ராகுல்காந்தியை விமர்சித்த நீதிபதி பாஜக முதல்வருடன் இருக்கும் புகைப்படம் - உண்மை என்ன?
ராகுல்காந்தியை விமர்சனம் செய்த நீதிபதி தீபங்கர் தத்தா தேவேந்திர பட்னாவிஸ் உடன் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது.

Claim :
ராகுல் காந்தியை விமர்சித்த நீதிபதி பாஜக முதல்வருடன் இருப்பது போல வைரலாகும் புகைப்படம்Fact :
எடிட் செய்யப்பட்ட புகைப்படம் நீதிபதி தீபங்கர் தத்தாவை விமர்சித்து பகிரப்படுகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு பாரத ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை, சீன ராணுவம் கொலை செய்தது. சமீபத்தில் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றெல்லாம் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தி பேச்சுக்கு எதிராக லக்னோ எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.சி.மாசிக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2,000 சதுர கி.மீ. பரப்பளவை சீன ராணுவம் ஆக்கிரமித்து இருப்பதாக ராகுல் காந்தி கூறியதற்கு ஆதாரம் எதுவும் இருக்கிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள் என்றும் ராகுலுக்கு எதிராக காட்டமாக கருத்து தெரிவித்தனர்.
பரவும் தகவல்
இந்த நிலையில் ராகுல் காந்தியை விமர்சனம் செய்த நீதிபதி தீபங்கர் தத்தா மகாராஷ்டிரா மாநில முதல்வரான பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் உடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தடா ஜெ ரஹிம் என்ற எக்ஸ் பதிவர், “இருவருக்கும் நடுவில் இருப்பவர் தான் உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா.. இதுபோன்ற ஆர்எஸ்எஸ் பாஜக ஆதரவு பெற்ற நீதிபதிகள் இருந்தால் ராகுல் காந்திக்கு மட்டுமின்றி பாஜகவை எதிர்கிற அனைவருக்கும் தேச பக்தி பாடம் எடுப்பார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
மல்லிகை மணாளன் என்ற பதிவர், நடுவுல இருக்கிறவர்தான் தீபாங்கர் தத்தா! நீதியரசர்! ராகுல் உண்மையான இந்தியரான்னு கேள்வி எழுப்பிய அறிவுச் சுரங்கம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் பதிவு 1, பதிவு 2 சமூக வலைதளப் பக்கங்களிலும் இதே கருத்துடன் புகைப்படங்கள் பகிரப்பட்டன. அதாவது, இது தனிப்பட்ட ரீதியிலான சந்திப்பு என்பது போலவும், பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதால் ராகுலை அவர் விமர்சனம் செய்ததாகவும் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.
வைரல் புகைப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் இதே புகைப்படத்தை பதிவேற்றி இருப்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது. அந்த சமயத்தில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவி வகித்து வந்தார். அதில், “நமது மண்ணின் மைந்தரும், புதிதாக நியமிக்கப்பட்ட 49வது இந்திய தலைமை நீதிபதியுமான உதய் லலித் அவர்களின் பாராட்டு விழாவில் மும்பையில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகைப்படத்தில், வைரல் புகைப்படத்தில் இருப்பது போல நீதிபதி தீபங்கர் தத்தா, பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மட்டும் இல்லை. முன்னாள் தலைமை நீதிபதி லலித், இப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அபய் எஸ்.ஓகா மற்றும் பலரும் உள்ளனர் என்பதை உறுதி செய்துகொண்டோம்.
மேலும் நமது தேடலில் தேவேந்திர பட்னாவிஸ் பதிவிட்ட அதே நாளில் (2022 செப்டம்பர் 11) ஈடிவி பாரத் வெளியிட்ட மற்றொரு செய்தி அறிக்கை நமக்கு கிடைத்தது. அதில், “தலைமை நீதிபதி யுயு லலித் பாராட்டு விழாவை மும்பையில் உள்ள நீதித்துறை உயர் நீதிமன்றம் ஏற்பாடு செய்தது. தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பூஷன் கவாய், அபய் ஓக், பம்பாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா, அமிதா உதய் லலித், ஜுமா தத்தா, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பம்பாய் உயர் நீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் கலந்து கொண்டனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்மூலம் அந்த சமயத்தில் தீபங்கர் தத்தா உயர் தலைமை நீதிபதியாக இருந்துள்ளது தெரியவந்தது.
இதே புகைப்படத்துடன் ஏபிபி நாடு இணையதளமும் செய்தி வெளியிட்டு உள்ளது. மகாராஷ்டிரா மாநில முதல்வர் அலுவலக முகநூல் பக்கத்தில் பாராட்டு விழாவின் முழு நேரலையும் ஒளிபரப்பாகி உள்ளது. அதில், தீபங்கர் தத்தா கலந்துகொண்டதையும் நாம் உறுதி செய்துகொண்டோம்.
இந்த ஆதாரங்கள் மூலம் பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் நீதிபதி தீபங்கர் தத்தா இருக்கும் புகைப்படம் தனிப்பட்ட சந்திப்போ அல்லது ரகசிய சந்திப்போ அல்ல என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது. 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற யுயு லலித்துக்கு பம்பாய் உயர் நீதிமன்றம் நடத்திய பாராட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்பதும், அப்போது உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தாவும் மற்ற நீதிபதிகளும் கலந்துகொண்டனர். ஆனால், அனைவரும் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவுடன் தீபங்கர் தத்தா இருக்கும் பகுதியை மட்டும் கட் செய்து பரப்பி வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
முடிவு
பாஜகவைச் சேர்ந்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் ராகுல் காந்தியை விமர்சித்த நீதிபதி தீபங்கர் தத்தா இருப்பது போல பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. உண்மையில் நீதிமன்றம் ஏற்பாடு செய்த விழாவில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் மேலும் சில நீதிபதிகளும் இருக்கிறார்கள். ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

