திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு என பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு என பரவும் நியூஸ் கார்டு போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டது.

Claim :
திமுக தொகுதிப் பங்கீடு பட்டியல் என பரவும் நியூஸ் கார்டுFact :
வைரல் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, போலியானது
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 2025 ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் சூடுபிடித்துள்ளன. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. மற்ற கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச ஆயத்தமாக உள்ளன. குறிப்பாக திமுகவிடம் இந்தமுறை கூடுதல் தொகுதிகள் கேட்க கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பரவும் தகவல்
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பட்டியல் என ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் திமுக 184 தொகுதிகளில் போட்டி எனவும், காங்கிரஸ் - 15, விசிக - 10,மக்கள் நீதி மய்யம் - 10 மதிமுக -3,கம்யூனிஸ்டுகள் தலா 3ல் போட்டி என அதில் பட்டியல் இடம்பெற்றிருந்தது.
@MVPR96 என்ற எக்ஸ் பக்கத்தில், “அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு வெளியான நிலையில் திமுக கூட்டணி கட்சிகளின் உத்தேச கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றியான செய்தி வந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பதிவு 1, பதிவு 2, பதிவு 3 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் வைரல் நியூஸ் கார்டு பகிரப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் நியூஸ் கார்டின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது எடிட் செய்யப்பட்டு பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலில் வைரல் நியூஸ் கார்டில் டிசம்பர் 23, 2025 என தேதி இடம்பெற்றிருந்ததால் சன் நியூஸின் சமூக வலைதளப் பக்கங்களில் ஸ்கேன் செய்தோம். அதில், அப்படியான எந்த நியூஸ் கார்டும் வெளியிடப்படவில்லை என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது. வைரல் நியூஸ் கார்டை கூர்மையாக ஆய்வுசெய்த போது அதில் எடிட் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைக் காண முடிந்தது.
இதனையடுத்து, வைரல் நியூஸ் கார்டை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தியபோது, வைரல் நியூஸ் கார்டை ஒத்துள்ள நியூஸ் கார்டை சன் நியூஸ் வெளியிட்டுள்ளதை கண்டறிந்தோம். அது 2021ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் நமது தேடலில் இதே தொகுதி எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் தினத்தந்தி இணையதளம் மார்ச் 9, 2021 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதன்மூலம் ஒரிஜினல் நியூஸ் கார்டில் திமுகவுக்கு 174 தொகுதிகள் என்றிருந்ததை 184 என மாற்றியதோடு, மற்ற கட்சிகளின் தொகுதிப் பட்டியலையும் மாற்றி, மநீமவை கூடுதலாக சேர்த்துள்ளனர் என்பதை கண்டறிந்தோம். இதுதொடர்பாக சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு உதவி ஆசிரியர் தினேஷை தொடர்புகொண்டபோது, வைரல் நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்றும், தங்கள் நியூஸ் கார்டை எடிட் செய்து போலியாக உலாவவிட்டுள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளனர்.
அதே சமயம் திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதா என கூகுளில் தேடினோம். அதில் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அமைத்துள்ளது குறித்த செய்தி தந்தி டிவியில் இடம்பெற்றிருந்தது.
இந்த ஆதாரங்கள் வாயிலாக வைரல் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, சன் நியூஸ் பெயரில் போலியாக பரவி வருகிறது என்பது உறுதிசெய்யப்பட்டது.
முடிவு
திமுக தொகுதிப் பங்கீடு என சமூக வலைதளங்களில் பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையையே இன்னும் தொடங்கவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

