சோஃபியா குரேஷி தான் ஒரு முஸ்லீம், ஆனால் தீவிரவாதி இல்லை என பேசினாரா?
கர்னல் சோஃபியா குரேஷி தான் ஒரு முஸ்லீம், ஆனால் தீவிரவாதி அல்ல என்று பேசுவதாக வைரலாகும் வீடியோ போலியானது.

Claim :
கர்னல் சோஃபியா குரேஷி தான் ஒரு முஸ்லீம், ஆனால் தீவிரவாதி அல்ல என்று பேசுவதாக வைரலாகும் வீடியோFact :
வைரல் வீடியோ ஏஐ துணையுடன் உருவாக்கப்பட்டது, போலியானது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பயங்கரவாதிகள் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்றது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ஆம் தேதி நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூரை அமல்படுத்தியது இந்திய பாதுகாப்புப் படைகள். வான் வழியாக பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அங்கிருந்த ஒன்பது பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தொழித்தது. தாக்குதல் நிலவரங்கள் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்து வந்தனர். இதனால் இருவரும் ஒரே நாளில் பிரபலமான நபர்களாக மாறினர்.
பரவும் தகவல்
இந்த நிலையில் முஸ்லீம்கள் மற்றும் தீவிரவாதிகள் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர் சந்திப்பில் பேசுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காந்தி பரிவார் என்கிற எக்ஸ் பயனர், “நான் ஒரு முஸ்லீம் பெண். ஆனால் பாகிஸ்தானி அல்ல! நான் ஒரு முஸ்லீம் வீரர். தீவிரவாதியின் சகோதரி அல்ல! தீவிரவாதத்தால் இந்தியர்களை அழித்த தீவிரவாதிகளை அழிக்கத் துடிக்கும் இந்திய முஸ்லீம் நான். பாஜக அமைச்சரே கேட்டுச்சா?” என்று குறிப்பிட்டு இருந்தார்
நான் ஒரு முஸ்லீம் பெண்
— Gandhi Parivaar (@Gandhi_Parivaar) May 13, 2025
ஆனால் பாகிஸ்தானி அல்ல!
நான் ஒரு முஸ்லீம் வீரர்
தீவிரவாதியின் சகோதரி அல்ல!
தீவிரவாதத்தால் இந்தியர்களை
அழித்த தீவிரவாதிகளை
அழிக்கத் துடிக்கும்
இந்திய முஸ்லீம் நான்.
பாஜக அமைச்சரே கேட்டுச்சா? pic.twitter.com/1unSx7uNyy
Narasimman என்ற எக்ஸ் கணக்கில், தமிழகத்தில் பாகிஸ்தானுக்கு முட்டு கொடுக்கும் வந்தேறிகளுக்கு சமர்ப்பணம் என்று குறிப்பிட்டு வைரல் பதிவு இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் பாகிஸ்தானுக்கு முட்டு கொடுக்கும் வந்தேறிகள் துப்பின எச்சைகளுக்கு சமர்ப்பணம்
— Narasimman🇮🇳🕉️🚩 (@Narasim18037507) May 14, 2025
நான் ஒரு முஸ்லிம் ஆனால் பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு முஸ்லிம் ஆனால் தீவிரவாதி அல்ல.
தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது தீவிரவாதிகளை தேடி தேடி என் கைகளாலேயே கொல்வேன்.
அவர்கள் மதங்களைக் கேட்காமல். pic.twitter.com/uhqwYNHWjh
மேலும் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3, இணைப்பு 4 ஆகிய சமூக வலைதளக் கணக்குகளிலும் இதே வீடியோ வைரலானது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்த TeluguPost உண்மை கண்டறியும் குழு சரிபார்ப்பில், அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
முதலில் கர்னல் சோஃபியா குரேஷி தான் முஸ்லீம் என்றோ, பாகிஸ்தானி அல்ல என்றோ ஏதாவது பேசியுள்ளாரா என்பது குறித்து தொடர்புடைய கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் சர்ச் செய்தோம். ஆனால், சோஃபியா குரேஷி அவ்வாறு கூறியதாக வீடியோவோ அல்லது செய்திகளோ நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து வைரல் வீடியோவின் கீ ப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு TeluguPost உண்மை கண்டறியும் குழு உட்படுத்தியது. அதில் மே 7ஆம் தேதி சோஃபியா குரேஷி ஊடகங்கள் முன்பு ஆபரேஷன் சிந்தூர் செயல்பாட்டை விளக்கி பேசும் ஆல் இந்தியா ரேடியா வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. வீடியோவில் உள்ள சோஃபியா குரேஷின் முகம் மற்றும் வாய் அசைவுகளும், வைரல் வீடியோவுடன் பொருந்திப் போகும் வகையில் அமைந்திருந்தன.
ஆனால், அந்த வீடியோவில் எந்த இடத்திலும் ‘நான் ஒரு முஸ்லிம், ஆனால் ஒரு பாகிஸ்தானி இல்லை. நான் ஒரு முஸ்லிம், ஆனால் பயங்கரவாதி அல்ல’ என்று சோஃபியா குரோஷி குறிப்பிடவில்லை.
மேலும் உறுதிப்படுத்துதலுக்காக மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் குறித்து சோபியா குரேஷி விளக்கிய முழு வீடியோவையும் ANI யூட்யூப் சேனலில் பார்த்தோம். அதில் அவரின் முக பாவங்கள் பொருந்திப் போனாலும் எந்த இடத்திலும், வைரல் கூற்றை அவர் பேசவில்லை என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்துகொண்டது.
வைரல் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து வைரல் வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுத்து Resemble.ai என்ற ஏஐ ஆடியோ கண்டறியும் தளத்தில் அப்லோடு செய்தோம். அது பகுப்பாய்வு செய்து ஆடியோ போலியானது என்ற முடிவை நமக்குத் தந்தது.
இதன்மூலம் ஒரிஜினல் வீடியோவில் ஏஐ ஆடியோவை சேர்த்து போலியாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளதை TeluguPost உண்மைக் கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
கர்னல் சோஃபியா குரேஷி தான் ஒரு முஸ்லீம், ஆனால் தீவிரவாதி அல்ல என்று பேசுவதாக வைரலாகும் வீடியோ போலியானது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சோஃபியா குரேஷி அவ்வாறான கருத்தை எந்த இடத்திலும் பேசவில்லை. செய்திகளை பகிரும் முன்பு பகுப்பாய்வு செய்து பகிரும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.