்திக் காட்டினார். தற்போது ஆளும் கட்சியான திமுகவை பல விஷயங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

தவெகவில் இணைய இளைஞர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கட்சியின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருந்து வருகிறார். விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளராக உள்ளார். தேர்தல் வியூக வகுப்பாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் தற்போது முக்கியத்துவம் கூடியுள்ளது. மேலும், மற்ற கட்சிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள்.

பரவும் தகவல்

ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜுக்கு தவெகவில் இடமில்லை என ஆதவ் அர்ஜுனா பேசியதாக சமூக வலைதளங்களில் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த கார்டில், “ஆதவ் அர்ஜுனா விஜய்யை சந்தித்து ரகசிய ஃபைல் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் அருண் ராஜுக்கு பதவி வழங்குவது குறித்து மிக காட்டமாக விஜயிடம் பேசியிருப்பதாக தகவல்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கார்த்திகேயன் என்ற எக்ஸ் பயனர் வைரல் கார்டை ஷேர் செய்து, “நீ என்னடா வெண்ண சொல்றது உன் கட்சித் தலைவர் விஜய் சொல்லட்டும்டா : இப்படிக்கு அருண்ராஜு” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Archive

மெட்ரோ நகர் சீனிவாசன் என்ற பேஸ்புக் பயனரும் இந்த நியூஸ் கார்டை ஷேர் செய்திருந்தார்.


உண்மை சரிபார்ப்பு

வைரலாகும் தகவலின் உண்மை தன்மை குறித்த TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழுவில் ஆய்வில் நியூஸ் கார்டு போலியானது எனத் தெரியவந்தது.

வைரல் கார்டை ஆய்வு செய்தபோது அதில் எழுத்துரு அளவில் வித்தியாசமும், எழுத்துப் பிழை இருப்பதையும் கண்டுபிடித்தோம். வைரல் நியூஸ் கார்டு தந்தி தொலைக்காட்சி பெயரில் வெளியான நிலையில், அதன் சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்தோம். அதில் மே 26ஆம் தேதி அதுபோன்ற எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்பதை கண்டறிந்தோம்.

Full View

மாறாக வைரல் கார்டு போலியானது என தந்தி டிவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், “இப்படி எந்த செய்தியையும் தந்தி டிவி வெளியிடவில்லை. பகிரவும் இல்லை. இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம்!” என்று தெரிவித்து இருந்தது. இதன்மூலம் வைரலாகும் கார்டு போலியானது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.

மேலும் நமது தேடலில் அருண் ராஜ் ஐஆர்எஸ் அண்மையில் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதும், அவருக்கு தவெகவில் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் குறிப்பிடும் செய்தி அறிக்கைகள் கிடைத்தன.

நியூஸ் 18 தமிழ்நாடு மே 27ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “வருமான வரித்துறை கூடுதல் ஆணையராக இருந்த அருண்ராஜ் விஜய்யின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டுவந்தார் என பரவலாக பேச்சுகள் இருந்தன. இந்நிலையில் அவர் திடீரென தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.


அருண் ராஜின் ராஜினாமா கடிதத்தை ஏற்ற மத்திய நிதியமைச்சகம், அவரை பணியில் இருந்து விடுவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அருண் ராஜுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் மின்னம்பலம், சமயம் தமிழ், சத்தியம் தொலைக்காட்சி ஆகிய சேனல்களும் தவெகவில் அருண் ராஜுக்கு இணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது. எனினும், இன்னும் அருண் ராஜ் தன்னை தவெகவில் இணைத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Full View

விருப்ப ஓய்வு தொடர்பாக அருண் ராஜ் மே 27ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இன்று நான் அதிகாரப்பூர்வமாக எனது பணிகளை ஒப்படைத்துவிட்டேன். கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டேன். ஐஆர்எஸ் அதிகாரியாக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பணியாற்றினேன். அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய பயணத்தின் தொடக்கம் எனக் குறிப்பிட்டு இந்த அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.


முடிவு

விஜய்யின் தவெக கட்சியில் ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் சேருவதை ஆதவ் அர்ஜுனா எதிர்ப்பதாக பரவும் தகவல் தவறானது. வைரலாகும் நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும் போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  அருண் ராஜ் ஐஆர்எஸ்-க்கு தவெகவில் இடமில்லை என சொன்ன ஆதவ் அர்ஜுனா
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News