பெரியார், அண்ணாவை விமர்சித்தது தவறில்லை என திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா?
பெரியார், அண்ணாவை விமர்சனம் செய்யும் வீடியோவில் எந்த தவறும் இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக போலி நியூஸ் கார்டு பரவுகிறது.

Claim :
பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வீடியோவில் தவறில்லை எனக் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக வைரலாகும் நியூஸ் கார்டுFact :
வைரல் நியூஸ் கார்டு போலியானது, திண்டுக்கல் சீனிவாசன் அதுபோன்ற எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு கடந்த ஜூன் 22ஆம் தேதி மதுரை பாண்டி கோயிலில் நடைபெற்றது. அதில் ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும், இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சனம் செய்யும் விதமாக வீடியோ வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டு இருந்தனர். அண்ணாவின் பெயரை தாங்கி நிற்கும் அதிமுகவினர் இருக்கும் மேடையில், அண்ணா விமர்சனம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக அமைச்சர்கள் மேடையிலேயே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
பரவும் தகவல்
முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி வெளியிட்ட வீடியோவில் தவறு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக தந்தி டிவி பெயரில் வைரல் நியூஸ் கார்டு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், திமுகதான் இதனை அரசியலாக்கி வருவதாகவும் அவர் கூறியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரல் நியூஸ் கார்டைப் பகிர்ந்த ஜெகதீஷ்.கோ என்ற எக்ஸ் பயனர், “வீடியோவில் தவறு இல்லையாம். அட அடிமைங்களா” என்று குறிப்பிட்டு அதிமுக அதிகாரப்பூர்வ பக்கத்தை டேக் செய்திருந்தனர்.
இதே கருத்துடன் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் நியூஸ் கார்டு வைரலானது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் நியூஸ் கார்டு குறித்த TeluguPost உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையில் அது போலியானது என்பது தெரியவந்துள்ளது.
முதலில் வைரல் நியூஸ் கார்டை ஆய்வு செய்தபோது, அதன் எழுத்துரு (Font) அளவுக்கும் தந்தி டிவி எழுத்துருவுடன் ஒத்துப்போகவில்லை. ஆகவே, தந்தி டிவி வைரல் கார்டை வெளியிட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய ஜூன் 23ஆம் தேதி அதன் சமூக வலைதளப் பக்கங்களை முழுவதுமாக ஆய்வு செய்தோம். ஆனால், அப்படியான நியூஸ் கார்டு நமக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து தந்தி டிவி நியூஸ் டெஸ்க் உதவி ஆசிரியர் பாலாவைத் தொடர்புகொண்டபோது, அதுபோன்ற நியூஸ் கார்டை தங்கள் நிறுவனம் வெளியிடவில்லை என்று உறுதி செய்தார்.
இதனையடுத்து, திண்டுக்கல் சீனிவாசன் அவ்வாறு பேசினாரா என்பது குறித்து கூகுளில் சர்ச் செய்தபோதும், அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆய்வு செய்தபோதும் நமக்கு அவ்வாறான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அதிமுக ஐடி விங் தலைவர் கோவை சத்யனை தொடர்புகொண்ட போது, “வைரல் நியூஸ் கார்டு போலியானது. திண்டுக்கல் சீனிவாசன் அப்படியான எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. தந்தி டிவி தரப்பிலும் அது போலி என்று எங்களிடம் தெரிவித்து உள்ளனர். திமுகவினர் தான் எங்களுக்கு எதிராக இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்பி வருகிறார்கள்” என்று விளக்கம் அளித்தார்.
மேலும் நமது தேடலில் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி என்ற தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டையே எடிட் செய்து பரப்புவதையும் தெரிந்துகொண்டோம்.
அதே சமயம் பெரியார், அண்ணா குறித்த வீடியோவுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்து உள்ளதையும், மாநாட்டில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்த வீடியோக்களும் நமக்கு கிடைத்தன.
அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில், “அதிமுக என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும். மாநாட்டில், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அஇஅதிமுக சர்த்தில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராஜேந்திர பாலாஜி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சனம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டது வருத்தம் அளிக்கிறது. மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையிலான வீடியோவை தவிர்த்திருக்கலாம். நாகரீகம் கருதி அந்த இடத்தில் கருத்து தெரிவிப்பதை தவிர்த்தோம்” என்று விளக்கம் அளித்தார்.
ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில், “முருக பக்தர் மாநாட்டின் தீர்மானங்களுக்கும், அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை. அதிமுக ஒருபோதும் எங்களது கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். மேடை நாகரிகம் கருதியே நாங்கள் அமைதியாக இருந்தோம். அண்ணாவுக்கு இழுக்கு என்றால், அதற்கு முதல் குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுகதான்” என்று தெரிவித்தார்.
இந்த ஆதாரங்கள் மூலமாக பெரியார், அண்ணாவை விமர்சித்ததில் தவறில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் சொல்லவில்லை என்பதையும், உண்மையில் அதிமுக அதனை கண்டித்துள்ளது என்பதையும் TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி வெளியிட்ட வீடியோவில் தவறு இல்லை என திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பது தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும் போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.