சிபிஐ விசாரணைக்குப் பிறகு விஜய் முகத்தை மூடியபடி வெளியேறினாரா?
டெல்லி சிபிஐ விசாரணைக்குப் பிறகு தவெக தலைவர் விஜய் முகத்தை முடியபடி வெளியேறியதாக பரவும் புகைப்படம் தவறானது

Claim :
சிபிஐ விசாரணைக்குப் பிறகு விஜய் முகத்தை மூடிக்கொண்டு சென்றார்Fact :
விஜய் முகத்தை மூடவில்லை, வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது
கரூரில் 2025 செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் தற்காலிக அலுவலகம் அமைத்து காவலர்கள், அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் உள்பட பலரையும் சிபிஐ விசாரித்துள்ளது. இந்த விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி அஜஸ் ரஸ்தோஸ்கி தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது. தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மதியழகன் உள்ளிட்டோருடனும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் ஜனவரி 12ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் கரூர் நெரிசல் சம்பவத்தின் போது என்ன நடந்தது என விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக அவரிடம் கையெழுத்துப் பெற்றுவிட்டு சிபிஐ விசாரணையை நிறைவு செய்தது. சுமார் 7 மணி நேர விசாரணை முடிந்த பிறகு விஜய் காரில் ஏறி புறப்பட்டு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார்.
பரவும் தகவல்
சிபிஐ விசாரணை முடிந்து திரும்பிய விஜய் கேமராவைப் பார்க்காமல் தனது முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு சென்றதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, சன் நியூஸ் வெளியிட்ட வீடியோவின் ஸ்க்ரீன் ஷார்ட் போல அந்த புகைப்படம் இருந்ததை கவனிக்க முடிந்தது. இதனை பகிர்ந்து பலரும் விஜய்யை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
@aravinth43AK என்ற எக்ஸ் பக்கத்தில், “முகத்தை மூடிட்டு போறன் காருக்குள்ள வச்சு அடி பொளக்குறாங்களோ.
அடி பலமோ விஜய்... Cbi officers 🔥🔥” என்று குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இதே கருத்துடன் பதிவு 1, பதிவு 2, பதிவு 3 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிரப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை TeluguPost உண்மை கண்டறியும் குழு ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. குறிப்பாக வைரல் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு பரவுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் வைரல் புகைப்படத்தை கூர்ந்து கவனித்தபோது சில மாறுதல்கள் இருப்பதை கண்டறிந்தோம். அதாவது சன் நியூஸ் லோகோ அழிந்து இருந்ததையும், டெல்லி என்ற வார்த்தையில் சற்று அழிந்திருந்ததையும், தேதி என்ற பகுதி மங்கலாக இருந்ததையும் பார்த்தோம். மேலும் Spicy Chill என்ற லோகோ ஒன்று இருப்பதையும் கண்டறிந்தோம்.
சன் நியூஸ் பெயரில் அந்த புகைப்படம் வெளியான நிலையில், ஜனவரி 12ஆம் தேதி அந்நிறுவனம் வெளியிட்ட பதிவுகளை நாம் ஸ்கேன் செய்தோம். அதில், “கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு: டெல்லியில் 7 மணி நேர சிபிஐ விசாரணை முடிந்து திரும்பிய விஜய்” என்ற தலைப்பி9ல் வெளியிடப்பட்ட வீடியோவை நாம் கண்டுபிடித்தோம். வீடியோவை முழுவதுமாக பார்த்தபோது விஜய் எந்த இடத்திலும் கைகளால் முகத்தை முடிக்கொண்டு செல்லவில்லை என்பதை உறுதி செய்தோம்.
இதேபோல புதிய தலைமுறை தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவிலும், விஜய் முகத்தை கைகளால் மறைக்காமல் செல்வது தெரிந்தது. அத்துடன், விஜய் சிரித்தபடியே கையசைத்துச் செல்வதை நாம் காண முடிந்தது.
இதேபோல நியூஸ் 18 தமிழ்நாடு, ஜீ தமிழ் செய்திகள் ஆகிய நிறுவனங்களும் அதே வீடியோவை வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு உதவி ஆசிரியர் தினேஷை தொடர்புகொண்டு பேசியபோது, அதனை தாங்கள் வெளியிடவில்லை என்றும், அது போலியாக உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தினார். இந்த ஆதாரங்கள் மூலமாக விஜய் முகத்தை முடிக்கொள்வது போன்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு
சிபிஐ விசாரணைக்குப் பிறகு நடிகர் விஜய் கைகளால் முகத்தை மூடியபடி வருவது போல வெளியான புகைப்படம் போலியானது, எடிட் செய்யப்பட்டது. உண்மையில் விஜய் சிரித்தபடியே கைகளை அசைத்துக்கொண்டு வெளியே வருவது வீடியோ ஆதாரம் மூலமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக் கொள்கிறது.

