திருபுவனம் காவல் மரணம் : இளைஞர் மாரடைப்பால் இறந்ததாக மு.க.ஸ்டாலின் கூறினாரா?
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் காவல் நிலைய மரண விவகாரத்தில், இளைஞர் மாரடைப்பால் இறந்தார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் தவறானது.

Claim :
காவல் நிலைய மரண விவகாரத்தில், இளைஞர் மாரடைப்பால் இறந்தார் என மு.க.ஸ்டாலின் கருத்துFact :
வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது, மு.க.ஸ்டாலின் அதுபோன்ற எந்த கருத்தையும் கூறவில்லை.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அடுத்துள்ள மடப்புரம் பத்ர காளியம்மன் கோயிலில் காவலாளியாக இருந்தவர் அஜித்குமார் (வயது 28). நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் சில நாட்களுக்கு முன்பு அஜித்குமாரை போலீசார் விசாரிக்க அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கோயில் அருகே உள்ள மாட்டுத் தொழுவத்திலும் அஜித்குமாரை காவல் துறையினர் கொடூரமாக தாக்கியதில், அவர் உயிரிழந்தார்.
அஜித்குமார் உயிரிழந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருபுவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுதொடர்பாக தமிழக அரசை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் அக்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
பரவும் தகவல்
இந்த நிலையில் திருபுவனம் காவல் மரணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாகிறது. அதாவது, விசாரணைக் கைதிகள் விசாரணையின் போது பயத்தினால் மாரடைப்பால் மரணமடைவது இயற்கையானது, இதை வைத்து மலிவான அரசியல் செய்வது வேட்கக்கேடானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதாக அந்த நியூஸ் கார்டில் உள்ளது.
வைரல் நியூஸ் கார்டைப் பகிர்ந்த இந்திராணி சுடலைமுத்து என்ற எக்ஸ் பதிவர், “எறும்பு கடிச்சு இறந்தான் என போன தடவை சொன்ன மாதிரி இப்போ பயத்தில் இறந்து போயிருக்காருன்னு பொய் சொல்லுறாரு பாருங்க. இப்படி ஒரு முதல்வர்” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
மறுபக்கம் என்ற எக்ஸ் கணக்கில், சாத்தான்குளம் லாக்கப் மரணத்தை அரசியல் செய்தது நீங்கள் தானே எனக் குறிப்பிட்டு வைரல் கார்டு பதிவேற்றப்பட்டு இருந்தது.
மேலும் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் வைரல் கார்டுகள் பகிரப்பட்டன.
உண்மை சரிபார்ப்பு
வைரல் நியூஸ் கார்டின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்ததில் அது போலியானது என்பது தெரியவந்தது.
முதலில் வைரலாகும் நியூஸ் கார்டை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். அதில் வைரல் நியூஸ் கார்டு எழுத்துரு (Font) அளவுக்கும், நியூஸ்7 தமிழ் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வெளியான கார்டுகளின் எழுத்துருவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை தெரிந்துகொண்டோம். வைரல் நியூஸ் கார்டு ஜூன் 29ஆம் தேதியிட்டு வெளியானது. ஆகவே, நியூஸ்7 தமிழ் சமூக வலைதளப் பக்கங்களில் ஜூன் 29ஆம் தேதியை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட போது, அதுதொடர்பான எந்த நியூஸ் கார்டோ செய்திகளும் TeluguPost உண்மை கண்டறியும் குழுவுக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து நியூஸ்7 தமிழ் டிஜிட்டல் பொறுப்பாளர்களில் ஒருவரான அகமதுவை தொடர்புகொண்டு பேசினோம். அதில் வைரல் நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்றும், தங்கள் நிறுவனம் பெயரில் போலியாக நியூஸ் பார்டை உருவாக்கி பரப்பி வருகிறார்கள் என்றும் விளக்கினார். மேலும், வைரல் நியூஸ் கார்டு போலியானது என நியூஸ்7 தமிழ் பதிவிட்டுள்ள இணைப்பையும் நமக்கு அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருபுவனம் காவல் மரணம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏதேனும் பேசியுள்ளாரா என்பதை Telugupost உண்மை கண்டறியும் குழு தேடியது. ஆனால், திருபுவனம் காவல் மரணம் குறித்து மு.க.ஸ்டாலின் நேரடியாக எதையும் பேசவில்லை என்பதை உறுதி செய்தோம். அதே நேரத்தில், ஜூன் 20ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் மரணங்கள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதை கண்டுபிடித்தோம்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திமுக அரசு திகழ்ந்து வருகிறது. லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் திமுக ஐடி விங் தனது முகநூல் பக்கத்தில், சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல் நிலைய மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி 5 போலீசாரை கைது செய்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்துள்ளது. அத்துடன், “சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல் நிலைய மரணத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் அன்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்மந்தப்பட்ட காவலர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது” என்று விளக்கம் அளித்துள்ளது.
இதேபோல தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகமும், “விசாரணையின் போது மாரடைப்பு ஏற்படுவது இயல்பு என்று முதல்வர் கூறியதாகப் பரப்பப்படும் வதந்தி. மாண்புமிகு முதல்வர் அவர்கள் கூறாதக் கருத்தைப் போலி செய்தியாகப் பரப்பி வருகின்றனர்” என்று விளக்கியுள்ளது.
இந்த ஆதாரங்கள் மூலம் விசாரணையின் போது மாரடைப்பு ஏற்படுவது இயல்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த இடத்திலும் பேசவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முடிவு
விசாரணையின் போது மாரடைப்பு ஏற்படுவது இயல்பு என திருபுவனம் காவல் மரணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக பரவும் கார்டு போலியானது. மு.க.ஸ்டாலின் அதுபோன்ற எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தகவல்களை பகிரும்போது அதன் உண்மைத் தன்மையை சரிபார்த்து பகிரும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.