பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் இஸ்லாமியர்கள் அதிகமா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் இஸ்லாமியர்கள் அதிகம் என பரவும் தகவல் பொய்யானது.

Claim :
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் இஸ்லாமியர்கள் அதிகம்.Fact :
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த பெரும்பாலானோர் இந்துக்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கவாதிகள் நடத்திய இரக்கமற்ற கொடூர தாக்குதல் இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியாகினர். 13 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் விசா ரத்து, பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து உடனே வெளியேற உத்தரவு என பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆனால், பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.
பயங்கவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் மதம் என்னவென்று கேட்டு இந்துக்களை மட்டும் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்றதாக செய்திகள் வெளிவந்தன. இதனை முன்வைத்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
பரவும் தகவல்
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் முழுமையான பட்டியல் எனவும், அது இந்தியா டிவி செய்திகளில் ஒளிபரப்பாகியுள்ளதாகவும் ஒரு லிஸ்ட் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதில், இறந்த 26 பேர்களில் 15 பேர் முஸ்லீம்கள் என்றும், ஆனால் ஊடகங்கள் தவறாகக் கூறி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hau student என்ற பேஸ்புக் பயனர் இந்த பட்டியலை வெளியிட்டு, “இறந்த 26 பேரில் 15 பேர் முஸ்லிம் பெயர்கள். கொலை செய்வதற்கு முன்பு பெயர்கள் கேட்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாக கூச்சலிடும் கோடி மீடியாவை இது அம்பலப்படுத்துகிறது. போலி செய்தி சேனல்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
Md Sayid என்ற பேஸ்புக் பயனரும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் இணைப்பு 1, இணைப்பு 2 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் இதே கருத்துடன் பதிவிடப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் கூற்றின் உண்மைத் தன்மை குறித்து Telugupost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், தகவல் தவறானது என்பது தெரியவந்துள்ளது.
அது இந்தியா டிவியில் வெளியான பட்டியல் என்று பகிரப்படுவதால் india tv pahalgam attack list என்ற கீ வேர்டு துணையுடன் கூகுளில் சர்ச் செய்தோம். அதில், ஏப்ரல் 23ஆம் தேதி இந்தியா டிவி இணையதளத்தில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பாதிக்கப்பட்ட 26 பேரின் பெயர்களையும் அதிகாரிகள் வெளியிட்டனர் | பெயர்கள் மற்றும் விவரங்களை இங்கே பாருங்கள்” என்ற தலைப்பில் வெளியான செய்தி கிடைத்தது. அதில், பஹல்காமைச் சேர்ந்த சையது அடில் ஹுசைன் ஷா என்பவர் மட்டுமே இஸ்லாமியர் என்பது தெரியவந்தது.
மேலும் அந்த செய்தியில், “பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அனைவரின் பெயர்களையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஏப்ரல் 23 நடந்த கொடூரமான சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த ஒரு நாள் கழித்து இந்த உறுதிப்படுத்தல் வந்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியா டிவி யூட்யூப் சேனலில் உயிரிழந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் சையது அடில் ஹுசைன் ஷா என்பவர் மட்டுமே இஸ்லாமியர் என்று தெரியவந்துள்ளது. ஆகவே, இந்தியா டிவி வைரலாகும் பதிவை வெளியிடவில்லை என்பதை Telugupost உண்மை சரிபார்ப்புக் குழு உறுதி செய்துகொண்டது.
உயிரிழந்தவர்கள் பட்டியல் மற்றும் முழு விவரம் குறித்த நமது மேலதிக தேடலில், லைவ் மிண்ட், பிசினஸ் ஸ்டான்டர்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய இணையதளங்களிலும் இதே பட்டியல் வெளியாகி இருந்தது.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சையது அடில் ஹுசைன் ஷா என்ற இஸ்லாமியர் குறித்து கூகுளில் தேடினோம். “சையத் அடில் உசேன்: பயங்கரவாதியைத் தடுக்க முயன்ற ஹீரோ” என்ற தலைப்பில் இந்தியா டுடே வெளியிட்ட கட்டுரை நமக்கு கிடைத்தது.
அதில், “இந்த கொடூரமான தாக்குதலில் இறந்த ஒரே உள்ளூர் மற்றும் ஒரே முஸ்லிம் சையத் அடில் உசேன் தான். தாக்குதலின் போது அதனை தடுக்க முயன்று, சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற முயன்ற குதிரை ஓட்டி சையத் அடில் உசேன் இறந்தார். ஹுசைனின் இறுதிச் சடங்கில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா நேரில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றபோது குறிவைத்து சுடப்பட்டுள்ளார் என்று முதல்வர் தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழில் ஏபிபி நாடு செய்தி இணையதளமும், தீவிரவாதிகளை தீரத்துடன் எதிர்கொண்ட முஸ்லிம் இளைஞர் வீர மரணம்; யார் இந்த சையது உசேன்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் மூலமாக பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டுமே இஸ்லாமியர் என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் அதிகமானோர் இஸ்லாமியர்கள் என பரவும் கூற்று தவறானது. பஹல்காமைச் சேர்ந்த சையல் அடில் ஹுசன் என்ற இஸ்லாமியர் மட்டுமே பயங்கரவாதிகளிடம் சண்டையிட்டு வீர மரணம் அடைந்துள்ளார். ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.

