Sat Jul 12 2025 13:14:09 GMT+0000 (Coordinated Universal Time)
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடக்க ரூ.300 கட்டணமா?
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடக்க ஆளும் அரசு ரூ.300 வசூல் செய்கிறது என்ற செய்தி பரவும் நிலையில், விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்ல ரூ.100 கட்டணமும், ஸ்பெஷல் வரிசைக்கு ரூ.300 கட்டணமும் வசூலிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

Claim :
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடக்க ஆளும் அரசு ரூ.300 வசூல் செய்கிறது.Fact :
விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்ல ரூ.100 கட்டணமும், ஸ்பெஷல் வரிசைக்கு ரூ.300 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
முக்கடல் சங்கமிக்கும் குமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும், இந்தியாவில் முதல் கடல் மேல் கட்டப்பட்ட நீண்ட கண்ணாடி பாலத்தை டிசம்பர் 30, 2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக கட்டப்பட்ட இந்த பாலத்தை தினமும் ஆயிரக்கணக்கிலான பொதுமக்களும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளும் பார்வையிட்டு செல்கின்றனர்.
விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கு 77 மீட்டர் நீளத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடலின் மேல் கம்பீரமாக; பார்ப்போரை பிரமிக்க வைக்கும் இந்த கண்ணாடி பாலத்தில் அதிகளவு கூட்டம் கூடுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில், கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் நடக்க ஆளும் திமுக அரசு கட்டணம் வசூல் செய்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதில் @Narasim18037507 எனும் எக்ஸ் பயனர், ‘77 மீட்டர் நீளம் கொண்ட கண்ணாடி பாலத்தில் நடக்க 300 ரூபாய் வசூல் செய்யும் திமுக அரசு டோல் கட்டணத்தை குறை சொல்லுது’ என்று பதிவிட்டிருக்கிறார். பல சமூக வலைத்தள பயனர்கள் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் பதிவின் தொடர்புடைய இணைப்பை இங்கே காணலாம்.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், வேறு கட்டணங்களை கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்திற்கான கட்டணம் என தவறாக சித்தரித்து பகிரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில், கன்னியாகுமரி கண்ணாடி பாலம் தொடர்பான கட்டணங்களை அறிய, ‘Kanyakumari Glass Bridge Entry Fees’ எனும் வார்த்தைகளோடு இணையத்தில் தேடினோம். அப்போது சரியான தரவுகள் அடங்கிய செய்தியை ‘சமயம் தமிழ்’ கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருக்கிறது.
அதில், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கண்ணாடி இழை பாலத்திற்கு கட்டணம் வசூல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால், தற்போது எந்த கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அப்படியென்றால், எதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து ஆராய, கன்னியாகுமரி சுற்றுலாக் கட்டணங்கள் என்னென்ன என இணையத்தில் தேடிப் பார்த்தோம். அதில் யூடியூப் தளத்தில் சுற்றுலாப் பயணிகளின் பல வீடியோக்களை காணமுடிந்தது. அதில், நுழைவுக் கட்டணம் முதற்கொண்டு கண்ணாடி இழை பாலத்தை சுற்றிப்பார்க்க என்னென்ன தேவை என்பதை @foodvettai எனும் யூடியூப் பக்கத்தில் சுற்றுலாப் பயணி ஒரு பதிவேற்றியுள்ளார்.
அதில், கட்டண விவரங்களை அவர் தெளிவாக விளக்கியுள்ளார். காலை 7.:45 மணி முதல் 4 மணிவரை கண்ணாடி பாலத்தை பார்வையிடலாம் என்று கூறும் அவர், படகில் செல்ல ரூ.75 மற்றும் ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், 75 ரூபாய் கட்டணத்தில் நீண்ட வரிசை இருக்கும் எனவும், ரூ.300 கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கினால் வேகமாக விவேகானந்தர் பாறையை நோக்கிய படகு சவாரிக்கு டிக்கெட் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான ரசீதை அந்த சுற்றுலாப் பயணி வீடியோவில் காண்பித்துள்ளார். மேலும், படகில் விவேகானந்தா பாறையை அடைந்தவுடன், அங்கு ரூ.30 கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டை பெற வேண்டும் என்று கூறுகிறார். இந்த வீடியோ பிப்ரவரி மாதத்தில் எடுக்கப்பட்டிருந்தது. இதில் எந்த இடத்திலும் கண்ணாடி இழை பாலத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர் குறிப்பிடவில்லை. அதுமட்டுமில்லாமல், படகு சவாரி மற்றும் விவேகானந்தா பாறை உள்நுழைவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனை உறுதிசெய்ய அரசு ஏதேனும் தகவல்கள் வெளியிட்டுள்ளதா என்பதை தேடி பார்க்கும்போது, தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு, கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தின் கட்டணம் தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளது.
அதில், “கண்ணாடி பாலத்தைப் பயன்படுத்த எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்குப் படகில் செல்ல சாதாரண கட்டணம் ரூ.100 வசூலிக்கப்படுகிறது. படகில் செல்வதற்கு முன்னுரிமை பெறச் சிறப்புக் கட்டணமாக ரூ.300 செலுத்தலாம். விவேகானந்தர் பாறையை அடைந்தபின், அங்குள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் செல்ல நுழைவுக் கட்டணமாக ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டு ஆதாரங்களை இணைத்திருந்தது.
முடிவு:
மேற்கொண்ட ஆய்வுகளின்படி, புதிதாகத் திறக்கப்பட்ட கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. மாறாக படகு போக்குவரத்துக்கும், விவேகானந்தா பாறைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதை கண்ணாடி இழை பாலத்திற்கு எனத் திரித்து சமூக வலைத்தளங்களில் பயனர்கள் தவறுதலாக பதிவிட்டு வருவது உறுதிசெய்யப்பட்டது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் சமூக வலைத்தளங்களில் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.
Claim : கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடக்க ஆளும் அரசு ரூ.300 வசூல் செய்கிறது.
Claimed By : Social Media Users
Claim Reviewed By : TeluguPost FactCheck
Claim Source : Social Media
Fact Check : Misleading
Next Story