பேரிடர் நிவாரண நிதியாக தமிழ்நாட்டிற்கு சுமார் 5,500 கோடி ரூபாய்! உண்மை என்ன?
பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.5,522.34 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு என்று பரவும் சித்தரிக்கப்பட்ட செய்தி உண்மையல்ல என கண்டுபிடிக்கப்பட்டது.

Claim :
பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.5,522.34 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு.Fact :
தமிழ்நாடுக்கு ரூ.522.34 கோடி மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது.
ஒரு மாநிலம் பேரிடரால் பாதிக்கப்படும் போது பெரும் பொருள் இழப்புகளும், மனித உயிரிழப்புகளும் நிகழும். இந்த காலகட்டத்தில் மாநில அரசு தங்களால் ஆன நிவாரணத்தை மக்களுக்கு வழங்கும். அதற்கு மேலாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இது பேரிடரை எதிர்கொண்ட மாநிலங்களுக்கு, இழப்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் நிதியாகும்.
தமிழ்நாடும் சமீபகாலங்களில் பெருவெள்ளம் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டது. இதில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. இதற்கான நிதியை விடுவிக்க ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து, குறிப்பிட்ட நிதியும் விடுவிக்கப்பட்டது. அந்த செய்தியை ‘பேசு தமிழா பேசு’ என்ற யூடியூப் சேனல், சமூக வலைத்தள செய்தி கார்டு வடிவில் வெளியிட்டிருக்கிறது.
சரியாக ஏப்ரல் 5, 2025 எனும் தேதியை குறிப்பிட்டு வெளியாகியிருக்கும் இந்த சமூக வலைத்தள கார்டில், தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், “பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.5,522.34 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு. புதுச்சேரி, பீகார், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்ற தகவல்களுடன் வேறொரு செய்தியை காணமுடிந்தது. அந்த செய்தி ‘தமிழ் ஜனம்’ எனும் செய்தி ஊடகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அதிலும் இதே தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இவை பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் பதிவின் இணைப்பு இங்கே உள்ளன.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி தவறாக சித்தரிக்கப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில், தமிழ்நாட்டுக்கு சமீபத்தில் பேரிடர் நிவாரண நிதி ஏதேனும் ஒன்றிய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, ‘தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி’ என்ற சொல்லாடலுடன் கூகுளில் தேடினோம். அப்போது, அது தொடர்பான பல செய்திகளை காணமுடிந்தது. அதில், ‘தமிழ்நாட்டுக்கு ரூ.522 கோடி விடுவித்த ஒன்றிய அரசு’ என்ற தலைப்பில் ஈடிவி பாரத் தமிழ்நாடு தளம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.
உள்ளே, “புயல் பாதிப்புகள், பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளின் போது ஏற்பட்ட சேதங்களை கருத்திற்கொண்டு தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடியை விடுவிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுமதி வழங்கியுள்ளார்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முக்கியமாக, “2024-25 நிதியாண்டில், எஸ்.டி.ஆர்.எஃப் இன் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், என்.டி.ஆர்.எஃப் இன் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது.” என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. இதன் வாயிலாக மொத்தம் 19 மாநிலங்களுக்கு சேர்த்து தான் ரூ.5,160 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது உறுதியானது.
இதே தகவல் அடங்கிய செய்தியை, தினத்தந்தி, புதிய தலைமுறை, தினகரன் போன்ற முன்னணி செய்தி நிறுவனங்களின் தளங்களிலும் பார்க்க முடிந்தது.
இந்நிலையில், ஒன்றிய அரசு இதுதொடர்பான அறிக்கை ஏதும் வெளியிட்டுள்ளதா என்பதை அறிய, PIB தளத்தின் செய்தி அறிக்கைகளை ஆராய்ந்தோம். அதில், ஏப்ரல் 5 அன்று, பகல் 12:57 மணிக்கு ஒரு தமிழ் செய்தி அறிக்கையை காணமுடிந்தது. அந்த அறிக்கையில், மேற்கூறிய அனைத்து தகவல்களும் உள்ளடக்கி இருந்தது. அதாவது, தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி பேரிடர் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது எனவும், 19 மாநிலங்களுக்கு சேர்த்து ரூ.5,160.76 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த செய்தி தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுவது உறுதியானது.
எனினும், தமிழ்நாடு அரசு இதற்கு ஏதேனும் விளக்கம் அளித்துள்ளதா என்பதை ஆராய்கையில், அரசின் உண்மை கண்டறியும் குழு தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் இதுதொடர்பான ஒரு பதிவிட்டுள்ளதை பார்க்க முடிந்தது. அதில், “கடந்த ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி மட்டுமே ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை ரூ.5,522.34 கோடி என்று தவறாகக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முடிவு:
மேற்கொண்ட தணிக்கையில், தமிழ்நாடுக்கு ரூ.522.34 கோடி மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது உறுதியானது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.