தமிழக காவல் நிலையத்தில் இளைஞர் மீது தாக்குதல் என பரவும் வீடியோ உண்மையா?
தமிழகத்தில் காவல் நிலையத்தில் இளைஞரை பெல்ட்டால் தாக்குவதாக தவறான தகவலுடன் வீடியோ வைtamilலாகிறது.

Claim :
தமிழக காவல் நிலையத்தில் இளைஞர் மீது கொடூரத் தாக்குதல் என பரவும் வீடியோFact :
உத்தர பிரதேச காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் அது. தமிழகத்தில் நடந்ததாக தவறாக பகிரப்படுகிறது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், திமுகவின் ஏவல் துறையாக காவல் துறை மாறிவிட்டதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருபுவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதனால் காவல் துறை மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களையும், புகார் அளிக்க வந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் வெளியாகி விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
பரவும் தகவல்
இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் இளைஞரை காவல் துறையினர் பெல்ட்டால் அடித்து துன்புறுத்துவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Hemand Kumar என்ற எக்ஸ் பதிவர், வைரல் வீடியோவைப் பகிர்ந்து, “விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தும் காவல்துறை.மன சாட்சி இல்லாத காட்டுமிராண்டிகள். காவல்துறை என்பதற்கு பதில பதிலாக காட்டுமிராண்டி துறை என அழைக்கலாம்?” என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.
இதே கருத்துடன் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ வைரலானது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து Telugupost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது.
முதலில் வைரல் வீடியோவை கூர்ந்து கவனித்தபோது, அது தமிழக போலீசாரின் சீருடை இல்லை என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து முக்கிய ப்ரேம்களை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் தேடினோம். அது நவ் பாரத் டைம்ஸ், ஈடிவி பாரத் இந்தி இணையதளங்களில் வெளியான செய்திகளுக்கு நம்மை அழைத்துச் சென்றது. வைரல் வீடியோவும், மேற்குறிப்பிட்ட செய்தித் தளங்களில் இருந்த புகைப்படங்களும் ஒரே சம்பவம்தான் என்பதை TeluguPost உறுதி செய்தது. அதன்படி, இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
நவ் பாரத் டைம்ஸ் 2025 ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “ உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள முங்கராபாத்ஷாபூர் காவல் நிலையத்தில் கொடூரமான முறையில் இளைஞர் தாக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏதோ வேலைக்காக காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு இன்ஸ்பெக்டர் வினோத் மிஸ்ராவிடம் அவர் சட்டம் பேசியதாகக் கூறப்படுகிறது.
இளைஞரின் வார்த்தைகளால் கடும் கோபமடைந்த இன்ஸ்பெக்டர், அந்த இளைஞர் மீது சரமாரியாக பெல்ட்டால் தாக்குகிறார். அப்போது அந்த இளைஞர் நகர முடியாதபடி இரண்டு போலீசார் அவரை தூணில் நிறுத்தி கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டனர். அந்த இளைஞர் வலியால் துடித்தபோதும் அவர் நிறுத்தாமல் அடித்தார். வினோத் மிஸ்ரா மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் 2025 ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “ஜான்பூர் முங்கராபாத்ஷாபூர் காவல் நிலையத்தில் இளைஞன் ஒரு வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். இதன் பின்னர், அவர் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான பிறகு, காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வினோத் மிஸ்ரா உட்பட 6 காவலர்களை எஸ்பி இடை நீக்கம் செய்துள்ளார். புதிய காவல் நிலைய பொறுப்பாளராக திலீப் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதே தகவல்கள் புகைப்படத்துடன் ப்ரி ப்ரஸ் ஜர்னல், டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் நமது தேடலில் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட எக்ஸ் பதிவை பார்த்தோம். அதில் வைரல் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல என்றும், உத்தர பிரதேச காவல் நிலையத்தில் ஒருவரை தாக்கிய வீடியோவை, தமிழ்நாட்டில் நடந்தது என்று தவறாக பரப்பி வருகிறார் என்றும் ஆதாரம் வெளியிட்டு விளக்கியுள்ளது.

