தமிழகத்தில் ஜூன் 9ஆம் தேதிதான் பள்ளிகள் திறப்பா? - உண்மை இதுதான்
தமிழகத்தில் ஜுன் 9ஆம் தேதிதான் பள்ளிகள் திறப்பு என பரவும் தகவல் தவறானது. ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

Claim :
தமிழகத்தில் ஜூன் 9ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பரவும் தகவல்Fact :
ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலான இந்த விடுமுறையை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் செலவழித்து வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதனால் அடுத்த கல்வி ஆண்டு எப்போது தொடங்கும் என்ற கேள்விகள் எழுந்தன.
கடந்த ஆண்டுகளில் கோடை வெயில் ஜூன் வரை நீடித்ததன் காரணமாக பள்ளிகள் சற்று தாமதமாகவே தொடங்கின. அந்த வகையில் இந்த ஆண்டும் மே பாதி நாள் வரை தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் எப்படியும் வெயிலை காரணம் காட்டி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும், விடுமுறை அதிக நாட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் கோடை வெயில் இந்த வருடம் சற்று குறைவாகவே இருந்தது. அதேபோல கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல இடங்களில் மழையும் பெய்து வருகிறது.
பரவும் தகவல்
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் ஜூன் 9ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது.
fahadfarish15 என்ற இன்ஸ்டாகிராம் பயனர் தனது பக்கத்தில், “ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு கிடையாது. 1 முதல் 12ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதி. அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு” என்று குறிப்பிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்தார்.
வீராசாமி திருநாவுக்கரசு என்ற பேஸ்புக் பயனர் “ஜூன் 9ஆம் தேதி பள்ளிகள் திறப்பு” என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இணைப்பு 1, இணைப்பு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் ஜூன் 9ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக சொல்லப்பட்டிருந்தது.
அத்துடன் சித்ரா தேவி என்கிற எக்ஸ் பயனர், “இது ஸ்கூல் க்ரூப்ல வேகமா பரவிட்டு இருக்குது. பேக் நியூஸ்தானே ??” என்று சந்தேகம் எழுப்பி இருந்தார்.
உண்மை சரிபார்ப்பு
ஜூன் 9ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என வைரலாகும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில் அது தவறான தகவல் என்று தெரியவந்தது.
முதலில் வைரலாகும் நியூஸ் கார்டு சன் நியூஸ் பெயரில் இருந்ததால் அதன் சமூக வலைதளப் பக்கங்களில் ஆய்வு செய்தோம். அதில், அப்படியான எந்த நியூஸ் கார்டையோ, செய்தியையோ சன் நியூஸ் அண்மையில் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்துகொண்டோம்.
மேலும் உறுதிப்படுத்துதலுக்காக சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவில் பணியாற்றும் தினேஷை தொடர்புகொண்டபோது, அப்படியாக தாங்கள் எந்த செய்தியையும் வெளியிடவில்லை, நியூஸ் கார்டு போலியானது என்று விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து பள்ளிகள் திறப்பு தொடர்பாக தமிழக அரசு ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக என்பது குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு தேடியது. அதில் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என அண்மையில் வெளியான சில செய்தி அறிக்கைகள் கிடைத்தன.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியில், “2025-26 கல்வியாண்டிற்காக தமிழகம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 2 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி இந்து தமிழ் வெளியிட்ட செய்தியில், கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும், தினத் தந்தி, ஒன் இந்தியா தமிழ் ஆகியவையும் இந்த தகவலை உறுதிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.
இதேபோல ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட அதிகாரப்பூர்க சுற்றறிக்கையும் TeluguPost உண்மை கண்டறியும் குழுவுக்கு கிடைத்தது. அதில், “பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் நன்றாக தூய்மைபடுத்தப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டடங்கள் அல்லது இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவர்கள் இருந்தால் அதனை மாணவர்கள் அணுகாத வகையில் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்” என பல வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தன.
பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக நடத்திய ஆலோசனை தொடர்பாக தந்தி டிவி செய்தியும் வெளியிட்டுள்ளது.
மேலும் வைரல் கார்டை பகிர்ந்த தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம், தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ம் தேதி திறப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது என்று தெரிவித்து இருந்தது.
இந்த ஆதாரங்கள் மூலமாக ஜூன் 2ஆம் தேதிதான் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்பது உறுதியாகியுள்ளது.
முடிவு
தமிழகத்தின் ஜூன் 9ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது. ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்ப்பு வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

