இலங்கைக்கு விமானம் மூலம் இந்தியா பாலம் கொண்டு சென்றதாக பரவும் வீடியோ - உண்மை இதுதான்
இலங்கைக்கு விமானம் மூலம் இந்தியா பாலம் கொண்டு சென்றதாக பரவும் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது.

Claim :
இலங்கைக்கு விமானம் மூலம் இந்தியா பாலம் கொண்டு சென்றதுFact :
வைரல் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் கோரதாண்டவம் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானது. பாலங்கள், சாலைகள் சேதமடைந்ததால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 627 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றன.
டிட்வா புயல் காரணமாக பேரழிவைச் சந்தித்துள்ள இந்தியாவுக்கு ஆபரேஷன் சாகர் பந்து மூலம் போர்க் கால அடிப்படையில் இந்தியா நிவாரண உதவிகளை செய்து வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் இலங்கை சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்களும் இலங்கை மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பரவும் தகவல்
இலங்கையில் சேதமடைந்த பாலங்களை மீண்டும் நிறுவுவதற்காக இந்தியாவில் இருந்து ராணுவ விமானம் மூலம் பாலங்கள் கொண்டு செல்லபட்டதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் விமானம் பறந்தபடி இருக்க, அதற்கு கீழே தொங்கியபடி முழு பாலத்தை எடுத்துச் செல்வது போல காட்சிகள் உள்ளன.
janarthanan.thampirajh என்ற பேஸ்புக் பயனர், “இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்படும் 110 அடி நீளமுள்ள 10 பாலங்கள்” என்று குறிப்பிட்டு வைரல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை சுமார் 10,000 பேர் வரை பார்வையிட்டிருந்தனர்.
இதே கருத்துடன் பதிவு 1 (Archive) , பதிவு 2, பதிவு 3 என வீடியோ வைரலாவதை கவனிக்க முடிந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாக தெரியவந்தது.
வைரல் வீடியோவை முழுவதுமாக பார்த்த நிலையில், பாலத்தை விமானத்தில் தொங்கவிட்டபடி எடுத்துச் செல்ல முடியுமா என்ற கேள்வி நமக்கு எழுந்தது. முதலில் விமானங்கள் மூலம் இலங்கைக்கு பாலத்தின் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டதா என கூகுளில் சர்ச் செய்தோம். டிசம்பர் 5ஆம் தேதி தினமணி இணைய தளத்தில், “மழையால் தத்தளிக்கும் இலங்கைக்கு நகரும் பாலம்: இந்தியா தொடா்ந்து உதவி” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தி நமக்கு கிடைத்தது.
செய்தியில், “இலங்கைக்கு உணவு, மருந்து என 53 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. அங்கு இந்திய விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டா்கள், இரு சேட்டக் ஹெலிகாப்டா்கள், 80 தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடா்ச்சியாக பெய்லி நகரும் பால அமைப்பு மற்றும் நூற்றுக்கணக்கான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை சி-17 குளோப் மாஸ்டா் விமானம் மூலம் இந்தியா புதனழ்கிழமை அனுப்பியதாக இந்திய தூதரகம் தெரிவித்தது. இந்தப் பாலத்தை உடனடியாக அமைக்க இந்தியாவில் இருந்து பொறியாளா்கள் உள்பட 22 வல்லுநா்களும் சென்றுள்ளதாக தூதரகம் தெரிவித்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் சமூக வலைதளப் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில், “மற்றுமொரு C-17 விமானம் பெய்லி பாலம் பாகங்களை சுமந்து இலங்கையில் தரையிறங்கியது. சில மணிநேரங்களில் இந்த மாடுலர் கட்டமைப்புகள் விரைவாக ஒன்றிணைக்கப்பட முடியும். பாலம் நிறுவுவதற்கு உதவி பொறியாளர்கள் உட்பட 25 பேர் கொண்ட நிபுணர் குழுவும் வந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாலத்தின் பாகங்களை ராணுவ வீரர்கள் விமானத்தில் இருந்து இறக்குவது போன்ற புகைப்படங்களும் உள்ளன.
இந்த ஆதாரங்கள் மூலமாக இலங்கைக்கு இந்தியா பெய்லி பாலம் கொண்டு செல்லப்பட்டதை உறுதி செய்துகொண்டோம். ஆனால், வைரல் வீடியோவில் இருப்பது போல சுமந்து சென்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதனால் வைரல் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை நாம் சரிபார்த்தபோது அதில் Veo என்ற வார்த்தை இடம்பெற்றிருந்ததை கவனித்தோம். Veo என்பது ஏஐ வீடியோக்களை உருவாக்கும் ஒரு கூகுள் ஜெமினி டூல் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வைரல் வீடியோவின் முக்கிய காட்சியை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து decopy.ai என்ற ஏஐ சரிபார்ப்பு தளத்தில் உள்ளிட்டோம். அதன் முடிவு 95 சதவிகிதம் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று இருந்தது.
இந்த ஆதாரங்கள் மூலம் வைரலாவது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை உறுதி செய்தோம்.

