காவல் மரணம் : ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்ததாக சீமான் பாராட்டினாரா?
திருப்புவனம் காவல் மரண விவகாரத்தில் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என சீமான் பேசியதாக வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது.

Claim :
காவல் மரண விவகாரத்தில் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்ததாக சீமான் பாராட்டுFact :
வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது. காவல் மரண விவகாரத்தில் தமிழக அரசுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது போலீசார் கடுமையாக தாக்கியதில், அஜித்குமார் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
காவல் மரண விவகாரத்தில் தொடர்புடைய ஆறு காவலர்கள், திருப்புவனம் டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அஜித் குமார் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில், இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அஜித் குமார் குடும்பத்தினரிடமே முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் பேசி மன்னிப்பு கேட்டார். மேலும் அஜித்குமாரின் தம்பிக்கு அரசின் சார்பில் நிரந்தர வேலையும், இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கும் சிபிஐக்கும் மாற்றப்பட்டுள்ளது.
பரவும் தகவல்
காவல் மரண விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்ததாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, திருப்புவனம் லாக்அப் மரண விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை சீமான் வரவேற்றது போல அந்த நியூஸ் கார்டு பரப்பப்படுகிறது.
Guy Fawkes என்ற எக்ஸ் கணக்கில் வைரல் நியூஸ் கார்டை பகிர்ந்து, “இப்படி எல்லாம் பேசுற ஆள் இல்லையே??? ஓ புது மாசம் பொறந்துடுச்சா” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
தமிழ்அரசன் என்ற பதிவர், “இன்னைக்கு செவ்வாய்க்கிழமை அதனால இப்படி.நாளைக்கு வேற மாதிரி பேசுவார்” என்று குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார்.
மேலும் இணைப்பு 1, இணைப்பு 2 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் வைரல் நியூஸ் கார்டு பகிரப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
திமுக அரசை சீமான் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காவல் மரண விவகாரத்தில் அரசை ஆதரித்துப் பேச வாய்ப்பில்லை என்று தோன்றியது. இதனையடுத்து, வைரல் நியூஸ் கார்டின் உண்மைத் தன்மையை சரிபார்க்க TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணையில் இறங்கியது.
புதிய தலைமுறை லோகோவுடன் ஜூலை 1ஆம் தேதியிட்டு நியூஸ் கார்டு வைரலாகி வருவதால், அதன் சமூக வலைதளப் பக்கங்களை ஸ்கேன் செய்தோம். ஆனால், அதுபோன்ற எந்த நியூஸ் கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பதை உறுதி செய்தோம். இதுதொடர்பாக புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளர் மதலை ஆரோனிடம் பேசியபோது, வைரல் நியூஸ் கார்டு போலியானது என்பதை விளக்கினார். மேலும், உண்மையான நியூஸ் கார்டையும் நமக்கு அனுப்பி வைத்தார்.
நாம் தமிழர் கட்சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை தேடினோம். நாதக ஐடி விங் பக்கத்தில், “இது போன்ற எந்த ஒரு செய்தியும் அண்ணன் சீமான் அவர்களிடம் இருந்து வெளிவரவில்லை . இது ஒரு பொய் செய்தி” என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
மேலும் திருப்புவனம் காவல் மரண விவகாரத்தில் சீமான் என்ன கருத்து தெரிவித்து உள்ளார் என்பதை Telugupost உண்மை கண்டறியும் குழு தேடியது.சீமான் தனது எக்ஸ் கணக்கில், “அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள். நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே சாட்சி. ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உருகிய முதல்வருக்கு தம்முடைய ஆட்சியில், தாம் நேரடியாக நிர்வகிக்கும் துறையின் கீழ் நடைபெறும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா?” என்றெல்லாம் காட்டமாக குறிப்பிட்டுள்ளதை உறுதி செய்தோம்.
2nd Floor Tamil என்ற யூட்யூப் சேனலுக்கு சீமான் அளித்த பேட்டியில், “காவல் மரண விவகாரத்தில் அரசு தவறிழைத்து மிகவும் மெத்தனப் போக்குடன் இருந்தது. யாருக்காக அஜித்தை கொலை பண்ணீங்க ?” என்றெல்லாம் விமர்சனங்களை முன்வைத்தார்.
ஆக, காவல் மரண விவகாரத்தில் தமிழக அரசுக்கு சீமான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டோம்.
முடிவு
காவல் நிலைய மரண விவகாரத்தில் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக சீமான் பேசியதாக வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது. உண்மையில் சீமான் தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.