எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டு கேட்க மாட்டேன் என டிடிவி தினகரன் கூறினாரா?
எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டு கேட்க மாட்டேன் என டிடிவி தினகரன் பேசியதாக பரவும் வீடியோ 5 மாதங்கள் பழமையானது.

Claim :
எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டு கேட்க மாட்டேன் என டிடிவி தினகரன் பேட்டிFact :
எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டு கேட்க மாட்டேன் என டிடிவி தினகரன் பேட்டி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலை சந்தித்தார். இதனிடையே 2025 ஏப்ரல் மாதம் தே.ஜ.கூவில் அதிமுக இணைந்தது.
டிடிவி தினகரனை கூட்டணியில் ஏற்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் காட்டியதால் அதிருப்தி காரணமாக கூட்டணியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் டிடிவி தினகரன் வெளியேறினார். எனினும், கடந்த ஜனவரியில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ளார். அதனை எடப்பாடி பழனிசாமியும் வரவேற்றுள்ளார்.
பரவும் தகவல்
எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் ஓட்டு கேட்க மாட்டேன் என டிடிவி தினகரன் பேட்டியளித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில், "எந்த இடத்திலும் நான் பழனிசாமிக்கு ஓட்டு கேட்பேன் என்றோ, அதிமுகவுக்கு ஓட்டு கேட்பேன் என்றோ சொல்லவில்லை” என்று டிடிவி தினகரன் குறிப்பிடுகிறார்.
வைரல் வீடியோவைப் பகிர்ந்த @jayakanagaraja என்ற எக்ஸ் பதிவர், “இப்படி ஒரு மானங்கெட்ட கூட்டணி தேவையா பழனிசாமி” என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த பதிவு 40,000 பார்வைகளைப் பெற்றிருந்தது.
இப்படி ஒரு மானங்கெட்ட கூட்டணி தேவையா பழனிசாமி@EPSTamilNadu pic.twitter.com/AaKqOFdkbE
— Jaya Kanagaraja (@Jayakanagaraja) February 11, 2026
மேலும் பதிவு 1, பதிவு 2, பதிவு 3 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் இதே வீடியோ பகிரப்பட்டு இருந்தது.
டியர் அடிமைஸ், இங்க கொஞ்சம் வாங்களேன் பிளீஸ்.pic.twitter.com/8sn6jhEG1y
— Centrism | மய்யம் (@CentristPulse) February 11, 2026
அதாவது கூட்டணியில் சேர்ந்த பிறகு இவ்வாறு டிடிவி தினகரன் பேசியுள்ளார் என்று பொருள்படும்படி வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. டிடிவி தினகரன் பேசிய வீடியோ கூட்டணியில் இணைவதற்கு முன்பு எடுக்கப்பட்டது.
வைரல் வீடியோவின் முக்கிய பகுதிகளை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில், வைரலாகும் வீடியோ சன் நியூஸ் யூட்யூப் பக்கத்தில் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தோம்.
கூட்டணி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், “முதல்வர் வேட்பாளர் குறித்து சிலர் சொன்னதை நம்பி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்தேன். ஆனால், இதற்கு மேல் நம்பி பயனில்லை என தெரிந்த பிறகுதான் கூட்டணியில் இருந்து வெளியேறினேன். நான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வேன் என்று எங்கேயும் சொல்லவில்லை. ஒருமுறை என்னிடம் ஊடகத்தினர் அதிமுகவுக்கு வாக்கு கேட்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அழைக்கும் பட்சத்தில் அவர்களுக்காக பரப்புரை செய்வேன் என்றுதான் சொன்னேன். எந்த இடத்திலும் பழனிசாமிக்கு ஓட்டு கேட்பேன் என்றோ, அதிமுகவுக்கு ஓட்டு கேட்பேன் என்றோ கூறவில்லை” என்று குறிப்பிடுகிறார்.
நியூஸ் தமிழ் 24*7, தந்தி, புதிய தலைமுறை ஆகிய ஊடகங்களும் இதே நாளில் டிடிவி தினகரன் பேட்டியை ஒளிபரப்பியுள்ளன.
அதே சமயம் செப்டம்பர் 3ஆம் தேதியே அதிமுக - பாஜக உள்ளடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்துவிட்டதை உறுதி செய்தோம்.
டிடிவி தினகரன் கடந்த ஜனவரி 21ஆம் தேதி சுமார் 5 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். அவரை வரவேற்ற பியூஷ் கோயல், “எனது இனிய நண்பரும், மூத்த தலைவருமான டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குடும்பத்திற்குத் திரும்ப முடிவு செய்திருப்பது எனக்குப் பெருமையையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனது இனிய நண்பரும், மூத்த தலைவருமான திரு.@TTVDhinakaran அவர்கள் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குடும்பத்திற்குத் திரும்ப முடிவு செய்திருப்பது எனக்குப் பெருமையையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
— Piyush Goyal (@PiyushGoyal) January 21, 2026
தமிழக மக்களுக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும், தமிழரின் பெருமைக்கும்… pic.twitter.com/fOhWTD8yHD
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 23ஆம் தேதி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அதில், ஊழல், வாரிசு அரசியலை வீழ்த்த கைகோர்த்தோம் என இருவரும் தெரிவித்தனர்.
இந்த ஆதாரங்கள் மூலம் வைரலாவது அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டி அல்ல என்பது தெளிவாகிறது.
முடிவு
எடப்பாடி பழனிசாமிக்கோ, அதிமுகவுக்கோ ஓட்டு கேட்க மாட்டேன் என்று டிடிவி தினகரன் கூறுவது 5 மாத பழைய வீடியோவாகும். ஜனவரி 21ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்த பிறகு எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவில்லை என்பது தகுந்த ஆதாரங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளையும் வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

