தவெக போராட்டம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதா? - உண்மை இதுதான்
தவெக போராட்டம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதாக வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது.

Claim :
தவெக போராட்டம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதாக பரவும் நியூஸ் கார்டுFact :
வைரல் நியூஸ் கார்டு போலியானது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நடிகர் விஜய் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக விஜய் அப்போது அறிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தவெக மாநில மாநாட்டில் பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் வெளிப்படையாக அறிவித்தார். அதே சமயம் பாஜகவை விட திமுகவை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார்.
கடந்த மாதம் இறுதியில் சிவங்கை மாவட்டம் திருபுவனம் அருகே அஜித்குமார் என்பவர் காவல் துறை விசாரணையின் போது அடித்து கொலை செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. திமுக ஆட்சியில் நடைபெற்ற காவல் மரணங்களுக்கு கண்டனம் தெரிவித்து தவெக சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. அதில், தவெக தலைவரும் நடிகருமான விஜய் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். போராட்டத்தில் விஜய் சில நிமிடங்கள் மட்டுமே பேசியதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
பரவும் தகவல்
தவெகவின் ஆர்ப்பாட்டம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதாக ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், “சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் மரணத்தைக் கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. வெறும் 26 நிமிடமே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மிகக் குறைந்த நேரத்தில் முடிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஆர்ப்பாட்டம் என லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Suresh AK என்ற எக்ஸ் பக்கத்தில், இது கேவலத்தின் உச்சம் என்று குறிப்பிட்டு நியூஸ் கார்டை பகிர்ந்து இருந்தார்.
thamizhselvi என்ற எக்ஸ் கணக்கில், இது எவ்வளவு கேவலமான சாதனை தெரியுமா 🤣 இந்த பெருமை எல்லாம் விஜய்க்கே என்று குறிப்பிடப்பட்டு இருந்தார்.
பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளக் கணக்குகளிலும் நியூஸ் கார்டு பகிரப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் நியூஸ் கார்டின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது போலியானது என்பது தெரியவந்தது.
வைரல் நியூஸ் கார்டு நியூஸ்7 தமிழ் பெயரில் ஜூலை 14 தேதியிட்டு வெளியாகி இருந்த நிலையில், அதன் சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்தோம். அதில், அப்படியான எந்த நியூஸ் கார்டையும் நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்தோம். இதுதொடர்பாக நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் வாசுதேவனை தொடர்புகொண்டு பேசினோம். அவர் வைரல் நியூஸ் கார்டு போலியானது என்றும், நியூஸ்7 தமிழ் அப்படியான எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
மேலும் நியூஸ் 7 தமிழ் எக்ஸ் பக்கத்திலும், வைரல் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, லிம்கா சாதனை புத்தகத்தில் தவெக போராட்டம் இடம்பெற்றுள்ளதாக வேறு ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என்பது குறித்து கூகுளில் சர்ச் செய்தோம். அதில் அப்படியான எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. அதேபோல இதுகுறித்து தவெகவின் சமூக வலைதளப் பக்கங்களில் ஆய்வு செய்தபோதும், அப்படியான எந்த அறிக்கைகளும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி அகிலனிடம் பேசினோம். அதில், “வைரலாகும் நியூஸ் கார்டு தவெக குறைந்த நேரம் மட்டுமே போராட்டம் நடத்தியதாக கேலி செய்யும் விதமாக திமுகவினரால் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பபட்டு வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். வரும் காலங்களில் எங்கள் போராட்டம் வீரியமாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.
மேலும் நமது தேடலில் தவெக போராட்டம் தொடர்பாக factcrescendo Tamil இணையதளம் வெளியிட்ட செய்தியைக் கண்டோம். அதில் வைரல் நியூஸ் கார்டு போலியானது என பதிவு செய்திருப்பதை உறுதி செய்தோம். அத்துடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த யூ டர்ன் என்ற உண்மை சரிபார்ப்பு ஊடகமும் தனது எக்ஸ் பக்கத்தில் வைரல் நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
முடிவு
தவெக போராட்டம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது. அதுபோன்ற எந்த நியூஸ் கார்டையும் நியூஸ்7 தமிழ் ஊடகம் வெளியிடவில்லை என்பது தகுந்த ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

