கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய் சுற்றுலா சென்றாரா?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய் சுற்றுலா சென்றதாக தவறான தகவலுடன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Update: 2025-10-28 06:01 GMT

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் பரப்புரையைத் தொடங்கினார். விஜய்யின் பரப்புரைக் கூட்டங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் திரண்டது. இந்த சூழலில் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தனது தேர்தல் பரப்புரையை நடிகர் விஜய் முழுவதுமாக ரத்து செய்துவிட்டார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. அதே சமயம் கரூர் சம்பவத்தை முன்வைத்து விஜய் தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பரவும் தகவல்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பின்னர் விஜய் விமானத்தில் இன்ப சுற்றுலா சென்றதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், விஜய் அருகில் விமான பெண் ஊழியர் இருப்பது போல உள்ளது.

Bahir Ali Immk Sikkal என்ற பேஸ்புக் பதிவர், “கரூர் இறப்புகள் குறித்து துளியும் கவலை இல்லாமல் வெளிநாடு இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார் நடிகர் ஜோசப் விஜய்” என்று விமர்சித்து புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

Full View

மேலும், இதே கருத்துடன் சமூக வலைதளங்களில் புகைப்படம் பகிரப்பட்டு வந்தது. பதிவு 1, பதிவு 2




உண்மை சரிபார்ப்பு

விஜய்யின் வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது 2023ஆம் ஆண்டு வெளியான பழைய புகைப்படம் என்பது தெரியவந்தது.

முதலில் கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் விமானப் பயணங்கள் மேற்கொண்டாரா என்பது குறித்து கூகுளில் தேடினோம். அதுபோன்ற எந்த செய்தி இணைப்புகளும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து விஜய் விமானத்தில் இருக்கும் வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் ஸ்பைஸ்ஜெட் விமானம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதே புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதை உறுதி செய்தோம். அதில் விஜய் மற்றும் விமான ஊழியருடன் நடிகை த்ரிஷா இருப்பதும் தெரிவந்தது.



ஸ்பைஸ்ஜெட் அந்த பதிவில், “இது சரியான தெரி'ஃபிக் காம்பினேஷன். எங்களைத் தேர்ந்தெடுத்த விஜய் மற்றும் திரிஷா ஆகியோருக்கு நன்றி. உங்கள் பயணத்தில் ஒரு பகுதியாக நாங்கள் இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்” என்று இடம்பெற்றிருந்தது.

மேலும் நமது தேடலில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் ஊடகம் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், “லியோ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் ஜீரோ டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்ற போது, விஜய்யும், த்ரிஷாவும் விமானத்தில் விமானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த புகைப்படத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


இதேபோல 2023 பிப்ரவரி மாதம் இதே புகைப்படத்தை டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளமும் பயன்படுத்தி உள்ளது. அதில், லியோ திரைப்படத்தின் அப்போதைய அப்டேட்டுகள் இடம்பெற்றிருந்தன.

இந்த ஆதாரங்கள் மூலமாக வைரலாகும் புகைப்படம் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்படவில்லை என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக 2023ஆம் ஆண்டு விமானத்தில் சென்றபோது எடுத்த புகைப்படத்தில் த்ரிஷாவை மட்டும் எடிட் செய்து நீக்கிவிட்டு, தற்போது எடுக்கப்பட்டது போல சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

முடிவு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய் இன்ப சுற்றுலா சென்றதாக தவறான தகவலுடன் புகைப்படம் வைரலாகி வருகிறது. உண்மையில் அது 2023ஆம் ஆண்டு லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும்போது எடுக்கப்பட்ட படம். ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு இன்ப சுற்றுலா சென்ற விஜய்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News