விஜய் பரப்புரை வாகனத்தின் Hard Disk அழிப்பு என பரவும் தகவல் உண்மையா?
விஜய் பரப்புரை வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் அழிப்பு என பரவும் நியூஸ் கார்டு போலியானது.

Claim :
விஜய் பரப்புரை வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் அழிக்கப்பட்டதாக பரவும் நியூஸ் கார்டுFact :
நியூஸ் கார்டு போலியானது, தவெக அலுவலகத்தில் எந்த ஆதாரங்களும் அழிக்கப்படவில்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி பொது மக்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிரான வழக்கில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் சிறப்பு புலனாய்வுக் குழு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணைகளுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, சிபிஐ அதிகாரிகள் உடனடியாக தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பரவும் தகவல்
விஜய்யின் பரப்புரை வாகனத்தின் சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் பனையூர் தவெக அலுவலக வளாகத்தில் எரிக்கப்பட்டதாக புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நியூஸ் கார்டில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவங்கள் தொடர்பாக தவெக தலைவரின் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கியஹார்ட் டிஸ்க் பனையூர் தவெக அலுவலக வளாகத்தில் எரிக்கப்பட்டதாக தகவல்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
@Bindra_Offl என்ற எக்ஸ் பக்கத்தில், “இப்ப வர எப்படி தப்பிக்கலாம் பழிய யாரு மேல தூக்கி போடலாம்னு தான் பாத்துட்டு இருக்கான் வலுக்க” என்று விஜய்யின் கணக்கை டேக் செய்து கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
மேலும் கீழே உள்ள இணைப்புகளிலும் இந்த வைரல் நியூஸ் கார்டு பகிரப்பட்டு தவெக மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பதிவு 1, பதிவு 2, பதிவு 3
உண்மை சரிபார்ப்பு
வைரல் நியூஸ் கார்டின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அது போலியானது என்பது தெரியவந்தது.
முதலில் தவெக அலுவலகத்தில் கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் அழிப்பு என தகவல்கள் ஏதேனும் வந்துள்ளதா என்று கூகுளில் தேடியபோது அதுபோன்ற எந்த செய்திகளும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து, தந்தி டிவி பெயரில் வைரலாகும் நியூஸ் கார்டை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். வைரல் நியூஸ் கார்டில் உள்ள எழுத்துரு (Font) அளவுக்கும் தந்தி டிவி சமூக வலைதளப் பக்கங்களின் எழுத்துருவுக்கும் வித்தியாசங்கள் இருப்பதை கண்டறிந்தோம். குறிப்பாக கடைசியில் உள்ள மூன்று வரிகள் அழிக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டது போன்று இருந்தது.
இதனையடுத்து, அக்டோபர் 17ஆம் தேதி தந்தி டிவியின் சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்த நிலையில், அப்படி எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை என்பதை உறுதி செய்துகொண்டோம். இதனையடுத்து தந்தி டிவி பொறுப்பாளர் மோகன்ராஜிடம் வாட்ஸ் ஆப் வழியாக பேசியபோது, “வைரலாகும் நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிடவில்லை. அது போலியானது” என்று விளக்கம் அளித்தார். அன்று வெளியான தவெக தொடர்புடைய நியூஸ் கார்டையும் நமக்கு அனுப்பி வைத்தார்.
வைரலாகும் நியூஸ் கார்டில் எரிக்கப்பட்ட ஹார்டு டிஸ்க் என பரவும் புகைப்படத்தை மட்டும் தனியாக பிரித்து எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதன் முடிவில் அந்த புகைப்படம் 2019ஆம் ஆண்டு aesonlabs என்ற இணையதளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு இருப்பதைக் கண்டறிந்தோம்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணியையும் நாம் தொடர்புகொண்டோம். அவரும் வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது, தவெகவை நேரடியாக எதிர்க்க முடியாமல் இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும் உண்மை சரிபார்ப்பு தளமான factcrescendo-வும் வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என்பதை விளக்கியுள்ளது. இந்த ஆதாரங்கள் மூலமாக தவெக அலுவலகத்தில் விஜய்யின் பரப்புரை வாகன சிசிடிவி காட்சிகள் உள்ளடங்கிய ஹார்டு டிஸ்க் உள்பட எந்த தரவுகளும் அழிக்கப்படவில்லை என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
விஜய்யின் பரப்புரை வாகனத்தின் சிசிடிவி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் பனையூர் தவெக அலுவலக வளாகத்தில் எரிக்கப்பட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

