அதிமுக - பாஜக கூட்டணி, அன்வர் ராஜா குறித்து பரவும் நியூஸ் கார்டுகள் - உண்மை என்ன?
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாகவும், அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது குறித்தும் போலி நியூஸ் கார்டுகள் பரவி வருகின்றன.

Claim :
அதிமுக - பாஜக கூட்டணி, அன்வர் ராஜா குறித்து பரவும் நியூஸ் கார்டுகள்Fact :
பரவும் 3 நியூஸ் கார்டுகளும் போலியானவை
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அதிமுகவும் பாஜகவும் கடந்த ஏப்ரல் மாதமே கூட்டணியை அறிவித்தன. பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று தெரிவித்து வந்த எடப்பாடி பழனிசாமி, திடீரென அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது விமர்சனத்திற்கு உள்ளாகியது. பாஜகவுடன் கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு அதிமுக தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்தவருமான அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இதுதொடர்பாக அதிமுக தலைவர்கள் அன்வர் ராஜாவை விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும், இந்த விவகாரத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு போலி நியூஸ் கார்டுகள் வைரலாகி வருகின்றன.
பரவும் தகவல்
பதிவு - 1
இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவுக்கு தேவையில்லை என்றும், அன்வர் ராஜா திமுகவுக்கு போனால் போகட்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Dr.Suriya என்ற எக்ஸ் பதிவர், இஸ்லாமிய சொந்தங்கள் பார்க்கும் வரை பகிர்வோம் என்று குறிப்பிட்டு வைரல் கார்டை பகிர்ந்திருந்தார். மேலும் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் கார்டு வைரலானது.
பதிவு - 2
பாஜக கூட்டணியால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பது உண்மைதான் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
காலடியார் என்ற எக்ஸ் பக்கத்தில், ‘அடுத்த விக்கெட்’ என்று குறிப்பிட்டு வைரல் கார்டு பகிரப்பட்டு இருந்தது. மேலும் இணைப்பு 1, இணைப்பு 2 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் வைரல் நியூஸ் கார்டு ஷேர் செய்யப்பட்டிருந்தது.
பதிவு - 3
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவுக்கு இன்பநிதி பாசறை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது. இணைப்பு 1, இணைப்பு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் இதனைக் காணலாம்.
உண்மை சரிபார்ப்பு
வைரல் கார்டுகளின் உண்மைத் தன்மை குறித்த TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணையில் அவை போலியான கார்டுகள் என்பது தெரியவந்தது.
பதிவு - 1
வைரல் நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் ஜூலை 21ஆம் தேதியிட்டு பரவிய நிலையில், அதன் சமூக வலைதளப் பக்கங்களை ஸ்கேன் செய்தோம். அதில், ராஜேந்திர பாலாஜி அவ்வாறு பேசியதாக நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளர் மதலை ஆரோனை தொடர்புகொண்டபோது, வைரல் நியூஸ் கார்டு போலியானது என்று விளக்கம் அளித்தார். அதேபோல, புதிய தலைமுறை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வைரல் கார்டு போலியானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் வாக்கு அதிமுகவுக்கு தேவையில்லை என ராஜேந்திர பாலாஜி ஏதேனும் பேசியுள்ளாரா என்பது குறித்து கூகுள் சர்ச் மூலம் தேடினோம். ஆனால், அவர் அப்படியான கருத்தை தெரிவித்ததாக எந்த ஆதாரங்களும் நமக்கு கிடைக்கவில்லை. ஆகவே, இஸ்லாமியர் வாக்குகள் அதிமுகவுக்கு தேவையில்லை என ராஜேந்திர பாலாஜி பேசவில்லை, அவ்வாறு வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுப்படுத்தியுள்ளது.
பதிவு - 2
வைரல் நியூஸ் கார்டு நியூஸ் 18 தமிழ்நாடு பெயரில் ஜூலை 21 தேதியிட்டு வெளியாகி இருந்ததால் அதன் சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்தோம். ஆனால், செங்கோட்டையன் அப்படி பேசியதற்கான எந்த ஆதாரங்களும் நமக்கு கிடைக்கவில்லை. அண்மையில் அவர் ஏதாவது பேட்டி அளித்துள்ளாரா, அல்லது அறிக்கை வெளியிட்டுள்ளாரா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்தோம். நமக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் லஷ்மணனை தொடர்புகொண்டு பேசினோம். அது போலியான நியூஸ் கார்டு என்றும் அதனை தாங்கள் வெளியிடவில்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும் வைரல் நியூஸ் கார்டு போலியானது என நியூஸ் 18 தமிழ்நாடு டிஜிட்டல் பக்கத்திலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் தனது எக்ஸ் பக்கத்தில், “தவறான செய்தி (Fake News)” என்று குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம் வைரல் நியூஸ் கார்டு போலியானது என்பதையும், செங்கோட்டையன் அவ்வாறான கருத்தை தெரிவிக்கவில்லை என்பதையும் TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
பதிவு - 3
அன்வர் ராஜாவுக்கு பதவி என பரவும் நியூஸ் கார்டும் நியூஸ் 18 தமிழ்நாடு பெயரிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், அதன் சமூக வலைதளப் பக்கங்களில் ஆய்வு செய்தோம். ஆனால், அப்படியான எந்த நியூஸ் கார்டும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து நியூஸ் 18 தமிழ்நாடு டிஜிட்டல் பொறுப்பாளர் லட்சுமணனை தொடர்புகொண்டபோது, வைரல் நியூஸ் கார்டு போலியானது என்பதை அவர் விளக்கினார். மேலும், நியூஸ் 18 தமிழ்நாடு டிஜிட்டல் பக்கத்திலும் வைரல் நியூஸ் கார்டு போலியானது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் இளைஞரணி அலுவலகத்தில் பணியாற்றும் பிரகாஷை தொடர்புகொண்டு கேட்டபோது, அன்வர் ராஜாவுக்கு திமுக பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், திமுகவை விமர்சனம் செய்வதற்காக இவ்வாறாக போலி நியூஸ் கார்டுகள் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாகவும், அன்வர் ராஜா குறித்து முன்னாள் அமைச்சர்கள் பேசியதாக வைரலாகும் நியூஸ் கார்டுகள் போலியானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிட TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

