திமுகவில் இணைந்த பிறகு ஸ்டாலின் காலில் விழுந்தாரா ஓ.பன்னீர்செல்வம்?
திமுகவில் இணைந்த பிறகு ஸ்டாலின் காலில் ஓ.பன்னீர்செல்வம் விழுந்ததாக போலிப் புகைப்படம் தவறான தகவலுடன் பகிரப்பட்டு வருகிறது

Claim :
திமுகவில் இணைந்த பிறகு ஸ்டாலின் காலில் பன்னீர்செல்வம் விழுந்ததாக பரவும் புகைப்படம்Fact :
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் தவறான தகவலுடன் பரவுகிறது
அதிமுக சார்பில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக செயல்பட்ட பன்னீர்செல்வம், 2017ஆம் ஆண்டு தர்மயுத்தம் தொடங்கினார். பிறகு தனது அணியை எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைத்து துணை முதல்வரானார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தரப்பட்டது. எனினும், ஒற்றைத் தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அதிமுகவில் சேர ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்து தோல்வியில் முடிந்தன. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மாற்றுக் கட்சிகளில் சேரத் தொடங்கினர். இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 27ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழக வரலாற்றில் ஒரு கட்சியில் முதல்வராக இருந்தவர் மாற்றுக் கட்சியில் இணைவது இதுதான் முதல்முறை.
பரவும் தகவல்
திமுகவில் இணைந்த பிறகு மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து ஓ.பன்னீர்செல்வம் ஆசிர்வாதம் பெற்றதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முதல்வர் ஸ்டாலின் பழக்கூடையுடன் நின்றுகொண்டிருக்க, அவரது கால்களை பிடித்தபடி ஓ.பி.எஸ் இருக்கிறார்.
வைரல் புகைப்படத்தை பகிர்ந்த மாதேஷ் 𝗧𝗩𝗞 என்ற எக்ஸ் பயனர், “நேற்று வரை மோடி காலில் 😂 இன்று முதல் ஸ்டாலின் காலில் 💦பரம்பரை அடிமை இன்று திமுக - வில் இணைகிறது” என்று விமர்சனம் செய்திருந்தார்.
நேற்று வரை மோடி காலில் 😂
— மாதேஷ் 𝗧𝗩𝗞 (@V_F_C_Madesh) February 27, 2026
இன்று முதல் ஸ்டாலின் காலில் 💦
பரம்பரை அடிமை இன்று திமுக - வில் இணைகிறது 🤦🤦🤦 pic.twitter.com/6O8kR0uFMq
மேலும் வைரல் புகைப்படம் அதே கூற்றுடன் பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிரப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அது தவறான தகவல், ஓ.பன்னீர்செல்வம் ஸ்டாலின் காலில் விழவில்லை என்பது தெரியவந்தது.
முதலில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட புகைப்படம், வீடியோக்களை தேடினோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியிட்ட பதிவில், “ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 27, 2026
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில்… pic.twitter.com/I2YoNAxgis
முதல்வர் வெளியிட்ட முதல் புகைப்படத்தில் அவரை ஓ.பன்னீர்செல்வம் கட்டிப்பிடித்தபடி இருக்கிறார். இரண்டாவது புகைப்படத்தில் ஓ.பி.எஸ் முதல்வருக்கு பொன்னாடை போர்த்துகிறார்.
திமுக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்திலும் காலில் விழுவது போல எந்த புகைப்படமும் இடம்பெறவில்லை.
பத்திரிகைச் செய்தி
— DMK (@arivalayam) February 27, 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில்
மக்களவை முன்னாள் உறுப்பினர் இரவீந்திரநாத், Ex.M.P., உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், எம்.எல்.ஏ. மற்றும்… pic.twitter.com/RpqUpOIYff
திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணையும் வீடியோ காட்சிகளையும் தேடிப் பார்த்தோம். சன் நியூஸ் யூட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், தனது ஆதரவாளர்களுடன் வரும் ஓ.பன்னீர்செல்வம், முதலில் ஸ்டாலினின் கையைக் குலுக்கி கட்டித் தழுவுகிறார்.
பின்னர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோருக்கு பூங்கொத்து வழங்கி பொன்னாடை அணிவிக்கிறார். அவருக்கு திமுகவின் கரைவேட்டியை ஸ்டாலின் அளித்தார். பின்னர் அங்கு திமுக உறுப்பினர் அட்டையில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திடும் காட்சிகளை காண முடிந்தது.
தந்தி, சத்தியம், நியூஸ் 18 தமிழ்நாடு வீடியோக்கள் வாயிலாகவும் இதனை உறுதி செய்தோம்.
வைரல் புகைப்படத்தை கூர்ந்து கவனித்தபோது, அதில் ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் இருவரின் முகத்திலும் வேறுபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தோம். இதனால் அது போலியாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் TeluguPost உண்மை கண்டறியும் குழுவுக்கு ஏற்பட்டது. இதனால் வைரல் புகைப்படத்தை Hive Moderation ஏஐ சரிபார்ப்பு தளத்தில் உள்ளிட்டோம். அதில், வைரல் புகைப்படம் 99.8 சதவீதம் போலியாக, ஏஐ மூலம் தயாரிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக முடிவைத் தந்தது.
இந்த ஆதாரங்கள் மூலம் வைரலாகும் புகைப்படம் போலியானது என தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
முடிவு
திமுகவில் இணைந்த பிறகு ஸ்டாலின் காலில் பன்னீர்செல்வம் விழுந்ததாக போலிப் புகைப்படம் தவறான தகவலுடன் வைரலாகி வருகிறது. உண்மையில் அது ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படமாகும். ஆகவே, செய்திகளை வெளியிடும்போது அதன் உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

