மதுரையில் இறைச்சி விற்பனையை தடை செய்வேன் என இயக்குநரும் என்.டி.ஏ வேட்பாளருமான சுந்தர்.சி கூறினாரா?
மதுரையில் இறைச்சி விற்பனையை தடை செய்வேன் என சுந்தர்.சி கூறியதாக தவறான தகவலுடன் நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது.

Claim :
மதுரையில் இறைச்சி விற்பனையை தடை செய்வேன் என சுந்தர்.சி. பேசியதாக நியூஸ் கார்டு வைரல்Fact :
இறைச்சி விற்பனையை தடை செய்வேன் என சுந்தர்.சி கூறவில்லை
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், சசிகலா - ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவி வருகிறது. மதுரை மத்தி தொகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திமுக சார்பில் 3வது முறையாக களம் காண்கிறார்.
அதிமுக கூட்டணியில் மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி அறிவிக்கப்பட்டு உள்ளார். சுந்தர்.சி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். இதனால் மற்ற தொகுதிகளை விடவும் மதுரை மத்தி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் வேட்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
பரவும் தகவல்
நான் வெற்றிபெற்று வந்தால் புனித தலமான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ள மதுரை மத்தி தொகுதியில் இறைச்சி விற்பனையை தடை செய்து கோவில் நகரத்தின் புனிதத்தை காப்பேன் என சுந்தர்.சி வாக்குறுதி அளித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
வைரல் நியூஸ் கார்டைப் பகிர்ந்த @Amutha74247715 என்ற எக்ஸ் பதிவர், “பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள் ❗. இனிமேல் பாண்டிமுனிஸ்வரன் கோயிலில் கிடா வெட்டு கிடையாது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
@SJB56856832 என்ற பதிவரோ, “இதை பேசாமல் இருந்திருந்தால் டெபாசிட்டாவது கிடைத்திருக்கும்” என்று குறிப்பிட்டு வைரல் கார்டை பகிர்ந்தார்.
மேலும் பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் வைரல் கார்டு ஷேர் செய்யப்பட்டு சுந்தர்.சி. மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் நியூஸ் கார்டின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில் அதில் உள்ளது தவறான தகவல் என்பது தெரியவந்தது. உண்மையில் சுந்தர்.சி. அப்படியாக எந்த இடத்திலும் பேசவில்லை.
முதலில் Political Talkies நிறுவனம் அந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைதளப் பக்கத்தில் சரிபார்த்தபோது, வைரல் கார்டு இருப்பதை உறுதி செய்துகொண்டோம். இதனையடுத்து சுந்தர்.சி. இறைச்சி கடைகளை மூடுவது தொடர்பாக ஏதாவது பேசியுள்ளாரா என்பது குறித்து தேடினோம். அப்படியான எந்த செய்தி அறிக்கைகளோ அல்லது பேட்டிகளோ நமக்கு காணக் கிடைக்கவில்லை.
அதே சமயம் தான் இறைச்சி கடைகளை மூடுவேன் என தெரிவிக்கவில்லை என்று சுந்தர்.சி. விளக்கம் அளித்துள்ளதாக விகடன், புதிய தலைமுறை செய்திகள் வெளியிட்டுள்ளதை கண்டறிந்தோம். அதில் சுந்தர்.சி. தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் பதிவிட்டுருந்ததாக இருந்தது.
சுந்தர்.சி. தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள மறுப்புப் பதிவில், “தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி கடைகளை மூடுவேன் என நான் சொன்னதாக பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கத் தெரிந்தவன் நான் என்பது மக்களுக்கே தெரியும்.
போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியம் இன்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான நடவடிக்ககைகளுக்கு நமது ஒற்றுமை மற்றும் வெற்றியால் பதிலடி தருவோம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல சுந்தர்.சி. மனைவியும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு வைரல் நியூஸ் கார்டில் சுந்தர்.சி. பேசியதாக போலி நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது திமுகதான் என விமர்சனம் செய்தார். அதில், “ஒரு நேர்மையான மனிதரின் நேர்மையை எதிர்கொள்ளத் தவறும்போது, அவர்கள் இதுபோன்ற போலிக் கதைகளைக் கூறி பதிலடி கொடுக்கிறார்கள். திமுக பயந்து போயிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆதரவைப் பெறுவதற்காக இதுபோன்ற பொய்க் கதைகளைப் பரப்புவது எதிர்விளைவையே ஏற்படுத்தும். மதுரை மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள், அவர்கள் சுந்தர்.சி. உடன் நிற்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆதாரங்கள் வாயிலாக வைரல் நியூஸ் கார்டில் உள்ள தகவல்களில் உண்மை இல்லை, சுந்தர்.சி. அவ்வாறு கூறவில்லை என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு
தான் வென்றால் மதுரை மத்தி தொகுதியில் இறைச்சி விற்பனையை தடை செய்வேன் என சுந்தர்.சி. பேசியதாக தவறான தகவலுடன் நியூஸ் கார்டு வைரலாகிறது. அந்த நியூஸ் கார்டில் உண்மையில்லை என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தகவல்களை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிட TeluguPost உண்மைக் கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

