விஜய் வருகையால் சிங்கப்பூர் - மலேசியா சாலையில் அதிக போக்குவரத்து நெரிசலா?
விஜய் வருகையால் சிங்கப்பூர் - மலேசியா சாலையில் அதிகமான போக்குவரத்து நெரிசல் என பழைய புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

Claim :
விஜய் வருகையால் சிங்கப்பூர் - மலேசியா சாலையில் போக்குவரத்து நெரிசல்Fact :
விஜய் வருகையால் போக்குவரத்து நெரிசல் என பழைய புகைப்படம் பரவி வருகிறது
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், 2024 பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையை விஜய் தொடங்கினார். செப்டம்பர் 27ஆம் தேதி விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. எனினும், விஜய் தனது பரப்புரையை மீண்டும் நடத்தி வருகிறார்.
விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், தனது கடைசி திரைப்படம் ஜனநாயகன் என்று அறிவித்து உள்ளார். ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27 மலேசியாவில் நடைபெற்றது. இதில் மலேசியா வாழ் தமிழர்களும் பலரும் கலந்துகொண்டனர். அதே சமயம் விஜய் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா தொடர்பாக போலிச் செய்திகளும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
பரவும் தகவல்
தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகம் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சிங்கப்பூரில் இருந்து சாலை மார்க்கமாக பலரும் மலேசியா சென்றதாகவும், இதனால் சாலை முழுக்க கூட்ட நெரிசல் ஏற்பட்டது எனவும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் சாலை முழுவதும் கார்களும், இரு சக்கர வாகனங்களும் என மக்கள் கூட்டம் அணிவகுத்து நின்றது.
வைரல் புகைப்படத்தை பகிர்ந்த @itisbloodysweet என்ற எக்ஸ் பயனர், “சிங்கப்பூர் முதல் மலேசியா வரை கூட்டத்தைப் பாருங்கள்.. இதெல்லாம் தளபதி விஜய்க்காக மட்டுமே” என்று கமெண்ட் செய்திருந்தார்.
இதே கருத்துடன் பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் புகைப்படங்கள் பகிரப்பட்டு இருந்தன.
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து Telugupost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. வைரலாவது பழைய புகைப்படம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் விஜய் வருகையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதா என்று தேடியபோது அதுபற்றிய எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. இதனால் வைரல் புகைப்படம் தொடர்பாக சந்தேகம் எழுந்த நிலையில், கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் தேடினோம். அதில் குறிப்பிட்ட புகைப்படம் 2017ம் ஆண்டே பகிரப்பட்டு இருப்பது தெரியவந்தது.
johornow என்ற இணையதளப் பக்கத்தில் 2017ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி வைரல் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில், “சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் இன்று காலை உட்லேண்ட்ஸ் மற்றும் தூவாஸ் சோதனைச் சாவடி செயல்பாட்டை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும், இன்று காலை நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகவே இருந்தது. சில ஓட்டுநர்கள் 2 மணி நேரம் வரை காத்திருந்ததாகக் கூறினர்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதே புகைப்படம் 2020ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி mustsharenews என்ற இணையதளம் வெளியிட்ட செய்தியில் பகிரப்பட்டு இருந்தது. அதில், “சிங்கப்பூர்-மலேசியா எல்லை குறிப்பிட்ட பயணங்களுக்கு மட்டும் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதிலும் புகைப்படம் பேஸ்புக்கில் இருந்து எடுக்கப்பட்டது என லிங்க் பகிரப்பட்டு இருந்தது.
அதன்படி, குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்தில் 2017ம் ஆண்டே புகைப்படம் பகிரப்பட்டு இருந்தது.
இதே புகைப்படம் வெவ்வேறு காலகட்டங்களில் பகிரப்பட்டு இங்கே, இங்கே இருப்பதையும் நாம் கண்டுபிடித்தோம்.
இந்த ஆதாரங்கள் மூலமாக வைரலாகும் புகைப்படம் 2017ஆம் ஆண்டே வெளியானது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதற்கும் விஜய் வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், தற்போது விஜய் வருகையால் அதிகப்படியான கூட்ட நெரிசல் என தவறான தகவல் பரவி வருகிறது.
முடிவு
விஜய் வருகையால் சிங்கப்பூர் - மலேசியா சாலையில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் என தவறான தகவலுடன் புகைப்படம் பரவுகிறது. உண்மையில் அந்த புகைப்படம் 2017ஆம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வருகிறது என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

