அகமதாபாத் விபத்திற்கு முன் புகையால் நிரம்பிய விமானக் கேபின் காணொளி – உண்மை என்ன?
புகையால் சூழ்ந்த ஏர் இந்தியா விமானம்-171 கேபின் என பரவும் காணொளி

Claim :
புகையால் சூழ்ந்த ஏர் இந்தியா விமானம்-171 கேபின் என பரவும் காணொளிFact :
அகமதாபாத் விமான விபத்துக்கு முன் ஏர் இந்தியா விமானம்-171 கேபினுக்குள் புகை நிரம்பியதாக பரவும் காணொளி உண்மையில் 2020 இல் ரொமேனியாவில் நிகழ்ந்த ரியானேர் விமான சம்பவம் ஆகும்.
Factcheck: வைரலாக பரவும் காணொளி தற்போதையது அல்ல. இது ஒரு பழைய காட்சி. இது 2020ஆம் ஆண்டு 2020 ஜனவரியில் ரொமேனியாவில் நிகழ்ந்த சம்பவம் ஆகும். இதற்கும் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்திற்கும் தொடர்பில்லை.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 279 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுக்க விமானபயணம் குறித்த பாதுகாப்பு அம்சங்களை கேள்விக்குரியதாக மாற்றியுள்ளது. இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னையை நோக்கி கிளம்பிய விமானம் ஒன்று நடுவானில் இன்ஜின் பழுது காரணமாக மீண்டும் திரும்பிச்சென்று தரையிறங்கியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து உத்தரப்பிரதேசம் வந்த விமானம் ஒன்று தரையிறங்கும் போது சக்கரத்தில் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் பாதிப்பின்றி தப்பியுள்ளனர். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் விமான பயணத்திற்கான பாதுகாப்பு அம்சங்களை இன்னும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகிறது.
இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் விமானப் பயணிகள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும், மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பல்வேறு காணொளிகள் வேகமாக பரவுகின்றன. அகமதாபாத் ஏர் இந்தியா விமானம்-171 விபத்துடன் தொடர்புபடுத்தி ஒரு பதற்றத்தை தூண்டும் காணொளி வைரலாகியுள்ளது. இந்த காணொளியில் வரும் காட்சிகளில், விமானக் கேபினில் புகை நிரம்பி பயணிகள் பயத்தோடு சுவாசிக்க சிரமப்படும் கடைசி நிமிடம் போல் காட்டப்பட்டுள்ளது.
"அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சில நிமிடங்களுக்கு முன்பு விமானக் கேபினில் புகை நிரம்பி பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள் " எனக் கூறி, ஒரு காணொளி ஜூன் 13, 2025 அன்று Threads-ல் marieannensalaf என்ற பயனாளி பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில், அகமதாபாத் விமான விபத்தின் 'கடைசி நிமிடங்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அப்பதிவின் கருத்துகள் அடங்கிய இணைப்பினை இங்கே காணலம்.
இதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவும் தகவல்கள் அடங்கிய இணைப்பினை இங்கே காணலாம்
உண்மை சரிப்பார்ப்பு :
தெலுங்கு போஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு மக்களை விமான பயனம் என்றால் அச்சத்தினை தூண்டும் இந்த காணொளியினை தகலாய்வு செய்தது. முதலில் இதனை அடையாளம் காண Google Reverse Image Search மற்றும் முக்கியமான வார்த்தைகளை கொண்டும் தேடுதல் நடத்தப்பட்டது. இதன் மூலம், 2020 ஜனவரியில் ரொமேனியாவில் நிகழ்ந்த சம்பவம் குறித்த NDTV, Daily Mail உள்ளிட்ட ஊடக அறிக்கைகள் இணையத்தில் பதிவிட்ட செய்தி வெளியீடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.
மேலும், செய்தி ஊடகங்களில் குறிப்பிட்ட ரியானேர் விமானத்தின் உள்ளமைப்பில் மஞ்சள் நிற இருக்கைகள் இருப்பதை வைரல் காணொளியில் காண முடிந்தது. அதேவேளை, அகமதாபாத் விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும், இது ஒரு பெரிய விமானமாகும்; ரொமேனியாவில் புகை பரவிய விமானம் குறுகிய தூர பறக்கும் சிறிய விமானம்.
கடந்த ஜூன் 12, 2025 அன்று புறப்பட்ட AI171 விமானம், தொழில்நுட்ப கோளாறால் விமான நிலையத்திலிருந்து சில கிலோமீட்டரில் மேக்னானிகரின் மருத்துவ கல்லூரி அருகே மோதியது. 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்த ஒரே நபர், விஸ்வாஷ் குமார் ரமேஷ். முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த காணொளிக்கும் அகமதாபாத் விமான விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை தெலுங்கு போஸ்ட் தகவலாய்வு குழு இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ ரொமேனியாவில் ஜனவரி 2020 இல் புக்கரெஸ்டிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ரியானேர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், புகை பரவியதைக் காட்டுகிறது. அப்பொழுது யாரும் காயமடையவில்லை, ஆனால் பயணிகள் அவசர நிலையை எதிர்கொண்டனர். இது சர்வதேச ஊடகங்களாலும், சமூக ஊடக பதிவுகளாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பதிவின் விவரம் அடங்கிய சமூக ஊடக இணைப்பு:
முடிவு:
அகமதாபாத் விமான விபத்துக்கு முன் விமானக் கேபினுக்குள் புகை நிரம்பியதாக பரவும் காணொளி உண்மையில் 2020 இல் ரொமேனியாவில் நிகழ்ந்த ரியானேர் விமான சம்பவம் ஆகும். சமூக ஊடகங்களில் உண்மை தன்மையை அறியாமல் தகவல்கள் பகிரப்படும் சூழ்நிலையில், இவ்வாறு தவறான தகவல்களால் மக்கள் குழப்பமடையும் அபாயம் உள்ளது. உண்மைகளை உறுதிப்படுத்தாமல் பகிர்வது தவிர்க்கப்பட வேண்டும்.