மோசமான சாலையில் நடந்து செல்லும் மாணவர்கள்.. பரவும் பழைய வீடியோ
சேறும் சகதியுமான சாலையில் மாணவர்கள் நடந்து செல்வதாக 2019ஆம் ஆண்டு வெளியான பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Claim :
சேறும் சகதியுமான சாலையில் நடந்து செல்லும் மாணவர்கள்Fact :
2019ஆம் ஆண்டு வெளியான பழைய வீடியோ இப்போது மீண்டும் வைரலாகிறது
தமிழகத்தில் அனைத்து துறைகளையும் விட கல்விக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. மாணவர்கள் நலனுக்காகவே காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தின் கல்வித் தரம் இந்திய அளவில் சிறப்பாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தமிழகத்தில் கல்வித் தரம் சரியில்லை, பாடத் திட்டமும் சரியாக இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட திமுக அரசு செய்துத் தரவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
பரவும் தகவல்
கோடை முறைக்குப் பின்னர் ஜூன் 2ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. சேறும் சகதியுமான மோசமான சாலையில் கஷ்டப்பட்டு மாணவர்கள் நடந்து பள்ளிக்கு செல்வதாக திமுக அரசை விமர்சனம் செய்து 20 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
Political News 24x7 என்ற எக்ஸ் பக்கத்தில், “டம்மி அப்பாவின் சாதனை. கோபாலபுர கோமாளியின் ஆட்சியை எவரும் குறை சொல்ல முடியாது. குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்கின்றார்கள். கேவலத்தின் உச்சம் திமுக ஆட்சி. திமுக கேடு தரும்” என்று குறிப்பிட்டு வீடியோவைப் பகிரப்பட்டு இருந்தது.
டம்மி அப்பாவின் சாதனை!#கோபாலபுர_கோமாளி யின் ஆட்சியை எவரும் ர
— Political News 24x7🔥 (@Mahi1987Mass) June 10, 2025
குறை சொல்ல முடியாது!!
குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக செல்கின்றார்கள்!!!
கேவலத்தின் உச்சம் திமுக ஆட்சி #திமுக_கேடு_தரும் pic.twitter.com/lVWcQNkMwA
மேலும் இதே கருத்துடன் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3, இணைப்பு 4 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோ வெளியிடப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு நடத்திய விசாரணையில், அது பழைய வீடியோ என்பது தெரியவந்தது.
முதலில் வைரல் வீடியோவை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தியபோது, நமக்கு தொடர்புடைய வீடியோக்கள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து வீடியோவில் பேசும் நபர், ‘நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா செட்டிக்கட்டளையில் இருந்து ஓடக்கரை பள்ளிக்கு செல்கிறோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார். நாகை மாவட்டத்தில் இருந்து பிரிந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால் இது பழைய வீடியோவாக இருக்குமோ என TeluguPost உண்மை கண்டறியும் குழு யூகித்தது.
இதனை உறுதி செய்வதற்காக செட்டிக்கட்டளை, ஓடக்கரை பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் சர்ச் செய்தோம். அதில் 2019ஆம் ஆண்டே இது தொடர்புடைய வீடியோக்கள் வெளியானதை உறுதி செய்தோம்.
Mayavaram Memes என்ற பேஸ்புக் பக்கத்தில் 2019ஆம் ஆண்டு, “மயிலாடுதுறை பள்ளி செல்ல திணறும் மாணவர்கள் சேறு நிறைந்த பாதையில் பயணம்...!!! 2 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று வரும் மாணவர்கள்” என்ற கேப்ஷனோடு வீடியோ வெளியாகி இருந்தது.
மேலும் இதுதொடர்பாக 2019ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி வெளியான செய்தி அறிக்கைகளும் நமக்கு கிடைத்தன. விகடன் வெளியிட்ட செய்தியில், “நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செட்டிக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் ஓடக்கரை கிராமத்திலுள்ள பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்குச் செல்ல ஓடக்கரை மண் சாலை மட்டுமே உள்ளது. 2 கி.மீ தூரமுள்ள இந்த மண் சாலை சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் கற்சாலையாக மாற்றப்படவில்லை.
ஓடக்கரை பள்ளிக்கு செல்லும் சுமார் 20 மாணவர்கள், தினமும் சகதியில் செல்வதால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பெரும்பாலும் மழைக்காலத்தில் சுமார் இரண்டு மாத காலத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு `குட்பை' சொல்லி விடுகின்றனர். கல்வியும் தடைபடுகிறது. ஆகவே, இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதேபோல இடிவி பாரத் வெளியிட்ட செய்தியில், “செட்டிக்கட்டளையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் இச்சாலை சேறும் சகதியுமாகவுள்ளது. பள்ளிக் குழந்தைகள் கடந்த ஒருவாரமாக சேற்றைக் கடந்தவாறே பள்ளிக்குச்செல்கின்றனர். பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, போர்க்கால அடிப்படையில் சாலையை சீர் செய்து தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், பாலிமர் டிவி தனது யூட்யூப் பக்கத்தில் ‘சேறு சகதியுமான சாலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்’ என்ற தலைப்பில் வீடியோ பதிவிட்டுள்ளது. அதிலும், “மண் சாலை தொடர் மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறிவிட்டதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே, புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் இதுதொடர்பாக வெளியான செய்திகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. இந்த ஆதாரங்கள் மூலமாக வைரலாகும் வீடியோ 2019ஆம் ஆண்டு வெளியானது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதிப்படுத்தியுள்ளது.