சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார்தாரரை தாக்கிய போலீஸ் எஸ்ஐ.. வைரலாகும் பழைய வீடியோ
புகார் அளிக்க வந்தவரை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் என பரவும் வீடியோ பழையது. 2019ஆம் நடந்த சம்பவத்துடன் தொடர்புடையது.

Claim :
சமீபத்தில் புகார் அளிக்க வந்தவரை தாக்கிய எஸ்.ஐ என திமுக அரசை விமர்சித்து பரவும் வீடியோFact :
வைரல் வீடியோ பழையது, 2019ஆம் ஆண்டு முதலே சமூக வலைதளத்தில் உள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, குற்றப் பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம் என சுமார் 2,000க்கும் அதிகமான காவல் நிலையங்கள் உள்ளன. இதில் தங்கள் பிரச்னைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புகார் அளிக்க வருகை தருகின்றனர். புகார் அளிக்க வரும் மக்களிடம் காவல் துறையினர் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-ன்படி இந்திய குடிமகனின் அடிப்படை உரிமையாகும்.
காவலர்கள் கண்ணியமாக நடந்துகொள்ளவில்லை என்றால், அது மனித உரிமை மீறலாகக் கருதப்படும். ஆனால், தமிழக காவல் நிலையங்களில் பல இடங்களில் புகார் அளிக்க வருபவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவது இல்லை. மாறாக அவர்களை காவல் துறையினர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பொது மக்களிடம் காவல் துறையினர் அத்துமீறும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
பரவும் தகவல்
இந்த நிலையில் புகார் அளிக்க வந்த நபரை சப் இன்ஸ்பெக்டர் தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் புகார் அளித்துக் கொண்டிருக்கும் நபரை பார்த்த எஸ்.ஐ, கடுமையான வார்த்தைகளால் திட்டி அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பகிர்ந்து பலரும் தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
வைரல் வீடியோவைப் பகிர்ந்த செந்தில் குமார் பெ என்ற எக்ஸ் பதிவர், “புகார் கொடுக்க வந்த நபரை தகாத வார்த்தையில் பேசி தாக்கும் காவல்துறை அதிகாரி. தமிழக ஆட்சியின் அவலங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் DMKFailsTN எனக் குறிப்பிட்டதோடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தையும் டேக் செய்திருந்தார்.
மேலும் சில சமூக வலைதளப் பக்கங்களிலும் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3 இந்த வீடியோ வைரலானது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்த TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணையில் அது பழைய வீடியோ என்பது தெரியவந்தது.
முதலில் வைரல் வீடியோவின் இடது ஓரம் டிக் டாக் லோகோ இருந்ததை கவனித்தோம். இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு 2020ஆம் ஆண்டு முதல் தடை இருந்து வருவதால், வைரல் வீடியோ அதற்கு முந்தையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு Telugu Post உண்மை கண்டறியும் குழு உட்படுத்தியது. முடிவில் வைரல் வீடியோ 2019ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி Independent Taxi Driver, Kutty sornaakka Army ஆகிய பேஸ்புக் பக்கங்களில் வெளியாகியுள்ளதை கண்டுபிடித்தோம்.
அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவந்த நபரை அசிங்கமாக திட்டி,தாக்குகிறார் காவல்துறை ஆய்வாளர் சண்முகம். சட்டம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்வரை பகிருங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் உறுதிப்படுத்துதலுக்காக எஸ்.ஐ சண்முகம், சின்னசேலம் காவல் நிலையம் உள்ளிட்ட கீ வேர்டுகளுடன் கூகுளில் சர்ச் செய்தோம். அதில் 2019ஆம் ஆண்டு ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.
ஒன் இந்தியா தமிழ் இணையதளம் வெளியிட்ட செய்தியில், “சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளைஞரை பார்த்து எஸ்ஐ அவரின் புகார் குறித்து விரிவாகக் கூட கேட்காமல், தகாத வார்த்தைகளால் திட்டி கண்ணத்தில் அறைகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
தி இந்து ஆங்கில இணையதளம் வெளியிட்ட செய்தியில், “புகார்தாரரை சப்-இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தைகளால் திட்டி அறைந்தபோது, சுற்றி நின்றிருந்த போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, சப் இன்ஸ்பெக்டர் சண்முகத்தை காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆயுதப்படைக்கு மாற்றினார்” என்று தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா வைரலாகும் வீடியோவை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “சின்னசேலத்தில் லாரி ஓட்டுநரை திட்டி, அறைந்ததற்காக சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். தனது லாரியை வியாபாரி தடுத்து வைத்திருப்பது குறித்து புகார் அளிக்க ஓட்டுநர் வந்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஓட்டுநரிடம் வியாபாரியைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வரச் சொன்னார். வியாபாரியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஓட்டுநர் தோல்வியடைந்து மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்தார், எஸ்ஐ திட்டி அவரை அறைந்தார். எஸ்ஐ சண்முகம் விழுப்புரம் ஆயுதப்படை ரிசர்வ் பிரிவுக்கு மாற்றப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.
இதேபோல சமயம் தமிழ் யூட்யூப் பக்கத்தில், புகார் அளிக்க வந்தவரை தாக்கிய எஸ்ஐ இடமாற்றம் என வீடியோவுடன் செய்தி பகிரப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் மூலமாக வைரலாவது 2019ஆம் ஆண்டு வெளியான பழைய வீடியோ என்பதை உறுதி செய்தோம். ஆனால், தற்போது நடந்த சம்பவம் போல திமுக அரசை விமர்சனம் செய்து வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. சம்பவம் நடந்தபோது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது.
முடிவு
புகார் அளிக்க வந்தவரை தாக்கிய எஸ்ஐ என பரவும் வீடியோ அண்மையில் எடுக்கப்பட்டது அல்ல. 2019ஆம் ஆண்டு வெளியான பழைய வீடியோ என்பதும் அப்போதே எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிட வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.