கோயிலில் அசைவம் சாப்பிட்டதை அமைச்சர் சேகர்பாபு நியாயப்படுத்தினாரா?
திருவண்ணாமலை கோயிலில் பசியின் காரணமாக அசைவம் சாப்பிட்டனர் என அமைச்சர் சேகர்பாபு கூறியதாக பரவும் கார்டு போலியானது.

Claim :
கோயிலில் அசைவம் சாப்பிட்டதை நியாயப்படுத்திய அமைச்சர் சேகர்பாபுFact :
சேகர்பாபு கருத்து தெரிவித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது. அப்படியான கருத்தை அவர் தெரிவிக்கவில்லை.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி அண்ணாமலையார் கோயில் உட் பிரகாரத்தில் ஒரு தம்பதி அசைவ உணவு சாப்பிடுவதை பார்த்த இளைஞர் ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்தார்.
இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட, உடனடியாக அங்கு சென்ற அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி முட்டை பிரியாணியும், சிக்கன் கிரேவியும் வாங்கி வந்து அங்கு சாப்பிட்டது தெரியவந்தது. கோயிலுக்கு அருகே தாங்கள் வேலை பார்ப்பதாகவும், தெரியாமல் கோயிலுக்குள் அசைவம் சாப்பிட்டுவிட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், காவல் துறை விசாரணை நடத்தியது.
பரவும் தகவல்
இந்த நிலையில் பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அதனை நியாயப்படுத்தியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. மேலும், அதில், “சங்கிகள் கண்ணப்ப நாயினாரின் வரலாறை படிக்கவும்” என்று அமைச்சர் குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டது.
Mahipriya Mahi என்ற பேஸ்புக் பயனர், “ஆலயத்தை விட்டு வெளியேறுங்கடா. இந்து அறநிலையத்துறை இனி தேவை இல்லை” என்ற கேப்ஷனோடு வைரல் நியூஸ் கார்டை பகிர்ந்திருந்தார்.
Kavitha Umamaheswaren (Archive) என்ற பேஸ்புக் பயனரும் இதே கருத்துடன் வைரல் கார்டை ஷேர் செய்திருந்தார். மேலும், இணைப்பு 1, இணைப்பு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் இதே நியூஸ் கார்டு வைரலானது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் நியூஸ் கார்டின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு நடத்திய விசாரணையில், அது போலியானது என்பது தெரியவந்தது.
முதலில் நியூஸ் கார்டு சன் நியூஸ் பெயரில் ஜூன் 13 தேதியிட்டு வெளியாகி இருந்ததால் அதன் சமூக வலைதளப் பக்கங்களில் முழுவதுமாக ஆய்வு செய்தோம். அப்படியான எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை என்பதை உறுதி செய்தோம்.இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அப்படியான எந்த அறிக்கையாவது வெளியிட்டாரா என்பது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தேடினோம். ஆனால், அவர் அப்படி எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதை TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு தெரிந்துகொண்டது.
மேலும் உறுதிப்படுத்துதலுக்காக வைரல் நியூஸ் கார்டை சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி தினேஷ் குமாருக்கு அனுப்பி வைத்தோம். அதனை தாங்கள் வெளியிடவில்லை என்றும், தங்கள் நிறுவனம் பெயரில் போலியான நியூஸ் கார்டு தயாரிக்கப்பட்டு பகிரப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் உறுதிப்படுத்துதலுக்காக திருவண்ணாமலை அசைவ உணவு விவகாரம் சர்ச்சையான நிலையில், அதுகுறித்து சேகர்பாபு ஊடகங்களுக்கு ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்பது குறித்து கூகுளில் சர்ச் செய்தோம். புதிய தலைமுறை ஜூன் 13ஆம் தேதி வெளியிட்ட அமைச்சரின் விளக்கம் குறித்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
அதில், “அசைவ உணவை கோயிலுக்கு கொண்டு வரும் சூழல் உருவாவதை இறைபக்தி உள்ளவர்கள் தாங்களாகவே தவிர்க்க வேண்டும். அசைவ உணவு கொண்டு வந்திருப்பதை கண்டுபிடித்து உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். அசைவம் சாப்பிட்டோர் மீது புகாரும் அளிக்கப்பட்டு உள்ளது. சட்டப்படி ஆராய்ந்து அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இனி வரும் காலங்களில் பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளையும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம். இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க அறநிலையத் துறை சார்பில் அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது. திருக்கோயிலுக்குள் மாமிச உணவை அனுமதிக்காதது கோயில் கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளிப் பிரகாரங்களில் தனியாருக்கு சொந்தமான இடங்கள் இருக்கும். இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கோயிலில் அசைவ உணவு சாப்பிட்டதை சேகர்பாபு நியாயப்படுத்தவில்லை என்பது, அதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாது என்ற ரீதியில்தான் பேட்டி அளித்துள்ளார் என்பதையும் TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
திருவண்ணாமலை கோயிலில் பசியால் அசைவம் சாப்பிட்டுவிட்டனர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது. சேகர்பாபு இப்படியான எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.