சாலையில் பைக்கை போலீசார் அடித்து உடைப்பதாக பரவும் வீடியோ - உண்மை என்ன?
மாணவரின் ஸ்கூட்டரை போலீசார் தாக்கியதாக பரவும் காணொலி தற்போது எடுக்கப்பட்டது அல்ல, ஆறு ஆண்டுகள் பழையது.

Claim :
மாணவரின் ஸ்கூட்டரை போலீசார் தடியால் அடித்து உடைக்கும் வீடியோFact :
வைரலாவது 2019ஆம் ஆண்டு வெளியான பழைய வீடியோ
தமிழகத்தில் காவல் துறையின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனை தடுக்க காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறுகின்றன. ஆனால், முன்விரோதம் காரணமாக நடைபெறும் கொலைகளை காவல் துறையால் தடுக்க முடியாது என்று சட்ட அமைச்சராக இருந்த ரகுபதி தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அதே சமயம் குற்றங்கள் நிகழ்வதை தடுக்க முடியாத காவல் துறை, அப்பாவி மக்கள் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தை காட்டி வருகிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக அண்மையில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் காவல் நிலைய மரண விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது காவல் துறை அத்துமீறும் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பரவும் தகவல்
சென்னையில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டர் வாகனத்தை போலீசார் அடித்து உடைப்பதாக 1.05 நிமிடம் ஓடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இது அண்மையில் நடந்த சம்பவம் போல பகிரப்பட்டு வருகிறது.
Karthik Vivega என்ற பேஸ்புக் பயனர், தானே நீதிபதிகளாக மாறி வாகனத்தை உடைத்து தண்டனை கொடுக்கும் போலீஸாரின் செயலை ஒருவர் செல்போனில் பதிவு செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்ய அது வைரலாகி வருகிறது” என்று குறிப்பிட்டு வீடியோவைப் பகிர்ந்தார்.
மேலும் இந்த காணொலி இணைப்பு 1, இணைப்பு 2 ஆகிய பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு நடத்திய விசாரணையில் அது 2019ஆம் ஆண்டு வெளியான பழைய வீடியோ என்பது தெரியவந்தது.
வைரல் வீடியோவின் முக்கியமான பகுதிகளை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் வழியாக ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் இந்து தமிழ் திசை நாளிதழின் சமூக வலைதளப் பக்கத்தில் 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி இதே வீடியோ பகிரப்பட்டு இருப்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது. மேலும், வீடியோவுடன் இந்து தமிழ் வெளியிட்ட கேப்ஷன் ஒரு வார்த்தை கூட மாறாமல் அப்படியே தற்போது வைரலாகி வருவதையும் கண்டுபிடித்தோம்.
இதனையடுத்து தொடர்புடைய கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் சர்ச் செய்தோம். அதுவும் 2019ஆம் ஆண்டு தமிழ், ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு நம்மை அழைத்துச் சென்றது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, போர் நினைவு ரவுண்டானாவில் கல்லூரி மாணவர் ஒருவர் தனது ஸ்கூட்டரை விட்டுச் சென்றார். அப்போது அங்கு ரோந்து வாகனத்தில் வந்த சப் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தலின் பேரில் ஊர் காவல் படை வீடர் ஸ்கூட்டரை தடியால் அடித்து உடைத்தார். ஸ்கூட்டரின் உரிமையாளர் வந்ததும் அவரை ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு செல்ல சப் இன்ஸ்பெக்டர் அதட்டினார். குறிப்பிட்ட சப் இன்ஸ்பெக்டர் துறைமுகம் ஹரிபாபு என்பதும், ஊர்காவல் படை வீரர் மோகன் என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், "காரணம் எதுவாக இருந்தாலும் அது தவறு. அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறியதாக நியூஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிவு செய்துள்ளது.
தி நியூஸ் மினிட் இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியில், உரிமையாளர் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்த பிறகும் கூட காவலர் பைக்கின் முன்பக்கத்தை அலட்சியமாக அடித்துக் கொண்டே இருக்கிறார். அந்த ரோந்து வாகனம், அந்தப் பாதை வழியாகச் செல்லும் ஒரு விஐபி கான்வோவுக்கு முன்னால் சாலையில் உள்ள வாகனங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நமது தேடலில் நியூஸ் 18 தமிழ்நாடு யூட்யூப் பக்கத்தில் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதன்படி, பைக்கை அடித்து உடைத்த சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டை போலீசார் விளக்கம் அளித்தனர். அதாவது, கல்லூரி மாணவர் கஞ்சா வாங்குவதற்காக அப்பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், போலீசார் கண்டித்தும் கேட்காததால் இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி அவரை அப்பகுதியில் இருந்து விரட்டியதாக தெரிவித்தனர்.
இந்த ஆதாரங்கள் மூலமாக தற்போது வைரலாவது 2019ஆம் ஆண்டு வெளியான பழைய காணொலி என்பதும், இதுதொடர்பாக அப்போதே போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் உறுதி செய்தோம்.
முடிவு
சாலையோரம் நின்றிருந்த பைக்கை போலீசார் அடித்து உடைப்பதாக வைரலாகும் வீடியோ இப்போது எடுக்கப்பட்டது அல்ல. 2019ஆம் ஆண்டு வெளியான பழைய வீடியோ, ஆறு வருடங்கள் கழித்து இப்போது நடந்தது போல தவறாக பகிரப்பட்டு வருகிறது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

