விமான விபத்து நடந்த இடத்தை 4 உடைகளில் பார்வையிட்டாரா பிரதமர் மோடி?
அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தை நான்கு விதமான உடைகள் அணிந்து பிரதமர் மோடி பார்வையிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.

Claim :
நான்கு விதமான உடைகள் அணிந்து விமான விபத்து இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.Fact :
பழைய புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஜூன் 12ஆம் தேதி புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்கு உள்ளான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் பயணம் செய்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 229 பயணிகள், 10 ஊழியர்கள், 2 விமானிகள் என 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 11ஏ என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
விமான விபத்து நடந்த உடனே உள் துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து விரைந்து வந்து விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல பிரதமர் மோடி நேற்று அகமதாபாத் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அதேபோல காயமடைந்த விஸ்வாஸ் குமாரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பரவும் தகவல்
இந்த நிலையில் அகமதாபாத் விமான விபத்தை 4 விதமான உடைகளில் வந்து பிரதமர் மோடி ஆய்வு செய்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்குமரி தென்றல் என்ற எக்ஸ் பயனர் வைரல் புகைப்படத்தை பகிர்ந்து, “உண்மையிலேயே உயிரிழந்த மக்களை சந்திக்க தான் சென்றாரா. மோடி. சில மணிநேரங்களில் 4 விதமான ஆடை.. இதைவிட ஒரு விளம்பர நடிகரை பார்க்கமுடியாது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
Perk Mans என்ற பேஸ்புக் பயனரும் இதே கருத்துடன் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
மேலும் இணைப்பு 1 சமூக வலைதளப் பக்கத்திலும் புகைப்படம் வைரலானது.
உண்மை சரிபார்பபு
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு சரிபார்த்தபோது, அது தவறான தகவல் என்பது தெரியவந்தது.
முதலில் அகமதாபாத் விமான நிலைய விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி என்ன உடை அணிந்து ஆய்வு செய்தார் என தேடினோம். அது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் பேஸ்புக் பக்கத்தில் ஜூன் 13 காலை 11.06 மணிக்கு பகிர்ந்துள்ளார். அதில் வெள்ளை நிற குர்தா பைஜாமாவும், தோளில் வெள்ளை நிற துண்டும் அணிந்திருந்தார்.
மேலும் அகமதாபாத்தில் நடந்த ஆய்வுக் கூட்டம், மற்றும் விஜய் ரூபானி வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றபோதும் அதே உடை அணிந்திருந்தார், வேறு எந்த உடைகளையும் அணிந்திருக்கவில்லை. இதனை PIB வெளியிட்ட புகைப்படங்களை வாயிலாகவும் உறுதி செய்தோம்.
பிறகு ஒவ்வொரு புகைப்படமாக ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். ஏஎன்ஐ லோகோவுடன் வெளியான முதல் புகைப்படம் விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமாரை மருத்துவமனையில் பிரதமர் மோடி ஆறுதல் சொல்லும் புகைப்படமாகும். ஏஎன்ஐ எக்ஸ் பக்கத்தில் வெளியான வீடியோ வாயிலாக இதனை உறுதிப்படுத்தினோம்.
அதே உடையுடன் பிரதமர் மோடி உள்ள மூன்றாவது புகைப்படம் குறித்து தேடியதில் அது ஏஎன்ஐ இணையதள பக்கத்தில் ஜூன் 13ஆம் வெளியான செய்திக்கு நம்மை அழைத்துச் சென்றது. , “ஆமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார்” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்த இரண்டு புகைப்படங்களிலும் பிரதமர் மோடி ஒரே உடைதான் அணிந்துள்ளார் என்பதையும், அது அகமதாபாத் விபத்து மற்றும் மருத்துவமனை விசிட் தொடர்புடைய புகைப்படங்கள் என்பதையும் TeluguPost உறுதிப்படுத்தியது.
மற்ற இரண்டு புகைப்படங்கள் குறித்தும் தேடியதில் அது வெவ்வேறு வருடங்களில் நடந்த வெவ்வேறு சம்பவம் என்பதை கண்டுபிடித்தோம். ஒரு தடுப்பை பிடித்தபடி பிரதமர் மோடி நிற்கும் புகைப்படம், 2022ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து அதனை ஆய்வு செய்த புகைப்படமாகும்.
பிபிசி 2022 நவம்பர் 1ஆம் தேதி வெளியிட்ட செய்தி அறிக்கையில், “2022 அக்டோபர் 30ஆம் தேதி 135 பேர் உயிரிழந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை நேரில் காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள மோர்பி நகருக்குச் சென்றுள்ளார். மோடி சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பிறகு, விரிவான விசாரணை நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் கூறியது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தி வாயிலாகவும் இதனை உறுதிப்படுத்தினோம்.
பிரதமர் மோடி வரைபடத்தை பார்வையிடுவது போல கடைசியாக உள்ள புகைப்படம் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஒடிசா ரயில் விபத்து தொடர்புடையது.
ஏபிபி நியூஸ் 2023 ஜூன் 4ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், வைரல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில், “பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதிய விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை ஆய்வு செய்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி வழியாக இதனை இறுதி செய்துகொண்டோம்.
ஆக வெவ்வேறு வருடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றாக இணைத்து, பிரதமர் மோடி நான்கு உடைகளை அணிந்து அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார் என தவறான தகவல் பகிரப்பட்டு வருவதை உறுதிசெய்தோம்.