Fri Dec 05 2025 12:23:37 GMT+0000 (Coordinated Universal Time)
உண்மை சரிபார்ப்பு: திருச்சி 20-வது வார்டு நீர்த்தேக்கத் தொட்டியில் கிடந்தது உணவுக் கழிவுகள்!
திருச்சியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக வெளியான செய்திகள் பொய் என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.

Claim :
வேங்கைவயல் போல மற்றொரு சம்பவமாக திருச்சியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது.Fact :
திருச்சி நீர்த்தேக்கத் தொட்டியில் கிடந்தது உணவுக் கழிவுகள் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வாழ்ந்து வரும் பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கக் குடிநீர் தொட்டியில், 2022-ஆம் ஆண்டு மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இது தணிவதற்குள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுபோன்ற மற்றொரு பிரச்னை தலைதூக்கியது.
திருச்சி மாநகராட்சி காந்தி சந்தை அருகேயுள்ள 20-ஆவது வார்டு வடக்குத் தையக்காரத் தெருவில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான ஊடகங்கள் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருக்கும் ஐபிசி தமிழ் ஊடகம், ‘திருச்சி காந்தி மார்க்கெட் அருகே 20வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில்’ என்றிருக்கும் அந்த செய்தியில், ‘மக்கள் தொட்டியின் மேலே சென்று பார்த்தபோது பாலித்தின் பையில் சுற்றப்பட்ட மனிதக் கழிவு இருப்பது தெரிய வந்தது. இதையறிந்த வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர், மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் அளித்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதேபோல ‘தினமலர்’ இணையதளத்தில் திருச்சி மாநகராட்சியின் தண்ணீர் தொட்டியில், மனித மலம் வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘ஒன்-இந்தியா’ டிஜிட்டல் தளமும், “வேங்கைவயல் சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு கொடூரம் திருச்சியில் நடந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியின் மீது ஏறிய சிலர், மனிதக் கழிவைக் கலந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது” என்று தொடங்கும் செய்தியை பதிவு செய்திருக்கிறது.
இதைபோலவே, ‘தமிழ் ஜனம்’ ‘இந்து தமிழ் காமதேனு’ செய்தித் தளங்களில் திருச்சியில் உள்ள 20-ஆவது வார்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது
வைரல் பதிவின் இணைப்பு இங்கே உள்ளது.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
Telugupost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த செய்தி உண்மையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டோம். முதலாவதாக, ‘திருச்சி மனிதக்கழிவு’ என்று கூகுளில் தேடியபோது, பெரும்பாலான செய்தித் தளங்களின் செய்தி விவரங்கள் காட்டப்பட்டது. அதிலிருந்து திருச்சியை அடிப்படையாக கொண்டு இயங்கும், ‘ராக்ஃபோர்ட் டைம்ஸ்’ தளத்தை பார்வையிட்டோம். அதில் வெளியான செய்தியின் உண்மை நிலவரம் கூறப்பட்டிருந்தது.
அதில், இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டியளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நீர்த்தேக்கத் தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்டது மனிதக்கழிவு அல்ல எனவும், உணவுக் கழிவுகள் தான் தொட்டியில் கிடந்தது எனவும் அவர் கூறியாதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, வேறேதும் தளங்களில் இவரது பேட்டி தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளதாக என்பதை அறிய, ‘மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் விளக்கம்’ என்று இணையத்தில் தேடியதில், ‘ஈடிவி பாரத் தமிழ்நாடு’ செய்தித் தளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பதிலளிக்கையில், “திருச்சி மாநகராட்சி வார்டு 20 தையல்கார தெரு பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. ஆனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அந்த பகுதியில் வசிக்கக் கூடிய யாரோ ஒரு நபர் உணவுப் பொட்டலங்களை வீசி விட்டு சென்றுள்ளார். இது குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. பொய்யான தகவல்களை பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் எச்சரிக்கை விடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் பேசிய காணொளியும் இந்த செய்தியில் இணைக்கப்பட்டிருந்தது.
முடிவாக, இது தொடர்பாக வேறு யாரேனும் மறுப்புத் தெரிவித்துள்ளனரா என்பதை சமூக வலைத்தளங்களில் தேடி பார்த்தபோது, தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் தளம், தங்களின் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தது. அந்த பதிவில், “திருச்சியில் நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவு வீசப்பட்டதாகப் பொய் செய்தி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் இணைக்கப்பட்ட புகைப்படத்தில், “திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டிற்காக ஆழ்குழாய் கிணற்றுடன்கூடிய தண்ணீர் தொட்டி உள்ளது. 05.02.2025 அன்று இந்தத் தொட்டியின் மேல் பகுதியில் மனித கழிவுகள் உள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. அங்கு நேரில் ஆய்வு செய்தபோது தொட்டியின் மேல் பகுதியை மூடும் ஆர்.சி.சி.சிலாப் மீது உணவு பொட்டலம் வீசப்பட்டது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் தொட்டி முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டது. தண்ணீர் தொட்டியின் மீது காணப்பட்டது மனிதக் கழிவு அல்ல," என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
மேற்கூறப்பட்ட தணிக்கை முடிவுகளின்படி, திருச்சி மாநகராட்சி 20-ஆவது வார்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்படவில்லை என்பது உறுதியானது. இதன்படி, மனிதக்கழிவுகள் இருந்தது என்று பதிவிடப்பட்டிருக்கும் அனைத்து செய்தியும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. போலியான செய்திகளை பரப்புவது சட்டப்படி குற்றம் என்பதை மக்கள் புரிந்துகொள்வது அவசியமாகும். எனவே, செய்திகளைப் பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.
Claim : திருச்சியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக வெளியான செய்திகள் பொய் என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.
Claimed By : News Websites
Claim Reviewed By : TeluguPost FactCheck
Claim Source : News Websites
Fact Check : Partly False
Next Story

