பாதை அமைக்க பெருமாள் கோவில் சுற்றுச்சுவரை அரசு இடித்து மோசடியா? உண்மை என்ன !
பள்ளிகரணையில் பெருமாள் கோவில் சுற்று சுவரை இடித்து பாதை அமைக்கும் பணியில் 40 ஏக்கர் நிலம் அபகரிப்பு !

Claim :
பள்ளிகரணையில் பெருமாள் கோவில் சுற்று சுவரை இடித்து பாதை அமைக்கும் பணியில் 40 ஏக்கர் நிலம் அபகரிப்பு !Fact :
2022 ஆம் ஆண்டு நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பற்றி பரவிய காணொளி. இது முற்றிலுமாக திரிக்கப்பட்ட ஒரு வதந்தியாகும்
Factcheck: 2022 ஆம் ஆண்டில் கோவில் வளாகத்தில் இரு தரப்பினர்கிடையே நடந்த மோதலை அரசு அதிகாரிகள் வன்முறையில் ஈடுபட்டதாக தவறாக செய்தி பரப்பப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிகரணை பகுதியில் இருக்கின்ற பெருமாள் கோவிலின் சுற்றியுள்ள மதில் சுவரை இடித்துப் புதிய பாதை அமைக்கும் பணியின் வழியாக திமுக தலைவரின் 40 ஏக்கர் நிலத்திற்கு செல்ல வழி ஏற்படுத்தவே கோவில் சொத்து சூறையாடப்படுகிறது என்ற செய்தி இணைய தளங்களில் பரவி வருகிறது. இதுபோன்று கோவில் நிலங்கள் பரிபோனால் இந்து தெய்வங்களுக்கு கோவில்களே இல்லாமல் போய்விடும் என்ற கருத்துக்கும் இதற்கூடவே சேர்ந்து பகிரப்படுகிறது.
அண்மையில் பள்ளிக்கரணையில் உள்ள திமுக தலைவரின் 40 ஏக்கர் நிலத்திற்குச் செல்வதற்காகப் பெருமாள் கோவில் சுற்றுச் சுவர் இடிக்கப்படுவதாக காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது.
இச்செய்தியினை பலரும் தங்கள் சமூக ஊடகப்பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அப்பதிவுகளின் விவரங்கள் அடங்கிய இணைப்பினை இங்கே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு :
தெலுங்கு போஸ்ட் உண்மை சரிபார்ப்பு குழு மக்கள் மத்தியில் மத ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் இப்பதிவினை தகவலாய்வு செய்தது. முதலில் கூகுள் தேடலில் முக்கிய வார்த்தைகளை கொண்டு தேடியபோது, கடந்த 2022ம் ஆண்டே இந்த தகவல் பரவியுள்ளதை காண முடிந்தது.
சென்ற 2022 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் இந்த காணொளியினை குறித்து குமுதம் தனது முகநூல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகக் கூறி கோவிலை அரசு இடிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கோவிலை இடிப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுடன் இணைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதில் உள்ளது.
நமக்கு காணொளியில் உள்ள சம்பவம் குறித்துத் தேடியதில், அக்கோவில் தனியாரால் நிர்வாகம் செய்து வரும் நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் என்பதும், அந்த வாக்குவாதம் கோவில் சீரமைப்பு பணியின் போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூகுள் லென்ஸ் ஊடான தேடலில் அறிய முடிந்தது.
இச்சம்பவம் தெளிவாக நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 2022ம் ஆண்டு நடந்தது என்பது உறுதியாகிறது. இக்கோவில் ’அர்த்தநாரீஸ்வரர் ஆலய பக்த சமாஜம்’ என்னும் அறக்கட்டளை மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. இக்கோவிலுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கோ, தமிழ்நாடு அரசுக்கோ எந்த தொடர்பும் இல்லை.
அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு அருகில் பனச்சியம்மன் கோவில் குளம் உள்ளது. மழை காரணமாகக் குளம் நிரம்பி அர்த்தநாரீஸ்வரர் கோவிலுள்ளே நீர் வந்துள்ளது. இதனைச் சரி செய்யும் விதமாகக் கோவில் நிர்வாகம் இந்த புனரமைப்பு பணியினை மேற்கொண்டுள்ளது.
இதில் இரு தரப்பினருக்குள்ளே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழக அரசுக்கு அவபெயர் ஏற்படுத்த விதமாக இந்து கோவில்களை இடிக்கின்றனர் எனப் புகைப்படங்கள் பரப்பப்பட்டது. இது முற்றிலும் தவறானது..
இவற்றில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் கோவில் தனியாரால் நிர்வகிப்பதும் அது இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை என்பதும் அறிய முடிகிறது. மேலும் இந்த இடம் புறம்போக்கு இடம் என்பதால் அரசு கோவிலை இடித்ததாகக் குமுதம் வெளியிட்ட செய்தியும் தவறானது.
மேற்கொண்டு பள்ளிக்கரணை கோவில் குறித்தும் தேடினோம். பள்ளிக்கரணை லட்சுமி நாராயண பெருமாள் கோவில் நிர்வாகம் அனுமதியின்றி சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதாகவும், திமுக தலைவரின் நிலத்திற்குச் செல்லவே சுற்று சுவர் இடித்து வழித்தடம் அமைக்கப்படுவதாகவும் 2022 நவம்பர் மாதம் செய்திகள் பரவியுள்ளது.
அப்போதே இது பற்றி பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், “பள்ளிக்கரணை அணை ஏரி நிரம்பினால், உபரி நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து, பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற போக்கு கால்வாய் அமைக்கப்படுகிறது.
ஏரியில் இருந்து ஆதிமூலம் நகர் சாலை வழியாக கால்வாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால், ஏரியை அடுத்துள்ள தனியார் பட்டா நிலம் மற்றும் கோவில் நிலத்தின் வழியாக போக்கு கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஆய்வில், இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி மனு அனுப்பப்பட்டது. கோவிலுக்கு தரைவாடகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரனை ஏரிக்கரை அருகில் உள்ள பட்டா நிலத்தின் உரிமையாளரிடமும் அனுமதி பெறப்பட்டுவிட்டது” எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது உரிய அனுமதி பெற்ற பிறகுதான் பொதுப்பணித்துறை பணியினை மேற்கொண்டுள்ளது.
இப்படி வெவ்வேறு சம்பவத்தையும் காணொளியாக சேர்த்துப் பொய் செய்திகள் திரிக்கப்பட் டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது.
முடிவு : பள்ளிக்கரணை லட்சுமி நாராயணன் கோவில் மற்றும் நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் குறித்துப் பரப்பப்படும் செய்திகள் உண்மை அல்ல. அக்காணொளி இரண்டு ஆண்டுகள் முன்பே வெளியான பழைய காட்சி. மக்களை குறிப்பாக பக்தர்களை உணர்ச்சிவசபடச் செய்யும் இக்காணொளிகளை உண்மை நோக்கம் அறியாமல் பகிரக் கூடாது என தெலுங்கு போஸ்ட் குழு வலியுறுத்துகிறது.