முருகன் மாநாட்டில் பக்தர்களுக்கு மது விநியோகம் என பரவும் வீடியோ உண்மையா?
அண்மையில் நடந்த முருகன் மாநாட்டில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு மது விநியோகம் என பரவும் வீடியோ 2024ஆம் ஆண்டே வெளியானது.

Claim :
முருகன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு மது விநியோகம் என பரவும் வீடியோFact :
வைரல் வீடியோ 2024ஆம் ஆண்டே வெளியாகியுள்ளது. அதற்கும் முருகன் மாநாட்டிற்கும் தொடர்பு இல்லை.
இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோயிலில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22ஆம் தேதி நடைபெற்றது. சென்னை, திருச்சி, கோவை என தமிழகம் இருந்து பாஜகவினரும், முருக பக்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.முன்னதாக மாநாட்டு அமைக்கப்பட்டு இருந்த முருகனின் அறுபடை வீடுகள் மாதிரியைக் காண மதுரை பகுதி சுற்றுவட்டார மக்களும் சென்று வந்தனர். மாநாட்டில் இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும், அறநிலையத்துறை கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார். அதே சமயம் முருக பக்தர்கள் மாநாட்டை அரசியல் மாநாடாக நடத்தக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருந்தது. அதனை மீறி மாநாட்டில் அரசியல் பேசப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பெரியார், அண்ணாவை விமர்சனம் செய்து வீடியோ ஒளிபரப்பானதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனமும் தெரிவித்து இருந்தன.
பரவும் தகவல்
இந்த நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு மதுபாட்டில்கள் வழங்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் பஞ்சகட்சம் அணிந்த ஒருவர் அமர்ந்துகொண்டே அங்கு வந்தவர்களுக்கு மது பாட்டில்களை விநியோகம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனைப் பகிர்ந்த A. P. Sathish Kumar என்ற எக்ஸ் பதிவர், “முருக பக்தர்கள் மாநாட்டில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்தோடு பூசை தீர்த்தத்தை பெற்றுக்கொள்ள பக்தியோடு நிற்க பூசை முடித்த பூசாரி தீர்த்ததை மகிழ்வோடு வழங்கிய தருணம்” என்று பதிவிட்டு இருந்தார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது
பக்தர்கள் பக்தி பரவசத்தோடு பூசை தீர்த்தத்தை பெற்றுக்கொள்ள பக்தியோடு நிற்க பூசை முடித்த பூசாரி தீர்த்ததை மகிழ்வோடு வழங்கிய தருணம் ..!
*முருகன் மாநாடு நடத்துற மூஞ்சிய பாத்தா தெரியாது பிக்காலி சங்கி பயலுக* pic.twitter.com/DO2abqKM4h
மேலும் சில சமூக வலைதளப் பக்கங்களிலும் இந்த வீடியோ வைரல் கருத்துடன் பகிரப்பட்டு இருந்தது. இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3.

அதாவது, மதுபாட்டில் விநியோகம் செய்வதை கிண்டல் தொணியில் 'முருக பக்தர்களுக்கு தீர்த்தம் அளிக்கப்படுகிறது’ என்று சமூக வலைதளப் பயனர்கள் கேலி செய்திருந்தனர்.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் நம்பகத்தன்மையை TeluguPost உண்மை கண்டறியும் குழு சரிபார்த்ததில் அது பழைய வீடியோ என்பது தெரியவந்தது.
முதலில் வைரல் வீடியோவை கூர்ந்து கவனித்தபோது, அதில் இந்து அமைப்பில் கொடி போன்ற ஒன்று இருப்பதை கவனித்தோம். அது இந்து முன்னணி கொடியா என்பதை தெரிந்து கொள்ள இரு கொடிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். ஆனால், இரண்டு கொடிகளுக்கும் ஒப்பிட்டளவில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இந்து முன்னணி கொடியில் தமிழ் எழுத்து இருக்கும் நிலையில், வைரல் வீடியோவில் உள்ள கொடியில் வேறு மொழி எழுத்து இருந்ததைக் கவனித்தோம்.

இதனையடுத்து வைரல் வீடியோவை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் வைரல் வீடியோவானது 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி ponnukuttai_offical என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்ததை கண்டறிந்தோம். அதில், “கேரளாவில் எப்போதில் இருந்து ஆரம்பித்தது இந்த கலாச்சாரம்?” என்ற கேள்வியுடன் வீடியோ பகிரப்பட்டு இருந்தது.
இது கேரளாவில் நடந்த சம்பவம் தானா என்பதை உறுதிப்படுத்த தொடர்புடைய கீ வேர்டுகள் உள்ளிட்டவை மூலம் தேடலில் ஈடுபட்டோம். ஆனால், கேரளாவில் இந்த சம்பவம் நடந்தது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

முருகன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு மது விநியோகம் செய்யப்பட்டதா என கூகுளில் சர்ச் செய்து தேடினோம். அதில் ஜூன் 25ஆம் தேதி தினமலர் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், “மதுரையில் மாநாடு, பொதுக்கூட்டம் நடைபெறும்போது டாஸ்மாக் விற்பனை எகிறும் என்ற நிலையில், ஹிந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டின் போது எவ்வித மாற்றமும் இன்றி, வழக்கமான விற்பனையே இருந்தது.
மதுரை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு மாவட்டம் என இருபிரிவாக டாஸ்மாக் செயல்படுகிறது. இதில் வடக்கில் 96 கடைகளும், தெற்கில் 135 கடைகளும் உள்ளன. இவற்றில் கடந்த ஜூன் 14ல் 9,415 பாட்டில்கள், ஜூன் 15ல் 10, 900 பாட்டில்கள் விற்பனையாகி உள்ளன.இதேபோல, முருக பக்தர்கள் மாநாடுக்கு முன்தினம் ஜூன் 21ல் 9,140 பாட்டில்கள், ஜூன் 22ல் 11,200 பாட்டில்கள் விற்பனையாகின. இரு வாரங்களிலும் விற்பனையில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆதாரங்கள் மூலம் மது விநியோகம் செய்யும் வீடியோ முருகன் மாநாட்டுடன் தொடர்புடையது அல்ல என்பதை உறுதி செய்தோம். அது கடந்த ஆண்டே கேரளாவில் வெளியாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் அண்மையில் நடந்த முருகன் மாநாட்டுடன் தொடர்புபடுத்தி பகிரப்பட்டு வருகிறது.
முடிவு
மதுரை முருகன் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு மது விநியோகம் என தவறான தகவலுடன் வீடியோ பரப்பப்படுகிறது. உண்மையில் அது 2024ஆம் ஆண்டு வெளியான வீடியோ. தற்போதைய முருகன் மாநாட்டிற்கும் வைரல் வீடியோவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.