திமுக நிர்வாகி லாரி சாலையில் நிற்காமல் தடுத்த போலீசையும் தூக்கி சென்றதா?
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் லாரியை கடத்திய வீடியோவைப் பகிர்ந்து திமுகவை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Claim :
திமுக நிர்வாகியின் லாரி சாலையில் நிற்காமல் தடுத்த போலீசையும் தூக்கிச் செல்வதாக பரவும் வீடியோFact :
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கடத்திய லாரியை போலீசார் துரத்திச் சென்று மீட்கும் காட்சி.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடைபெற்று வரும் நிலையில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டுகின்றன. ஆனால், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது, கடந்த அதிமுக ஆட்சியை விட குற்றங்கள் குறைவாகவே நடைபெறுவதாக தமிழக அரசு விளக்கம் அளிக்கிறது.
அதே சமயம் எதிர்க்கட்சியினர் ஏதாவது செய்தால் உடனடியாக அரசியல் பழிவாங்கும் விதமாக காவல் துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், ஆனால் ஆளுங்கட்சியான திமுகவினர் தவறு செய்தால் வழக்குக் கூட பதிவு செய்வதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட அரக்கோணம் திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீதான பாலியல் குற்றச்சாட்டில் ஆளுங்கட்சி என்பதால் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டி இருந்தது.
பரவும் தகவல்
இந்த நிலையில் திமுக நிர்வாகியின் லாரியை போக்குவரத்துப் போலீஸ் மடக்கியதாகவும், ஆனால் நிற்க மறுத்த லாரி போலீஸையும் தூக்கிக் கொண்டு சென்றதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
மோகன் வாளியம்பட்டி கரூர் என்ற எக்ஸ் பதிவர் வைரல் வீடியோவைப் பகிர்ந்து, “திமுக காரனே போலீஸ்னா நிக்க மாட்டான்.. திமுக காரன் லாரி மட்டும் நிக்கவா போகுது போலீஸையும் தூக்கிட்டு போகும்ல அதான் #திமுக” என்று விமர்சிக்கும்படி பதிவிட்டிருந்தார்.
திமுக காரனே போலீஸ்னா
— மோகன் வாளியம்பட்டி கரூர் (@mohankaruradmk) May 22, 2025
நிக்க மாட்டான்..
திமுக காரன் லாரி மட்டும் நிக்கவா போகுது போலீஸையும் தூக்கிட்டு போகும்ல அதான் #திமுக pic.twitter.com/qApt9E5iem
Suresh நீலகண்டன் என்ற எக்ஸ் பதிவர், “கனிமவள கடத்தல் லாரியை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்ற லாரி. அப்பாவி போலீஸ் தொங்கிய படி செல்லும் காட்சி. இது திமுக காரன் லாரியாக இருக்குமோ?” என்று கேள்வி எழுப்பினார்.
திமுக நிர்வாகி லாரி போலீசை தூக்கிச் செல்வதாக இணைப்பு 1, இணைப்பு 2 பதிவுகளும் இடம்பெற்றிருந்தன.
உண்மை சரிபார்ப்பு
சாலையில் நிற்க மறுத்த லாரி, தடுத்த போலீஸையும் தூக்கிச் செல்வதாக வைரலாகும் வீடியோ குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது.
முதலில் லாரி கடத்தல், கடத்தலை தடுத்த போக்குவரத்து போலீஸ் உள்ளிட்ட கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் தேடினோம். நமக்கு கடந்த சில நாட்களில் வெளியான பல்வேறு செய்தி அறிக்கைகள், யூட்யூப் லிங்குகள் கிடைத்தன. மே 20ஆம் தேதி தந்தி டிவி யூட்யூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், “செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லாரியை மீட்க 10 கிலோமீட்டர் தூரம் லாரியில் தொங்கியபடி சென்ற காவலரின் காட்சிகள் வெளியாகி உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், “மதுராந்தகத்தில் இருந்து சென்னையை நோக்கி ஒரு டாரஸ் லாரி வந்துகொண்டு இருந்தது. பரனூர் சுங்கச்சாவடி அருகே ஓட்டுனர் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது லாரியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். அருகில் இருந்த சிக்னலில் லாரியை போக்குவரத்துக் காவலர் முருகன் நிறுத்த முயற்சித்து அதில் ஏறியுள்ளார்.
ஆனாலும் லாரியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிக்கொண்டு இருந்துள்ளார். சுமார் 10 கி.மீ தூரம் காவலர் லாரியில் தொங்கிச் சென்ற நிலையில், மறைமலை நகர் அருகே மடக்கிப் பிடித்து கடத்தியவரை சரமாரியாக அடித்தனர். பின்னர் அந்த நபரை போலீசார் மீட்டு அழைத்துச் சென்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதே வீடியோவை “லாரி கடத்தல் காரனை பிடிக்க சினிமா பாணியில் சேஷிங்..!” என்ற கேப்ஷனோடு பாலிமர் டிவியும் பகிர்ந்திருந்தது. அதில், “கடத்தப்பட்ட லாரி தடுப்புச் சுவரின் மீது மோதி நின்றதால் அந்த லாரியால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. அவரை அடித்து துவைத்து லாரியில் இருந்து பொதுமக்கள் இறக்கியபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தெரியவந்ததால் சாலையோரம் அமர வைத்தனர்.
போலீசார் கூறுகையில், லாரியை கடத்தியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த சுபாஷ். டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வந்த நிலையில், மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு கடந்த 10 நாட்களாக அங்கும் இங்கும் வலம் வந்த நிலையில் தான் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது” என்றும் தெரிவித்தனர்.சத்தியம், புதிய தலைமுறை தொலைக்காட்சிகளும் யூட்யூபில் இந்த வீடியோவை இதே தகவல்களுடன் பகிர்ந்துள்ளன.
தி இந்து வெளியிட்ட செய்தியிலும், லாரி கடத்தப்பட்டது என்றும் லாரியை கடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் குறிப்பிடப்பட்டுள்ளதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தியில், “பரனூர் சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்திய விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் சுபாஷை ஆஜர்படுத்தினர். சுபாஷை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுபாஷ்” என்று தெரிவித்துள்ளது.
இதேபோல தனது லாரியை மடக்கிப் பிடித்த போக்குவரத்து எஸ்.ஐ முருகனுக்கு வீடு தேடி சென்று லாரியின் உரிமையாளர் நன்றி கூறியுள்ளார். இந்த வீடியோவை பாலிமர் தொலைக்காட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
''உயிர் இருக்க வரைக்கும் மறக்கமாட்டேன்.. ரொம்ப நன்றி அண்ணா…..'' கடத்தப்பட்ட லாரியை உயிரை பணயம் வைத்து தொங்கியபடி சென்று மீட்ட போக்குவரத்து காவலருக்கு வீடு தேடி சென்று நன்றி சொன்ன லாரியின் உரிமையாளர்..!#Chengalpattu | #Lorry | #LorryTheft | #TrafficPolice | #PolimerNews pic.twitter.com/dWdz3MtW9T
— Polimer News (@polimernews) May 21, 2025
இந்த ஆதாரங்கள் மூலம் வைரலாகும் வீடியோ, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் லாரியை கடத்தியதுடன் தொடர்புடையது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது. ஆனால், திமுக நிர்வாகிக்கு சொந்தமான லாரி விதிகளை மீறி நிற்காமல் சென்றதோடு, தடுத்த காவலரையும் தூக்கிச் சென்றதாக தவறான தகவலுடன் பகிரப்படுகிறது.
முடிவு
சாலையில் நிற்காமல் சென்ற திமுக நிர்வாகியின் லாரி, தடுத்த காவலரையும் தூக்கிச் செல்வதாக தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருகிறது. அது மனநலம் பாதிக்கப்பட்டவர் லாரியை கடத்திச் சென்றது தொடர்பான வீடியோ என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

